சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்'என்ற நூலின் வெளியீட்டு விழா அம்பேத்கர் நினைவு தினமான டிசம்பர் 6 ஆம் தேதி நடைபெற்றது.
இந்த நூல் வெளியீட்டு விழாவில் த.வெ.க தலைவர் விஜய், வி.சி.க துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா, அம்பேத்கரின் பேரன் ஆனந்த் டெம்டும்டே, முன்னாள் நீதிபதி சந்துரு மற்றும் விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் சீனிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முன்னதாக இந்த விழாவில் வி.சி.க தலைவர் திருமாவளவன் பங்கேற்பதாக இருந்த நிலையில், இறுதியில் பங்கேற்க முடியாதது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.
அதில், “இவர்களில் பெரும்பாலோர், திமுக கூட்டணியை உடைக்க வேண்டுமென்கிற செயல் திட்டத்தோடு நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமும் ஏதேதோ பிதற்றிக் கொண்டிருப்பவர்கள்” என்று கூறியுள்ளார்.
(2/4)
— Thol. Thirumavalavan (@thirumaofficial) December 6, 2024
"திமுகவைத் தனது அரசியல் எதிரி என வெளிப்படையாகப் பேசியும், 'திராவிட முன்மாதிரி அரசு' என்பதைக் கடுமையாக விமர்சித்தும் தனது மாநாட்டில் உரையாற்றியுள்ள விஜய் அவர்களோடு, உங்கள் கூட்டணியிலுள்ள திருமாவளவன் ஒரே மேடையில் ஏறப் போகிறார் பாருங்கள் " -என திமுக தொண்டர்களுக்குச் செய்தி… pic.twitter.com/HMQVYLjwJb
விழா மேடையில் த.வெ.க தலைவர் விஜய்
மேடையில் பேசிய விஜய், மணிப்பூரில் தொடங்கி வேங்கைவயல் சம்பவம் வரை சுட்டிக்காட்டி மத்திய(பா.ஜ.க) மற்றும் மாநில(தி.மு.க) அரசுகளை பற்றி நேரடியாக விமர்சித்துள்ளார். விக்கிரவாண்டியில் நடைபெற்ற த.வெ.க முதல் மாநில மாநாட்டிலும் அக்கட்சியின் தலைவர் விஜய் இதுபோன்று நேரடியாக பா.ஜ.க, தி.மு.க மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குறித்து விமர்சனம் செய்து இருந்தது குறிப்பிடத்தக்கது. சம்பிரதாயத்திற்காக சிலர் சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதாகவும் மழைநீரில் நின்று புகைப்படம் எடுப்பதாகவும் விமர்சித்துள்ளார்.
மேலும் பேசிய விஜய், “ மக்கள் உணர்வுகளை மதிக்க தெரியாமல், மக்களுக்கு அடிப்படை சமூக நீதியான பாதுகாப்புகளை உறுதி செய்யாமல், கூட்டணி கணக்குகளை மட்டுமே நம்பி இருமாப்புடன் 200 வெல்வோம் என்று எகத்தால முழக்கமிடும் மக்கள் விரோத ஆட்சியாளர்களுக்கு என் மக்களோடு இணைந்து நான் விடுக்கும் எச்சரிக்கை நீங்க உங்களோட சுய நலனுக்காக பாதுகாத்து வரும் கூட்டணி கணக்குகள் அனைத்தும் 2026யில் மக்களே மைனஸ் ஆக்கி விடுவார்கள்” என்றும் பேசியுள்ளார்.
சர்ச்சை பேச்சுக்கு உள்ளான விஜய் ?
துணை முதலமைச்சர் உதயநிதி: விஜய் பங்கேற்ற விழா குறித்து உங்கள் கருத்து என்னவென்று உதயநிதியிடம் செய்தியாளர் கேட்டதற்கு, “ நான் சினிமா செய்திகளை பார்ப்பது இல்லை” என்று நகைச்சுவையாக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிலளித்துள்ளார்.
எம்.பி.,கனிமொழி: ”இந்தத் தேர்தல் வெற்றி உங்கள் கரங்களிலே இருக்கிறது என்று பணியாற்றினால் வெற்றி நிச்சயம். தளபதி சொல்வது போல நிச்சயம் ஆக நானும் செல்கிறேன் 200 தொகுதிகள் வெற்றி நிச்சயம்” என்றும் மணிப்பூரையும் தமிழ்நாட்டையும் ஒப்பிடுவது என்பது, அரசியலில் மேடையேறி விட்டால் என்ன வேண்டுமானாலும் பேசலாம் என்பதுபோல் உள்ளது. பா.ஜ.க மணிப்பூருக்கு சென்று நியாயம் வழங்காமல் இருப்பதை விட இது மோசமானது" என்று த.வெ.க தலைவர் விஜய்க்கு தி.மு.க எம்.பி கனிமொழி பதில் அளித்துள்ளார்.
அமைச்சர் சேகர்பாபு: ”2026 சட்டமன்றத் தேர்தலில் 200 என்ற நம்பிக்கை வீணாகும் என சிலர் அதி மேதாவிகளாக தற்குறிகளாக களத்திற்கே வராதவர்கள் பேசுகிறார்கள் எங்களுடைய நிலைப்பாடு சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் திராவிட முன்னேற்ற கழகமே கைப்பற்றும், வில்லில் இருந்து புறப்பட்ட அம்பாக செயல்படுவோம்” என்று சேகர் பாபு தெரிவித்துள்ளார்.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி: ” விஜய் மக்களுக்காக கட்சி ஆரம்பிக்கவில்லை. அவர் திரையுலகில் மைனஸ் ஆக இருந்ததால் தான் அரசியலுக்கு வந்திருக்கிறார். அவர் அரசியலிலும் மைனஸ் ஆகிவிடுவார். திமுக கூட்டணி உறுதியாக உள்ளது. அதில் யாருக்கும் எந்த சந்தேகமும் வரவேண்டாம். எங்களுடைய கூட்டணியை எந்த சக்தியாலும் அழிக்கவே முடியாது” எனவும் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்தார்.
ரகுபதி: ”அரசியலில் எந்த பிளஸும் மைனஸ் ஆக வாய்ப்பு இல்லை. ப்ளஸ் மைனஸ் என்ற கணக்கெல்லாம் அரசியலில் செல்லுபடி ஆகாது” என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
டிடிவி தினகரன்: ”பாதிக்கப்பட்ட மக்களுக்காக தோளோடு தோல் நிற்பதோ? வெல்ல பாதிப்புகளை பார்வையிட செல்வதோ? எந்த விதத்தில் தவறு அது எப்படி சம்பிரதாயமாக இருக்க முடியும். அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் என்று எல்லாக் கட்சிகளும் சொல்வதைப் போல்தான் திமுகவும் எங்கள் கூட்டணி வெற்றி பெறும் என்று கூறியுள்ளது. இதில் அகம்பாவம், ஆணவம் இருப்பதாக தெரியவில்லை. திமுகவை ஆதரித்துப் பேசுகிறேன் என்று எடுத்துக் கொள்ளாதீர்கள். எதார்த்தத்தைப் சொல்கிறேன்” என்று டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
விழாவிற்கு வராத விசிக தலைவர்...விஜய் சொன்ன வார்த்தை,
விழா மேடையில் வி.சி.க தலைவர் திருமாவளவன் குறித்துப் பேசிய விஜய்,"வி.சி.க தலைவர் திருமாவளவனால் இன்றைக்கு நிகழ்ச்சியில் பங்கேற்காமல் போனது. அம்பேத்கர் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொள்ள முடியாத அளவுக்கு அவருக்குக் கூட்டணிக் கட்சிகள் சார்ந்து எவ்வளவு அழுத்தம் இருக்கும் என்று எனக்கு நன்றாகத் தெரிகிறது. அதை என்னால் நன்றாக யூகிக்க முடிகிறது" என்றார்.
இதற்கு பதில் அளித்துள்ள திருமாவளவன், ”விஜய்யின் குற்றச்சாட்டில் எந்த விதத்திலும் உண்மை இல்லை, யாருடைய அழுத்தத்திற்கும் பணிந்து முடிவெடுக்க இயலாமல், தேங்கி நிற்கின்ற நிலையில் திருமாவளவன் இல்லை அந்த அளவுக்கு நானும் விடுதலை சிறுத்தைகளுக்கு பலவீனமாக இல்லை” என்றும் “விஜய்யின் மனது மேடையில் இல்லாமல் என்னை நோக்கியே இருந்துள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.
"விசிக தலைவர் திருமாவளவன் விரிவாக அறிக்கை கொடுத்ததற்கு பிறகும் விஜய் எங்கள் தலைவரைப் பற்றிப் பேசியதைப் பார்த்தால் அவர் கட்சி ஆரம்பித்திருப்பதே விசிகவோடு எப்படியாவது கூட்டணி சேர்ந்துவிட வேண்டும் என்பதற்காகத்தானோ என எண்ணத் தோன்றுகிறது. தன்னம்பிக்கையோடு கட்சி ஆரம்பித்திருந்தால் இப்படி வலிந்து வலிந்து அழைப்பு விடுக்கும் நிலை ஏற்பட்டிருக்காது” என்று விசிக எம்.பி. ரவிக்குமார் கூறியுள்ளார்.
கட்சி தொடங்கிய பின் விஜய் பங்கேற்ற முதல் பொது நிகழ்ச்சி இந்த புத்தக வெளியீட்டு விழா தான். இந்நிலையில் இந்த நூல் வெளியீட்டு விழாவில் விஜய் என்ன பேச போகிறார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
இப்படியாக நடந்து முடிந்த இந்த நூல் வெளியீட்டு விழாவில் த.வெ.க தலைவர் விஜய், சமூக நீதி, தமிழக அரசியல், கூட்டணி நெருக்கடி என விக்கிரவாண்டியில் நடைபெற்ற த.வெ.க முதல் மாநில மாநாட்டில் பேசியதை போலவே அனைத்தையும் அழுத்தமாக பேசியுள்ளார். இதற்கு பின் அரசியல் களத்திலும் 2026 சட்டமன்ற தேர்தலிலும் நடக்கும் நிகழ்வுகளையும் பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.