தமிழ்நாட்டில் பெரும்பாலான பகுதிகளுக்கு மழை பொழியும் என்றும் சென்னை உட்பட பல பகுதிகளில் இரவு நேரங்களில் மழை கொட்ட வாய்ப்பு உள்ளதாக தமிழ்நாடு வெதர்மேன் அலர்ட் செய்துள்ளார்.
ஜூலை மாதம் தொடங்கியதில் இருந்து தமிழகத்தின் பெரும்பாலன பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. தமிழக அணைகளிலும் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. விவசாயிகள் ஆடிப்பட்டம் விவசாயம் செய்ய மகிழ்ச்சியுடன் தயாராகி வருகின்றனர். மேலும், தமிழகத்தில் வரும் நாட்களிலும் மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் பகுதிகளில் பகல் நெரத்தில் நல்ல வெப்பம் நிலவும் என்றும் மாலை நேரங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகத் தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தனது பேஸ்புக் பக்கத்தில், “இன்று பிரகாசமான வெயில் அதிகம் இருக்கும் நாள்.. பகலில் ஓவர் வெயில் என்றால் மாலை மற்றும் இரவு நேரத்தில் சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் என்ன நடக்கும் என நான் தனியாகச் சொல்ல எதுவும் இல்லை.. உங்களுக்கே தெரியும்.
தமிழகத்திற்குப் பல பகுதிகளில் இடியுடன் மழை பெய்யப் போகும் நாளாக இன்று இருக்கப் போகிறது. கேடிசிசி (காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு), வேலூர், ராணிப்பேட்டை- திருவண்ணாமலை மாவட்டங்களிலும் சேலம் - நாமக்கல் - ஈரோடு மாவட்டங்களிலும் கொடைக்கானல்- மதுரை- சிவகங்கை- புதுக்கோட்டை பகுதிகள், டெல்டா மாவட்டங்களில் நல்ல மழைக்கு வாய்ப்பு உள்ளது, நீலகிரி (தேவாலா- பந்தலூர்- கூடலூர்- அவலஞ்ச் பெல்ட்), வால்பாறையில் பருவ மழை தொடரும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.
மேலும், “கபினி அணையின் உபரி நீர் மேட்டூருக்கு வருகிறது, மீண்டும் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால், கர்நாடகாவில் காவிரி அணைகளுக்கு வரும் நீர் வரத்து அதிகரிக்கும்” என்று தமிழ்நாடு வெதர்மேன் ஜான் பிரதீப் முகநூலில் பதிவிட்டுள்ளார்.
அதே போல, சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில், “மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று ஜூலை 12, 13 தேதிகளில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மற்றும் மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி மற்றும் கோயம்புத்தூர், திருப்பூர் தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூலை 14 முதல் 17 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மாலை / இரவு வேளையில், இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 34° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 - 27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்” என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.