சென்னை அண்ணாநகரில் உள்ள கோபுர பூங்கா, நகரின் பழமையான இடங்களில் ஒன்றாகும். இங்கு அமைக்கப்பட்டிருக்கும் 135 அடி உயர கோபுரம், அண்ணாநகரில் முக்கிய அடையாளமாக திகழ்ந்து வருகிறது.
அண்ணாநகரில் இந்த பூங்காவை, 1968ஆம் ஆண்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அன்றைய முதல்வர் அண்ணாதுரை திறந்துவைத்தார்.

இந்நிலையில், காதல் தோல்வி அடைந்த ஒருசில காதல் ஜோடிகள் இந்த கோபுரத்தின் மேல் இருந்து குதித்து தற்கொலை செய்யும் சம்பவங்கள் அதிகரித்து வந்தது. இதனால் 2011ஆம் ஆண்டில் இருந்து இந்த கோபுரத்தின் மேல் செல்ல பொதுமக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த பூங்காவை நவீன பாதுகாப்பு அம்சங்களுடன் சீரமைக்க சென்னை மாநகராட்சிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அதை ஏற்று, சென்னை மாநகராட்சி ரூ.30 லட்சம் ஒதுக்கீட்டுடன் சீரமைக்கப்பட்டு வந்தது. டவரின் பக்கவாட்டு பகுதிகளில் தடுப்பு கம்பிகள் மற்றும் இரும்பு வேலிகள் ஆகியவை பொதுமக்களின் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்டுள்ளது.

அண்ணா நகர் பூங்காவில் கோபுரம் அமைக்கப்பட்டிருப்பதுடன், அங்கங்கே நீரூற்றுகள், பொதுமக்கள் உடற்பயிற்சி செய்வதற்கான இடங்கள், நடைபாதைகள், அமர்ந்து பேச நீண்ட இருக்கைகள், ஸ்கேட்டிங் பயில ட்ராக் வசதி, சிறுவர்கள் விளையாடும் பூங்கா மற்றும் இந்த கோடைகாலத்தில் மக்கள் உள்ளே நுழையும்போதே வெயிலை மறக்கும்வண்ணம் அமைந்திருக்கும் மரங்களின் நிழல்கள் ஆகியவை அங்கு காணலாம்.
டவர் பூங்காவின் சீரமைப்பு பணிகள் முடிவு பெற்றநிலையில், மார்ச் 20ஆம் தேதியான (திங்கட்கிழமை) நேற்று மாலை 5 மணியளவில், கோபுரம் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு சென்னை மாநகராட்சி திறந்து வைத்தது. இந்த நிகழ்வுக்கு நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு திறந்துவைத்தார்.
கோபுரத்தின் உச்சி பக்கவாட்டு பகுதியில் பாரம்பரிய ஓவியங்களும், பசுமையை சித்தரிக்கும் வண்ணங்களும் தீட்டப்பட்டு உள்ளது. தினமும் சராசரியாக 3000 மக்கள் இங்கு வருகைத் தருகிறார்கள்.
கடந்த 2006ஆம் ஆண்டு காலங்களில், அண்ணா நகர் பூங்காவில் உள்ள கோபுரத்தின் மேலே ஏறிச்சென்று சென்னை மாநகரைக் காண இரண்டு ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்பட்டு வந்தது.

தற்போது ரூ.10 கட்டணமாக மாற்ற திட்டமிடப்படுகிறது. டவரின் மேல் அரை மணி நேரத்திற்கு ரூ.10 என்றும், அதைவிட கூடுதல் நேரம் இருந்தால் கட்டணம் இரட்டிப்பாக வசூலிக்கப்படும் என்றும் திட்டமிடப்பட்டுள்ளது.
இதைப்பற்றி, மாநகராட்சியின் அனுமதிக்காக அனுப்பப்பட்டு உள்ளது, அதுவரை பொதுமக்கள் இலவசமாக பார்வையிடலாம் என்று கூறப்படுகிறது.
நேற்று பூங்காவில் உள்ள கோபுரம் திறந்து வைத்ததை அடுத்து, பொதுமக்கள் இன்று காலை முதல் ஆர்வத்துடன் கண்டு மகிழ்கின்றனர்.
மேலும், பார்வையிட வந்த அண்ணாநகரைச் சேர்ந்த தீபா, “எங்கள் வீடு பூங்காவிற்கு அருகில் இருப்பதால், தினமும் காலையில் நடைப்பயிற்சிக்காக நாங்கள் வருவது வழக்கம். நேற்று டவர் திறப்புவிழா நடைபெற்றதால், இன்று டவர் மேல் இருந்து எங்கள் வீடு தெரிகிறதா என்று பார்க்க வந்திருக்கிறோம். இவ்வளவு உயரத்தில் நின்று சென்னையை பார்ப்பது புது அனுபவத்தை கொடுக்கிறது.
நாங்கள் 12 வருடங்களாக இங்கு வசித்து வருகிறோம். அப்பொழுதே டவர் மேல் ஏறும் அனுமதி மறுக்கப்பட்டு இருந்தது. அதற்கு முன், இங்கு வரும் அனுமதி வழங்கப்பட்டு வந்தது என்பதை பலர் சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம். டவரின் மேல் முதன்முதலில் வந்து கவனிப்பது புது அனுபவத்தை கொடுக்கிறது”, என்று தன் குடும்பத்துடன் வருகைதந்த தீபா கூறியுள்ளார்.

இதையடுத்து, கல்லூரி மாணவன் சிவா கூறியதாவது, “பூங்காவின் கோபுரத்தை சுற்றி அமைக்கப்பட்டுள்ள நீரூற்றுகள், நடைபாதைகள் புதுமைப்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
ஆனால், பூங்காவின் நுழைவாயிலில் அமைக்கப்பட்டிருக்கும் நீரூற்று பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதுபோன்று ஒருசில இடங்கள் பராமரிப்பு இன்றி இருப்பதை மாநகராட்சி கருத்தில் கொள்ளவேண்டும்”, என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil