Chennai Book Fair 2020 : சென்னையில் கடந்த 9ம் தேதி துவங்கிய சென்னை புத்தக கண்காட்சி ஜனவரி 21ம் தேதி நிறைவுற்றது. 13 நாட்களில் மொத்தமாக 13 லட்சம் நபர்கள் வந்து பார்வையிட்டுள்ளனர். எதுவாக இருந்தாலும் ஆன்லைனில் வாங்கிவிடலாம், ஆர்டர் செய்தால் கையில் கிடைத்துவிடும் என்று ஒரு ரகம், பி.டி.எஃப். இருந்தால் போதும் புக்கெல்லாம் முடியாது என்று மற்றொரு ரகம், கிண்டில் இருக்கிறது ஏன் தேவையில்லாமல் புத்தகம் வாங்க வேண்டும் என்று மற்றொரு ரகம். ஆனாலும் நாள் ஒன்றுக்கு சராசரியாக 1 லட்சம் நபர்கள் பார்வையிட்டுள்ளனர்.
இந்த வருடம் கூடுதலாக கீழடி ’மாதிரி’ வடிவமைக்கப்பட்டு கீழடி அகழ்வாய்வில் இருந்து பெறப்பட்டப் பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டது. கீழடி தொடர்பாக பல மொழிகளில் அச்சிடப்பட்ட புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டது. இந்த நிகழ்வினை 9ம் தேதியன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி துவங்கி வைத்தார். 21ம் தேதி துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் நிறைவுரையாற்றினார்.
சென்னை, நந்தனம், ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நடைபெற்ற 43வது புத்தக கண்காட்சியை பபாசி வழங்கியது. மொத்தமாக 800 அரங்குகளில் 1 கோடிக்கும் மேலாக புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டது. ரூ. 20 கோடி மதிப்பில் புத்தகங்கள் விற்று தீர்ந்துள்ளது. ஆனாலும் எந்த புத்தகம் அதிகமாக விற்கப்பட்டது. எந்த பதிப்பகத்தாரின் புத்தகங்கள் அதிக அளவில் விற்கப்பட்டது என்பது தொடர்பான தகவல்கள் ஏதும் இன்னும் முழுமையாக கிடைக்கவில்லை என்கிறார் பபாசி செயலாளர் எஸ்.கே. முருகன். கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 20% அதிகமாக இம்முறை பொதுமக்கள் இந்த புத்தக திருவிழாவிற்கு வருகை புரிந்துள்ளனர்.
மக்களின் கருத்து என்ன?
9ம் தேதி இரவில் தான் பெரும்பான்மையான புத்தகங்கள் கொண்டு வரப்பட்டு அடுக்கிக் கொண்டிருந்தனர். முறையாக அனைத்தும் ஏற்பாடு செய்த பிறகு புத்தக கண்காட்சியை துவங்கியிருக்கலாம் என்று பலரும் தங்களின் கருத்துகளை பதிவு செய்தனர்.
சில கடைகளுக்கு எஃப் (F series) சீரிஸில் எண்கள் கொடுக்கப்பட்டிருந்தது. சில கடைகளுக்கு சாதாரண எண் வரிசைகள் கொடுக்கப்பட்டிருந்தது. அதனால் மக்களுக்கு எந்த இடத்தில் எந்த கடை இருக்கிறது என்பதில் பெரிய குழப்பமே நிலவியது. “20 வருடங்களுக்கும் மேலாக நான் வந்து கொண்டிருக்கின்றேன். ஆனால் இது போன்ற ஒரு குழப்பான புத்தக கண்காட்சியை நான் என் வாழ்நாளில் பார்த்ததே இல்லை” என்று கூறினார் மகப்பேறு மருத்துவரான சாந்தி.
காதுகள் நூலுக்காக சாகித்ய அகாதெமி விருது வாங்கிய எழுத்தாளர் எம்.வி வெங்கட்ராமின் பேத்தியான சாந்தியின் கணவரும் ஒரு மருத்துவர். “பபாசியின் இணைய தளத்தினை அவர்கள் அப்டேட் செய்திருக்க வேண்டும். எந்தெந்த புத்தகங்கள் எங்கே விற்பனைக்கு கிடைக்கும். யார் அந்த பதிப்பகத்தினர் என்பதையும் அவர்கள் தெரியப்படுத்திருக்க வேண்டும். புதிதாக வந்திருப்பவர்களுக்கு இந்த எண் முறையும், அப்டேட் செய்யப்படாத வெப்சைட்டும் பெரிய கவலையை அளிக்கிறது” என்று தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்திருந்தார்.
“ஒவ்வொரு பதிப்பகத்தாரின் உரிமைகளை காப்பாற்றி அவர்களை பாதுகாக்கும் பொறுப்பினை பபாசி கொண்டிருக்கிறது. ஆனால் ஒரு தனிநபருக்கு எதிராக அவர்களே வழக்கினை பதிவு செய்வார்கள் என்பதை நான் எதிர்பார்க்கவே இல்லை. ஒரு சமயத்தில் நான் இந்த புத்தகத் திருவிழா மீது வைத்திருந்த மரியாதையை இழந்துவிடுவேனோ என்றும் யோசிக்க துவங்கினேன்” என்றும் அவர் கூறியிருந்தார்.
சகித்ய அகாதெமி விருது வாங்கிய எழுத்தாளர் தி.க.சிவசங்கரன் பிள்ளையின் தம்பி பேத்திகள் இருவர் சென்னை புத்தக திருவிழா குறித்து தங்களின் கருத்துகளை பதிவு செய்திருந்தனர். அதில் “மெட்ரோ அல்லது பேருந்து நிலையத்தில் இருந்து புத்தக கண்காட்சி வர விரும்பும் நபர்களுக்காக ஆட்டோக்கள் ஏதாவது ஏற்பாடு செய்திருக்கலாம். குழந்தைகளுக்கான புத்தக பிரிவினை மேலும் அதிகபடுத்தியிருந்திருக்கலாம்” என்று கூறினார் இளைய பேத்தியான தங்க லீலா சுப்ரமணியன்.
“ஒரே சாலையில் இருசக்கர வாகனங்கள், நான்கு சக்கர வாகனங்கள், பொதுமக்கள், போவதும் வருவதும் சற்று தொய்வினையையும் அயர்ச்சியையும் உருவாக்குகிறது. கூட்ட நெரிசலில் ஒருவரை ஒருவர் முண்டிக்கொண்டு செல்லும் நிலை உருவாகிறது. எண்ட்ரி, எக்ஸிட் என இரண்டுக்கும் தனித்தனியாக வழி இருந்திருந்தால் பிரச்சனை ஏதும் இல்லாமல் இருந்திருக்கும் ” என்றார் மற்றொரு பேத்தியான பவானி ராம்.
“கடந்த ஆண்டு, நுழைவாயிலின் முன்பே அந்த பகுதியில் எத்தனை பதிப்பகத்தாரின் அரங்குகள் உள்ளது என்பதை ஒட்டியிருந்தார்கள். ஆனால் இந்த முறை அது மிஸ்ஸிங். ஒவ்வொரு முறையும் வெளியே வந்து டிஜிட்டல் போர்டினை பார்த்து செல்வது கடினமாக இருக்கிறது. அரங்குகள் குறித்து அவர்கள் கொடுக்கும் பேம்ப்லெட்டை பார்த்தால் குழப்பம் நிவர்த்தியாகாமல் அதிகமானது தான் மிச்சம்” என்றார் ஊடகவியலாளர் திரு.
பார்க்கிங் லாட் பிரச்சனைகள்
உள்ளே நுழையும் போது முறையாக எண்ட்ரி பாஸ் வாங்கிவிட்டு உள்ளே வந்துவிடுகின்றோம். இருந்தாலும் ஒவ்வொரு 20 அடிக்கும் ஒருத்தர் நின்று கொண்டு டிக்கெட் இருக்கிறதா, டிக்கெட் காட்டுங்கள், என்று திரும்ப திரும்ப கேட்பது ஒரு வகையில் எரிச்சலை உருவாக்குகிறது என்று கூறுகின்றனர்.
துப்புரவுத் தொழிலாளர்களையும் கொஞ்சம் கவனிக்கலாம்!
தினம் தினம் சேகாரமாகும் குப்பைகளை சுத்தம் செய்து, மிகவும் சிறப்பான முறையில் புத்தக கண்காட்சியை நடக்க உதவி செய்தவர்கள் துப்புரவுத் தொழிலாளர்கள் தான். அவர்களுக்காக அறை ஏதேனும் அமைத்து கொடுத்திருக்கலாம். மக்கள் வந்து செல்லும் வழியில் பகல் நேரங்களில் குழந்தைகளுடன் தூங்கிக் கொண்டிருந்தது கொஞ்சம் மன வருத்தத்தை உருவாக்கியது. அவர்களுக்காக அடுத்த முறை கேண்டீன் ஏதேனும் இலவசமாக ஏற்பாடு செய்து கொடுங்கள் பபாசி. மதிய உணவுக்காக பதிப்பகத்தார்களிடம் டோக்கன்களை வாங்கும் போது நெஞ்சம் ஏனோ வலிக்கிறது.
கழிப்பறை செல்லும் வழியெங்கும் தண்ணீர் தேங்கி நிற்பது மிக மிக மோசமான உணர்வினை அளித்தது. குழந்தைகள், பெரியவர்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் என லட்சக்கணக்கானோர் வருகை புரியும் இடத்தில் கழிப்பறைகளுக்கும் கொஞ்சம் கூடுதல் கவனம் கொடுங்கள்!
மேலும் படிக்க : பார்க்கும் போதே பரவசம்… ஒவ்வொரு காட்சியிலும் சிலிர்ப்பினை தரும் வைல்ட் கர்நாடக!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.