Chennai city Tamil News: மனித கழிவுகளை மனிதர்களே அகற்றும் அவலம் பல நாடுகளில் ஒழிக்கப்பட்டுள்ள நிலையில், நாடு சுதந்திரம் அடைந்து 74 ஆண்டுகள் ஆகியும் இன்னும் தொடர்கிறது. கடந்த 1993ம் ஆண்டு மனித கழிவுகளை மனிதர்கள் அப்புறப்படுத்த, மத்திய அரசு தடை விதித்தது. அந்த தடையை 2013ம் ஆண்டில் மீண்டும் வலுப்படுத்தியது. மேலும், இது தொடர்பான விழிப்புணர்வை, போர்கால அடிப்படையில், விளிம்பு நிலை மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் எனவும் அறிவுறுத்தியது. ஆனால், அதுபற்றிய எந்த விழிப்புணர்வும், இன்று வரை பெரிய அளவில் ஏற்படுத்தப் படவில்லை.
கழிவு நீர் தொட்டி அடைப்பு, மழை நீர் வடிகால் போன்றவற்றில் ஏற்படும் அடைப்புகளுக்கு, இயந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என்றும் மத்திய அரசின் அந்த அறிவிப்பில் உத்தரவிடப் பட்டது. ஆனால், இத்தகைய வேலைகளில், துப்புரவு தொழிலாளர்களே அதிகளவில், முறைகேடாக ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர்.
நாடு முழுவதும் சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்யும் போது ஒவ்வொரு ஐந்து நாட்களுக்கும் ஒருவர் உயிரை இழக்கிறார் என சஃபாய் கரம்சாரிஸ் தேசிய ஆணையத்தின் (NCSK) 2018 அறிக்கை தெரிவிக்கிறது. கடந்த 2011ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 1.8 லட்சத்திற்கு அதிகமானோர் இந்த வேலை தொடர்ந்து செய்து வருவதாகவும், தற்போது அதிகாரப்பூர்வ எண்ணிக்கை இல்லை எனவும் சஃபாய் கரம்சாரிஸ் ஆணையம் குறிப்பிட்டுள்ளது.
மனித கழிவுகள், சாக்கடைகள் மற்றும் கழிவுநீர் தொட்டிகளை சுத்தம் செய்ய இயந்திரமயமாக்கப்பட்ட அமைப்புகளை சில மாநிலங்கள் தற்போதுதான் பயன்படுத்த முயற்சி எடுத்து வருகின்றன. ஆனால், அவை இன்னும் நாடு முழுதும் செயல்படுத்தப்படவில்லை. சமீபத்தில் டெல்லி அரசு கழிவுநீரை சுத்தம் செய்ய 200 இயந்திரமயமாக்கப்பட்ட அமைப்புகளை அறிமுகப்படுத்தியது. அவை ஒவ்வொன்றும் ரூபாய் 40 லட்சத்திற்கு வழங்கப்பட்டது.
இந்நிலையில், மனித கழிவுகளை அகற்றும் புதிய ரோபோ ஒன்றை சென்னை ஐஐடி மாணவர்கள் கண்டுபிடித்து அசத்தியுள்ளார். இந்த புதிய ரோபோ குறித்தும், அதன் செயல்பாடுகள் குறித்தும் 'தி இந்திய எக்ஸ்பிரஸ் தமிழ்' யூடியூப் தளத்திற்கு அளித்த பேட்டியில் சோலினோஸ் நிறுவனத்தின் பொறியாளர்கள் பவேஷ் மற்றும் சிவ சுப்பிரமணியம் விளக்கியுள்ளனர்.
இதேபோல் தண்ணீர் குழாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகள், கசிவுகள் போன்றவற்றை கண்டுபிடிக்க "என்டோபோட்" என்ற ரோபோ ஒன்றையும் சோலினோஸ் நிறுவனத்தினர் கண்டுபிடித்துள்ளனர். அதன் செயல்பாடு குறித்து பொறியாளர் பார்த்தசாரதி என்பவர் நமக்கு விளக்கமளித்து இருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.