IE Tamil Exclusive: உலகெங்கும் உள்ள மக்களை வியந்து திரும்பி பார்க்க வைத்த சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி, இந்தியாவிற்கு பெரும் புகழை அளித்துள்ளது.
சென்னையில் நடைபெறும் இந்த சர்வதேச செஸ் ஒலிம்பியாட், குறுகிய காலத்தில் திட்டமிட்டு நடத்தப்படுவதனால் தமிழக அரசின் அர்ப்பணிப்பு மற்ற மாநிலங்களுக்கு உதாரணமாக மாறியிருக்கிறது.

அப்படிப்பட்ட இந்த ஒலிம்பியாட்டிற்காக, பல்வேறு விதமான விளம்பரங்கள் வெளிவந்தன. நேப்பியர் பாலத்தை சதுரங்க பலகைப் போல வர்ணம் பூசியதிலிருந்து, இசை ஜாம்பவானான ஏ.ஆர்.ரகுமான் இப்போட்டிக்காக பிரத்யேகமாக பாடல் இசையமைத்தது, சென்னை முழுவதும் ‘தம்பி’ (செஸ் ஒலிம்பியாட்டின் இலச்சி உருவப்படம்) சிலையாகவும் பதாகையாகவும் விளம்பரப்படுத்துவது, சமூக வலைத்தளங்களில் இத்தகவல்களையும் போட்டியின் நேரடி ஒளிபரப்பையும் வெளியிடுவது போன்ற பல்வேறு முயற்சிகள் மக்களின் ஆர்வத்தை தூண்டுகிறது.
Also Read: A brown knight in a veshti, here’s how Chess Olympiad’s mascot ‘Thambi’ was created

இதில் செஸ் ஒலிம்பியாட்டின் சின்னமான ‘தம்பி’, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதிலும் ‘அவர்கள் வீட்டு தம்பியாகவே’ மாறிவிட்டது என்றால் மிகையாகாது.
செஸ் விளையாட்டின் முக்கிய உறுப்பான குதிரையை, நம் மக்களுக்கு ஏற்றவாறு வடிவமைத்தது சர்வதேச அளவில் பெரும் பாராட்டுகளை பெற்றுக் கொடுத்துள்ளது.
சென்னை முழுவதும் 10 அடி உயரத்தில் வைக்கப்பட்டிருக்கும் தம்பியின் சிலை, அவ்விடங்களை சுற்றுலாத் தளத்தைப் போல மாற்றுகிறது.

இச்சிலையை வடிவமைத்த வி.தியாகராஜன் தனது பயணத்தை இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழிடம் கூறியபோது:
“கடந்த 25 வருடங்களாக நான் சிற்பி மற்றும் கலை இயக்குனராக பணியாற்றுகிறேன். என் தந்தை திரைப்படங்களுக்கு மேடை அமைப்பது போன்ற பணிகள் செய்துவந்தார். கலைஞர் கருணாநிதியின் குறவஞ்சி, தங்கப் பதுமை, பாதாள பைரவி, கர்ணன் ஆகிய படங்களில் பணியாற்றிருக்கிறார். தமிழ் படங்களில் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளிவந்த படங்களிலும் செட் அமைத்திருக்கிறார். என் தந்தையுடன் சேர்ந்து சுமார் ஆயிரம் படங்களின் பணியாற்றி இருக்கிறேன்.
எம்.ஜி.ஆரின் ‘உலகம் சுற்றும் வாலிபன்’ படத்தில் இடம்பெறும் புத்தர் கோவில் செட், என் மேற்பார்வையில் முழுவதுமாக கட்டமைத்தேன். அதற்கு பெரும் வரவேற்பு கிடைத்தது.
சிற்பக்கலை கற்ற பயணம் பற்றி:
இது எங்கள் பாரம்பரிய குடும்ப வேலை ஆகும். நாங்கள் தஞ்சாவூரைச் சேர்ந்தவர்கள், சென்னையில் குடியேறினோம்.
என் தந்தை (கே.ஜி.வேலுசாமி) சிற்பியாக பணியாற்றினார். சிறுவயதிலிருந்தே, அவருடன் இணைந்து அவருடைய தொழில் நுணுக்கங்களை கற்றுக்கொண்டேன். ஒருவரை சிலையாக மாற்றுவதற்கு, அவரின் முகத்தின் அசலை எப்படி கொண்டுவருவது போன்ற நுணுக்கங்களை கற்றுக்கொண்டேன். ஹாலிவுட் தற்போது செய்துவரும் தயாரிப்புகளை, அப்போதே நாங்கள் பயின்று வந்தோம்.

என்னுடைய சகோதரன் கலை இயக்குனராக 300 படங்களில் பணியாற்றினார். வளரும் பருவத்தில், ஓவியமும் சிற்பக்கலையும் பயின்றேன்.
அப்பாவுடன் இணைந்து 25 வெண்கலச் சிலைகளை வடித்துள்ளேன். அதில், என்.டி.ஆர்., ஸ்ரீ ஸ்ரீ முள்ளார், ராம் சமுஜ் சௌத்ரி, யர்ரபிரகட ஆகிய சிலைகளும் அதற்குள் அடங்கும்.
தமிழ்நாடு அரசுடன் இணைந்து செய்த பணிகள்:
அப்பாவுடன் இணைந்து பணியாற்றும் பொழுதிலிருந்தே தமிழக அரசின் பல திட்டங்களில் பணியாற்றிருக்கிறோம்.
டெல்லியில் நடைபெறும் ‘சர்வதேச பொருட்காட்சியில்’, தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் பாண்டிச்சேரி சார்பாக 25 வருடங்களாக பங்குபெற்று வருகிறேன். 150 தொழிலாளர்கள் கொண்ட எங்கள் குழுவுடன் நாங்கள் பல பிரமிக்கத்தக்க படைப்புகளை அங்கு சமர்பித்திருக்கிறோம். வள்ளுவர் கோட்டம், பூம்புகார், சார் மினார், அமராவதி ஸ்துபம், காகதீய கேட், வராங்கள் ஆகியவற்றின் நகலை அங்கு படைத்துள்ளோம். இப்படைப்புகளினால், டெல்லியில் என் பெயர் பிரபலமடைந்தது.

குடியரசு தின விழாவில் ஊர்வலம் ஊர்திகள் சமர்பிப்பதில், தமிழ்நாடு சார்பாகவும் ஆந்திரா சார்பாகவும் எட்டு முறை பரிசு பெற்றிருக்கிறோம். இந்தாண்டு நடைபெற்ற விழாவில், சுதந்திரத்திற்கு பாடுபட்ட வீரர்களின் சிலைகளைக் கொண்ட ஊர்தி சமர்பித்தோம். அது மக்களின் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. குறுகிய காலத்தில் அத்தனை சிலைகளை சமர்பித்தோம். தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினினால் வெகு சிறப்பாக பாராட்டப்பட்டது.
கலைஞர் ஆட்சி காலத்தில், ஐம்பதாவது ஆண்டு விழாவில் அந்தமான் சிறையின் நகல் வடிவமைத்தேன். என் படைப்புகளை கவனித்த அவர், திருநெல்வேலி மாநாட்டில் பூம்புகார் நகலை 150 அடிக்கு செய்துகொடுக்க சொன்னார். அதன்பிறகு, விழுப்புரம் மற்றும் விருதுநகர் மாநாட்டிலும் என் படைப்புகளை செய்துகொடுத்தேன்.

செஸ் ஒலிம்பியாடின் ‘தம்பி’ சிலை:
தற்போது உலகம் போற்றும் செஸ் ஒலிம்பியாடை சென்னையில் ஒருங்கிணைப்பது தமிழ்நாட்டிற்கே பெருமை அளிக்கிறது. அதற்கான தயாரிப்புகளின் ஒரு பங்காக ‘தம்பி’ உருவச்சிலையை வடிவமைத்ததில் எங்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி.

இரண்டு விதமான ‘தம்பி’ சிலைகளை நாங்கள் உருவாக்கிக் கொடுத்தோம். ஒரு வகை சிலைகள், கை கூப்பி நிற்பது போன்றும் மற்றொரு வகை ‘தம்பி’ தன் வேஷ்டியை மடித்து கட்டுவது போன்றும் உருவாக்கியுள்ளோம்.
‘தம்பி’ சிலையுடன், செஸ் காய்களையும் 10 அடி உயரத்திற்கு வடிவமைத்து சமர்பித்துள்ளோம். மேலும், ‘தம்பியின் குடும்பம்’ என நான்கு உருவச்சிலைகளை உழைப்பாளர்கள் சிலை அருகிலும் ரிப்பன் கட்டிடம் அருகிலும் வைத்துள்ளோம். அவை பார்வையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெறுகிறது.

இதுமட்டுமல்லாமல், சதுரங்க ஆட்டத்திற்கு தேவைப்படும் ராஜா, ராணி, பிஷப் போன்ற காய்களையும் 15 அடி உயர சிலைகளாக உருவாக்கியுள்ளோம்.
25ற்கும் மேல் ‘தம்பியின்’ சிலைகள், சென்னையின் முக்கியமான இடங்களில் வைக்கப்பட்டிருக்கிறது. சிலைகளை பொறுத்தும்பொழுதே மக்கள் ஆர்வமாக வந்து சிலையுடன் செல்பீ எடுத்துக்கொண்டனர். ‘தம்பி’ சிலை சிறுவர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது.
இச்சிலைகளை செய்வதற்கு 15 நாட்களே அவகாசம் அளிக்கப்பட்டது. 60 தொழிலாளர்களை கொண்ட எங்கள் குழு, இரவு பகல் பார்க்காமல் எல்லாச் சிலைகளையும் செய்து கொடுத்தோம்”, இவ்வாறு தியாகராஜன் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil