சென்னையில அவன் அவன் தண்ணி இல்லாம கஷ்டப்பட்டு இருக்கான், இதுல நீங்கவேற பெருவெள்ளம், சிறுவெள்ளம்னு காமெடி பண்ணிக்கிட்டு என்று நீங்க சொல்வது எங்களுக்கும் கேட்குது... 2015ம் ஆண்டில நடந்தத போல, சென்னை பெருவெள்ளம் போன்றதொரு பாதிப்பு இனியும் நிகழ்வது அரிது என்பதைத்தான் இங்க நாங்க சொல்ல வர்றோம்.....
2015ம் ஆண்டு சென்னையில் ஏற்பட்ட பெருவெள்ளம் நிகழ்வு, பலகோடி மதிப்பிலான பொருட்சேதத்தை விளைவித்ததோடு மட்டுமல்லாது, எண்ணற்ற உயிர்களையும் பலிவாங்கியது. இந்த நிகழ்வு, இந்தியா மட்டுமல்லாது சர்வதேச அளவிலும் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த வெள்ளத்தில் சிக்கி ஆயிரக்கணக்கானோர் தங்கள் வீடு, பிரிட்ஜ் உள்ளிட்ட பொருட்களை இழந்தனர். மீண்டும் அதுபோன்ற பாதிப்புகள் ஏற்படாமல் இருக்க தமிழக அரசு, மத்திய அரசிடம் வைத்த வேண்டுகோளிற்கிணங்க, ரூ. 3 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதற்காக, உலக வங்கியின் உதவியை மத்திய அரசு நாட உள்ளது.
சென்னை பெருவெள்ளம் சம்பவத்தில், கிரேட்டர் சென்னையின் பலபகுதிகள் மற்றும் காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களின் ஊரகப்பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. அதுபோன்ற பாதிப்புகள் மீண்டும் நிகழாவண்ணம் இருக்க, ரூ. 3 ஆயிரம் கோடி மதிப்பிலான வெள்ள தணிப்பு திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் அல்லாது கடலோர மாவட்டங்களான கடலூர், ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களிலும் வெள்ளநிகழ்வுகளினால் ஏற்படும் பாதிப்புகளை கருத்தில் கொண்டு முழுமையான அறிக்கையை வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தயாரித்து உலக வங்கியின் கடனுதவிக்காக சமர்ப்பித்துள்ளது.
பாலாறு, ஆரணியாறு மற்றும் கொசஸ்தலை ஆறுகளின் தண்ணீர்தேக்க அளவை 4.76 ஆயிரம் மில்லியன் கனஅடி அளவிற்கு தேக்கி, அதனை குடிநீராக பயன்படுத்துதல், வறட்சி காலங்களில் இந்த தண்ணீரை பயன்படுத்திக்கொள்ள நீர் மேலாண்மை துறை ஆலோசனை வழங்கியுள்ளது.
ரூ. 80 கோடி மதிப்பீட்டில், அடையாறு மற்றும் கோவளம் ஆறுகளின் ஆழத்தை அதிகமாக்குதல், இதுமட்டுமல்லாது, ஆதனூர், சோமமங்கலம் மற்றும் வரதராஜபுரம் ஆற்றின் கரையோரம் வசிப்பவர்களுக்கு பாதிப்பு ஏற்படாதவகையில் அங்கு நீர்தேக்க வசதிகளை ஏற்படுத்துதல். தென்சென்னை பகுதியில் உள்ள நாராயணபுரம் மற்றும் கோவிலம்பாக்கம் நீர்நிலைகளின் ஆழத்தை அதிகப்படுத்தி அதிகப்படியான நீர் தேக்குதலை உறுதிப்படுத்துதல்.
காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள நீர்நிலைகளின் மீது வெள்ளத்தடுப்பு சுவர்களை அமைத்தல். நீர்நிலைகள் நிறையும்போது உபரிநீர் மக்கள் குடியிருப்பு பகுதிகளில் செல்லாதவாறு தடுப்பணைகள் அமைத்தல். அடையாறு ஆற்றின் உபரிநீரை தேக்கும் வகையில், இரும்புலியூர் மற்றும் பீர்க்கங்கரணை பகுதிகளில் தடுப்பணைகள் அமைத்தல்.
இதுபோன்ற செயல்திட்டங்களை அடுத்த ஆறு மாதங்களில் நிறைவேற்றி, 2015ம் ல் நிகழ்ந்த சென்னை பெருவெள்ளம் போன்ற நிகழ்வின் பாதிப்புகளை இனியும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும் நடவடிக்கையில், உலகவங்கியின் நிதியுதவியுடன் மத்திய அரசின் அனுமதியுடன், மாநில அரசு இதை மேற்கொள்ள உள்ளது.