எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாக்களுக்கு பள்ளி மாணவர்களை அழைத்துச் செல்ல இடைக்காலத் தடை: உயர்நீதிமன்றம்

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா உட்பட எந்த அரசு விழாக்களுக்கும் பள்ளி மாணவ மாணவிகளை அழைத்துச் செல்ல இடைக்காலத் தடை விதித்து உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசின் சார்பில் நடத்தப்படும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா உட்பட எந்த அரசு விழாக்களுக்கும் பள்ளி மாணவ மாணவிகளை அழைத்துச் செல்ல இடைக்காலத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஜூன் மாதம் முதல், எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா தமிழக அரசின் சார்பில் பிரம்மாண்டமாக நடத்தப்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல பகுதிகளில் இந்த நூற்றாண்டு விழாக்கள் நடைபெற்று வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உள்ளிட்ட பலரும் இந்த விழாக்களில் தவறாமல் கலந்து கொள்கின்றனர்.

இந்நிலையில், இந்த விழாக்களுக்கு பள்ளி மாணவ, மாணவிகள் கட்டாயப்படுத்தப்பட்டு அழைத்துச் செல்வதாக ‘மாற்றம் இந்தியா’ அமைப்பின் தலைவர் பாடம் நாராயணன் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அவர் தாக்கல் செய்திருந்த மனுவில், “பள்ளி கல்வி சாராத விழாக்களுக்கு பள்ளி மாணவ, மாணவிகள் கட்டாயப்படுத்தப்பட்டு அழைத்துச் செல்லப்படுகின்றனர். இது போன்று அரசு சம்பந்தமான விழாக்களுக்கோ அல்லது பள்ளி தொடர்பு இல்லாத வெளி விழாக்களுக்கோ மாணவர்களை அழைத்துச் செல்வதற்கு விதிமுறைகள் வகுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டு இருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் வைத்தியநாதன் மற்றும் சுப்ரமணியன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது பாடம் நாராயணன் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தங்கள் தரப்பு வாதங்களை எடுத்து வைப்பதற்கு முன்னதாகவே குறுக்கிட்டு பேசிய நீதிபதிகள், ‘உங்களது கோரிக்கை என்னவென்று சொல்லுங்கள். அது சார்பாக உத்தரவிடுகிறோம்’ என்றனர்.

இதையடுத்து, வரும் 30-ஆம் தேதி சேலத்தில் நடைபெறவுள்ள எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவிற்கு பள்ளி மாணவ, மாணவிகள் அழைத்துச் செல்லப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல், இந்த வழக்கு முடியும் வரை, தமிழக அரசின் சார்பில் நடத்தப்படும் எந்த விழாக்களுக்கும் மாணவர்களை அழைத்துச் செல்ல தடை விதிக்க வேண்டும்” என பாடம் நாராயணன் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், இனி இந்த வழக்கு முடியும் வரை தமிழக அரசின் சார்பில் நடத்தப்படும் விழாக்களுக்கும், பள்ளி சாராத வெளி விழாக்களுக்கும் பள்ளி மாணவ, மாணவிகளை அழைத்துச் செல்ல தடை விதித்து உத்தரவிட்டனர். இது தொடர்பாக தமிழக அரசு விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

மேலும், மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள பிரதான கோரிக்கையான ‘வெளி நிகழ்ச்சிக்கு மாணவர்களை அழைத்துச் செல்லவதற்கு விதிமுறைகள் வகுக்க வேண்டும்’ என்பதற்கும் விளக்கம் அளிக்கமாறும் தமிழக அரசுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chennai hc ban to send school students for mgr centenary function

Next Story
டிஎன்பிஎஸ்சி புதிய உறுப்பினர்கள் நியமனத்தை ரத்து செய்க: ராமதாஸ்ramadoss
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com