/tamil-ie/media/media_files/uploads/2017/09/z204.jpg)
சாலை பாதுகாப்பு மற்றும் விபத்து தடுப்பு குறித்த ஆய்வுக் கூட்டம் சென்னை பல்லவன் இல்லத்தில் அண்மையில் நடந்தது. அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர், சாலை விதிமீறல்களை குறைக்கும் முயற்சியாக, வருகிற செப்டம்பர் மாதம் 1-ம் தேதி முதல் அசல் ஓட்டுனர் உரிமம் கையில் இருக்க வேண்டும் என்றார். இதுதொடர்பாக அரசாணையும் வெளியிடப்பட்டது.
இதனை எதிர்த்து சமூக ஆர்வலர் டிராஃபிக் சாமி மற்றும் லாரி உரிமையாளர்கள் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதில், லாரி உரிமையாளர்கள் தொடர்ந்து வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
வழக்கை விசாரித்த நீதிமன்றம், "வரும் புதன்கிழமை முதல் (செப்டம்பர் 6) தமிழகத்தில் வாகன ஓட்டுனர்கள் அசல் ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும்" என உத்தரவிட்டுள்ளது. மேலும், 'அசல் ஓட்டுநர் உரிமத்தை தொலைக்காமல் வைத்திருக்க வேண்டியது மக்களின் பொறுப்பு' என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
அதேபோல், ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்களின் வாகனங்களை பதிவு செய்யக் கூடாது என்ற தமிழக அரசின் உத்தரவும் அமலில் உள்ளது.
முன்னதாக, தனது வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று, டிராஃபிக் ராமசாமி தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி தலைமையிலான முதல் அமர்வு முன்பு முறையிட்டார். ஆனால், அவரது கோரிக்கையை நிராகரித்த நீதிபதிகள், வாகனம் ஓட்டுபவர்கள் கண்டிப்பாக அசல் ஓட்டுநர் உரிமத்தை வைத்திருக்க வேண்டும் என கடந்த மாதம் 29-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.