/tamil-ie/media/media_files/uploads/2017/09/z230.jpg)
அ.தி.மு.க.வின் இரண்டு முக்கிய அணிகளான ஓ.பி.எஸ்., இ.பி.எஸ் அணிகள், நீண்ட இழுபறிக்குப் பிறகு அண்மையில் ஒன்றிணைந்தது. இதையடுத்து, துணை முதல்வராக ஓ. பன்னீர் செல்வம் நியமனம் செய்யப்பட்டார். அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் 21-ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் துணை முதல்வராக பதவியேற்றார். அவருக்கு ஆளுநர் வித்யாசாகர் ராவ் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
துணை முதல்வர் பதவிமட்டுமல்லாமல் நிதி மற்றும் வீட்டு வசதி என இரு இலாகாக்களும் அவருக்கு ஒதுக்கப்பட்டது. இது ஓ.பி.எஸ். ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி இருந்தாலும், இதற்கு மேலும் தாமதம் செய்தால் இதுவும் கிடைக்காமல் போய்விடும் என்பதை ஓ.பி.எஸ். நன்கு உணர்ந்து அணிகள் இணைப்பிற்கு சம்மதம் தெரிவித்தார். இருப்பினும், ஓ.பி.எஸ் தரப்பை திருப்திப்படுத்துவதற்காக, சட்டமன்றம், தேர்தல், கடவுச்சீட்டு ஆகிய இலாகாக்கள் கூடுதலாக ஓ.பி.எஸ்.க்கு ஒதுக்கப்பட்டது.
ஓ.பி.எஸ். கூடாரத்தில் இருந்த மாஃபா பாண்டியராஜனுக்கு தமிழ் வளர்ச்சித்துறை மற்றும் கலாச்சாரத் துறை ஒதுக்கப்பட்டது. ஜெயலலிதா இருந்த போது பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்தவர் பாண்டியராஜன் என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து, டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 19 பேர் ஆளுநரை சந்தித்து, 'முதலமைச்சர் மீது எங்களுக்கு நம்பிக்கை இல்லை. அவரை மாற்றி வேறொரு முதலமைச்சரை தேர்ந்தெடுக்க வேண்டும். முதல்வருக்கு நாங்கள் அளித்த ஆதரவை திரும்பப் பெறுகிறோம்' என்று தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, டிடிவி.தினகரன் அணி எம்.எல்.ஏ.க்கள் பாண்டிச்சேரியில் உள்ள ரிசார்ட் ஒன்றில் முகாமிட்டனர். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி, நம்பிக்கை வாக்கெடுப்புக்கு உத்தரவிடும்படி ஆளுநருக்கு எதிர்க்கட்சிகள் அழுத்தம் கொடுத்து வருகின்றன.
இந்த நிலையில், துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் பதவி ஏற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி வழக்கறிஞர் இளங்கோவன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
அவர் தனது மனுவில், துணை முதல்வராக ஓ.பன்னீர்செல்வத்துக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது என்றும், ஆளுநரின் இந்த நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில், 'இந்த மனு விசாரணைக்கு உகந்தது அல்ல' என கூறி சென்னை உயர் நீதிமன்றம், மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.