பால் விவகாரம்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை

தனியார் நிறுவனங்களின் பால் மாதிரிகளை ஆய்வு செய்ய தமிழக அரசுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தனியார் நிறுவனங்களின் பால் விற்பனை மற்றும் பால் பொருட்கள் உற்பத்தியில் தலையிடவும், பால் மாதிரிகளை ஆய்வு செய்யவும் தமிழக அரசுக்கு இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பால் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக தனியார் பால் நிறுவனங்கள் பல்வேறு ரசாயன பொருள்களை கலப்பதாக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திரபாலாஜி குற்றம்சாட்டினார். குறிப்பாக, தனியார் பால் நிறுவனங்கள் பாலில் ரசாயன பொருள்கள் கலப்பது பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிரடியாக அறிவித்தார். இது பெரும் சர்ச்சையை கிளப்பியது. இது தொடர்பாக பால் நிறுவனங்கள் தொடர்ந்த வழக்கில், ஆதாரமில்லாமல் நேரடியாகவே, மறைமுகாகவோ அமைச்சர் பேச உயர் நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்துள்ளது.

இந்நிலையில், தங்களது டீலர்களிடம் சட்ட விரோதமாக பால் மாதிரிகளை எடுத்து பரிசோதனைக்கு அனுப்புவதாக கூறி ஹட்சன் மற்றும் விஜய் பால் நிறுவனங்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அந்த மனுக்களில் பால் பரிசோதனையை உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் மட்டுமே நடத்த முடியும். மாநில அரசு பரிசோதனை செய்ய முடியாது. எனவே தனியார் பால் நிறுவனங்கள் கொள்முதல், விற்பனை, மற்றும் பால் பொருட்கள் உற்பத்தி போன்ற தங்கள் தொழில் நடவடிக்கைகளில் தலையிட தமிழக அரசுக்கு தடை விதிக்க வேண்டும். பால் மாதிரிகளை எடுத்து சோதிக்க தடைவிதிக்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி துரைசாமி மனுதாக்கல் செய்த இரண்டு நிறுவனங்களின் தொழில் நடவடிக்கைகளில் தலையிடவும், பால் மாதிரிகளை எடுத்து சோதனை நடத்தவும் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார். மேலும், மனு தொடர்பாக 4 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என தமிழக அரசு மற்றும் பால் வளத்துறை அமைச்சருக்கு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

×Close
×Close