டி.டி.வி தினகரன் மற்றும் நடிகர் செந்திலை கைது செய்ய அக்டோபர் 4-ஆம் தேதி வரை தடை விதித்து சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இன்று உத்தரவிட்டுள்ளது.
முன்னதாக, அ.தி.மு.க. அம்மா அணியின் துணை பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், நடிகர் செந்திலுக்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் பதவியை கடந்த ஆகஸ்ட் மாதம் அளித்தார். இந்த பதவியை வகித்து வந்த முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா அந்த பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார்.
இதுதவிர, அ.தி.மு.க. இளம் பெண்கள் பாசறை செயலாளர் பதவியில் இருந்து திருச்சி எம்.பி. குமாரை நீக்கி உத்தரவிட்டார். இது பற்றி கருத்து கூறிய எம்.பி.குமார், “நடிகர் செந்திலுக்கு அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் பதவி கொடுத்தது நகைப்புக்குரியது” என்று கிண்டல் செய்தார்.
இதற்கு பதிலளித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய செந்தில், "கட்சிக்காக ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்தேன். எனக்கு மிகவும் தாமதமாக கட்சி பதவி கிடைத்திருக்கிறது. இதை திருச்சி எம்.பி. குமார் கிண்டல் செய்து இருக்கிறார். என்னை விமர்சனம் செய்ய அவருக்கு தகுதி இல்லை.
அம்மாவை காக்கா பிடித்து எம்.பி. ‘சீட்’ வாங்கியவர் அவர். ஐசரி வேலன் அ.தி.மு.க.வில் சேர்ந்த போதே நானும் கட்சிக்கு வந்து விட்டேன். வரலாறு தெரியாமல் என்னை குமார் குறை கூறுகிறார். பட்டி தொட்டி எல்லாம் பிரசாரம் செய்த என்னைப் பற்றி மக்களுக்கு நன்றாக தெரியும். இந்த குமாரை யாருக்காவது தெரியுமா? மல்லாக்காக படுத்துக்கொண்டு எச்சில் துப்புவது போல குமார் எம்.பி. நடந்து கொண்டிருக்கிறார்" என்றார்.
இந்த நிலையில், 'தினகரனின் தூண்டுதலின் பேரில் நடிகர் செந்தில் எனக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார்' என எம்.பி.குமார் புகார் அளித்திருந்தார். இதைத் தொடர்ந்து, குமாருக்கு பேட்டி மூலம் கொலை மிரட்டல் விடுத்ததாக திருச்சி குற்றப்பிரிவு போலீசார் செந்தில் மீது வழக்குப் பதிவு செய்தனர்.
இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என செந்தில் சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், இந்த வழக்கு தொடர்பாக அக்டோபர் 4-ஆம் தேதி வரை தினகரனையும், செந்திலையும் கைது செய்ய தடை விதித்து உத்தரவிட்டுள்ளது. மேலும், அக்.,4 வரை இந்த வழக்கை விசாரிக்கவும் நீதிமன்றம் தடை விதித்துள்ளது.