தமிழகத்தில் உயிரோடு இருப்பவர்களுக்கு கட்அவுட் , பேனர் வைக்க தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை அரும்பாக்கத்தைச் சேர்ந்த திரிலோக்ஷனா குமாரி என்பவர், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் விதமாக வைக்கப்படும் பேனர்களுக்கு தடைவிதிக்கக் கோரி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு, நீதிபதி வைத்தியநாதன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, போக்குவரத்திற்கு இடையூறாக கட் அவுட் மற்றும் பேனர் வைப்பது கன்காணிக்கப்பட வேண்டும் என நீதிபதி கூறினார்.
மேலும், உயிரோடு இருப்பவர்களுக்கு கட் அவுட், பேனர் வைப்பதற்கு தடை விதித்தும் அவர் உத்தரவிட்டார். 1959-ம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தை அவ்வப்போது திருத்தவும் தமிழக தலைமைச் செயலாளருக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் தனது தீர்ப்பில், "கட்டடங்கள், குடியிருப்பு பகுதிகளில் தேவையில்லாத பேனர்கள், கட் அவுட்கள் வைப்பதை தடுக்க வேண்டும். சுத்தமான சுகாதாரமான சூழ்நிலை நிலவ உள்ளாட்சி அமைப்புகள், போக்குவரத்துக்கு இடையூறாக கட் அவுட், பேனர்கள் வைக்கப்பட்டுள்ளதா என்பதை கண்காணிக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.