ஜெயலலிதா கைரேகை பற்றிய வழக்கில் கைரேகை உண்மைத்தன்மை பற்றி அக்.6-ஆம் தேதி தேர்தல் ஆணைய செயலாளர் ஆஜராகி விளக்கமளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருப்பரங்குன்றம் தொகுதிக்கு கடந்த ஆண்டு இடைத்தேர்தல் நடந்தது. இதில் அதிமுக சார்பில் ஏ.கே.போஸ், திமுக சார்பில் டாக்டர் சரவணன் உட்பட பலர் போட்டியிட்டனர். இதில் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றார்.
தேர்தலில் முறைகேடுகள் செய்ததால் ஏ.கே.போஸ் வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி திமுக வேட்பாளர் டாக்டர் சரவணன், சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார்.
ஏ. கே. போஸ் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுவில் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் கை ரேகை பதிவு செய்யப்பட்டது. அப்போது, ஜெயலலிதா உடல் நலமில்லாமல் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், அவரது கை ரேகை பதிவு விவகாரம் பெரும் சர்ச்சையைத் தமிழகத்தில் ஏற்படுத்தியது.
இந்த வழக்கு, நீதிபதி பி.வேல்முருகன் முன்பு இரு மாதங்களுக்கு முன்னர் விசாரணைக்கு வந்தது. டாக்டர் பி.சரவணன் நேரில் ஆஜராகி சாட்சியம் அளித்தார். அவரிடம் அதிமுக எம்எல்ஏ ஏ.கே.போஸ் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.குமார் குறுக்கு விசாரணை நடத்தினார்.
மேலும், இந்த வழக்கில் தலைமை தேர்தல் அதிகாரி, மாநில தேர்தல் அதிகாரி ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி உத்தரவிட்டார். இவ்விவகாரம் தொடர்பாக உரிய ஆவணங்களுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்க வேண்டும் என்று நீதிபதி வேல்முருகன் உத்தரவிட்டார்.
இதைத் தொடர்ந்து, கடந்த ஆகஸ்ட் 24-ஆம் தேதி இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது, உயர்நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான ராஜேஷ் லக்கானி, ஜெயலலிதா கைரேகை சர்ச்சை தொடர்பாக விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த போது, "ஜெயலலிதா கைரேகை உண்மைத்தன்மை பற்றி அக்.6ல் தேர்தல் ஆணைய செயலாளர் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும்" என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.