துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர் மாஃபாய் பாண்டியராஜன் ஆகியோரின் பதவியை பறிக்க உயர்நீதிமன்றத்தில் தி.மு.க தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டது.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையிலான 11 எம்.எல்.ஏ.க்கள் கடந்த பிப்ரவரி 18-ம் தேதி சட்டமன்றத்தில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களித்தனர். கோவையை சேர்ந்த அருண்குமார் எம்.எல்.ஏ. வாக்கெடுப்பை புறக்கணித்தார். அரசு கொறடா உத்தரவை மீறி வாக்களித்த இவர்களை எம்.எல்.ஏ. பதவியில் இருந்து நீக்க வேண்டும் என திமுக கொறடா அர.சக்கரபாணி தொடர்ந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கிறது.
இதே கோரிக்கையுடன் டிடிவி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்க தமிழ்செல்வன், வெற்றிவேல் உள்ளிட்டோர் தொடர்ந்த வழக்கும் விசாரணைக்கு ஏற்கப்பட்டு, நிலுவையில் இருக்கிறது. இந்தச் சூழலில் அதே காரணங்களுக்காக ஓபிஎஸ், மாஃபாய் பாண்டியராஜன் ஆகியோர் அமைச்சர் பதவியில் தொடரக்கூடாது என இன்னொரு வழக்கை திமுக துணை கொறடா பிச்சாண்டி சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்தார்.
இது தொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது :
கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி சட்டமன்றத்தில் கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பின் போது, அரசு கொறடா ராஜேந்திரனின் உத்தரவை மீறி ஓ.பன்னீர்செல்வம், க.பாண்டியராஜன் உள்ளிட்ட 11 பேர் முதல்வருக்கு எதிராக வாக்களித்தனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென அ.தி.மு.க சட்டமன்ற உறுப்பினர்களான முருகுமாறன், தங்கதமிழ்செல்வன், வெற்றிவேல், பார்த்திபன், ரங்கசாமி ஆகியோர் சபாநாயகரிடம் மனு கொடுத்தனர்.
ஆனால் அந்த மனு மீது சபாநாயகர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் முதல்வர் மீது நம்பிக்கையில்லை என ஆளுநரிடம் மனு கொடுத்த டி.டி.வி.தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 18 பேரை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்துள்ளார்.
கொறடா உத்தரவை மீறி செயல்பட்டதால் அரசியல் அமைப்பு சட்ட விதி 10-ன் படி ஓ.பி.எஸ் மற்றும் மாஃபாய் பாண்டியராஜன் ஆகியோர் எம்.எல்.ஏ என்ற தகுதியை இழந்து விட்டனர். அப்படி இருக்கும்போது, ஓ.பி.எஸ் துணைமுதல்வர் பதவியும், பாண்டியராஜன் அமைச்சர் பதவியும் வகிப்பது சட்டவிரோதமானது.
கொறடா உத்தரவுக்கு எதிராக வாக்களிக்கும்போதே அவர்கள் தகுதியிழந்து விடுகிறார்கள். அல்லது, கொறடா உத்தரவை மீறிய இவர்கள் 2 பேர் மீதும் வாக்களித்த 15 தினங்களுக்குள் மன்னிப்பு அளித்திருக்க வேண்டும். ஆனால் கெறாடா இவர்களை 15 தினங்களுக்குள் மன்னிக்கவும் இல்லை.
இதே போன்ற வழக்கில் உச்சநீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது. அதில் கொறடா உத்தரவை மீறிய போது அவர்கள் தகுதி இழப்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே சபாநாயகர் தனியாக ஒரு தகுதியிழப்பு செய்து உத்தரவு பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை.
கொறடா உத்தரவை மீறியதால் உச்சநீதிமன்ற உத்தரவின் படி தகுதி இழக்கின்றனர். எனவே சட்டமன்ற உறுப்பினராக இல்லாத இருவரும், எந்த தகுதியின் அடிப்படையில் அவர்கள் தற்போது அமைச்சர் பதவி வகிக்கிறார்கள் என்பது குறித்து இருவரும் தன்னிலை விளக்கமளிக்க இருவருக்கும் உத்தரவிட வேண்டும். மேலும் இந்த சட்டவிரோதமான செயலை தடுக்க நீதிமன்றம் தலையிட்டு, அவர்கள் அமைச்சராக செயல்பட தடை விதிக்க வேண்டும்.’ இவ்வாறு பிச்சாண்டி தனது மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ரவிச்சந்திரபாபு முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்ட நீதிபதி, விசாரணையை நவம்பர் 2-ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். தமிழக சட்டமன்ற நம்பிக்கை வாக்கெடுப்பு தொடர்பாக நிலுவையில் இருக்கும் இதர வழக்குகளும் அதே தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டன.
ஓபிஎஸ், மாஃபாய் ஆகியோரின் பதவியை பறிக்க திமுக தொடர்ந்த வழக்கு விசாரணைக்கு ஏற்கப்பட்டிருப்பது, அதிமுக தரப்புக்கு புதிய நெருக்கடியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Chennai high court accepts to hear case against ops mafoi