தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை சட்டப்பேரவைக்கு கொண்டு வந்த விவகாரத்தில் திமுக எம்எல்ஏ-க்கள் மீதான நடவடிக்கைக்கு விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர் நீதிமன்றம் நீட்டித்துள்ளது.
தமிழகத்தில் தடை செய்யப்பட்ட குட்கா விற்பனை செய்ய ரூ.40 கோடி வரை லஞ்சம் கொடுக்கப்பட்டதாக ஆங்கில பத்திரிகை ஒன்றில் அண்மையில் செய்தி வெளி வந்தது. அதில், தங்கு தடையின்றி குட்கா விற்பனைக்கு, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் மற்றும் அமைச்சர்களுக்கு அளிக்கப்பட்ட லஞ்ச விவரங்கள் குறித்து வருமான வரித்துறை தமிழக தலைமைச் செயலாளருக்கு கடிதமாக அனுப்பி வைத்தது என்றும், அது குறித்து விசாரணை நடக்கவில்லை என்றும் கூறப்பட்டிருந்தது.
இந்த செய்தியை சுட்டிக் காட்டிய எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின், அந்தப் புகாரில் சிக்கியுள்ள அமைச்சர் விஜய பாஸ்கர், டிஜிபி, கமிஷனர் உள்ளிட்டோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்றும், அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். மேலும், இந்த விவகாரத்தை சட்டப்பேரவைக் கூட்டத் தொடரில் எழுப்பிய எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வந்தனர். இது தொடர்பாக திமுக எம்எல்ஏ-க்கள் சிலர் திடீரென குட்கா பொட்டலங்களை அவையில் எடுத்துக் காட்டினர். திமுக உறுப்பினர்களின் இந்தச் செயலைக் கண்டித்த சபாநாயகர் தனபால், திமுக எம்எல்ஏ-க்கள் 21 பேருக்கு எதிராக உரிமை மீறல் நடவடிக்கை எடுக்குமாறு உரிமைக்குழுவுக்கு பரிந்துரை செய்தார்.
இதையடுத்து, திமுக எம்எல்ஏ-க்களுக்கு எதிராக கொண்டு வரப்பட்ட உரிமை மீறல் பிரச்னை தொடர்பாக விசாரணை நடத்த அவை உரிமை குழு கூட்டம் தலைமைச் செயலகத்தில் அண்மையில் கூடியது. அதன் முடிவில், திமுக எம்எல்ஏ-க்கள் 21 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, திமுக எம்எல்ஏ-க்கள் தரப்பில் விளக்கமளிக்க கால அவகாசம் கோரப்பட்டது. அதேபோல், உரிமை குழு நோட்டீசை எதிர்த்து ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏ-க்கள் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடரப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதி துரைசாமி முன்னிலையில் கடந்த 7-ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, குட்காவை பேரவைக்கு கொண்டு வரக் கூடாது என பேரவை விதிகளில் இல்லை என திமுக தரப்பில் வாதிடப்பட்டது. பின்னர், வருகிற 14-ம் தேதி (இன்று) வரை திமுக எம்எல்ஏ-க்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என நீதிபதி உத்தரவிட்டு, அன்றைய தினத்துக்கு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தார்.
அதன்படி, இந்த வழக்கின் மீதான விசாரணை சென்னை உயர் நீதிமன்றத்தில் நடைபெற்றது. அப்போது, ஸ்டாலின் உள்பட 21 பேர் மீது நடவடிக்கை எடுக்க விதிக்கப்பட்ட தடையை நீதிமன்றம் நீட்டித்து உத்தரவிட்டது. மறு உத்தரவு வரும்வரை குட்கா விவகாரத்தில் உரிமைக் குழு நடவடிக்கை எடுக்க கூடாது என உத்தரவிட்ட நீதிமன்றம், வழக்கு விசாரணையை வருகிற அக்டோபர் மாதம் 12-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.