சேகர் ரெட்டியின் நிபந்தனை ஜாமீனை மாற்றியமைத்து சென்னை ஹைகோர்ட் உத்தரவு!

தனக்கு விதித்த ஜாமீன் நிபந்தனையை தளர்த்தி சென்னையில் கையெழுத்திட அனுமதிக்கக்கோரி சேகர் ரெட்டி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் கைது செய்யப்பட்டு நிபந்தனை ஜாமின் பெற்ற தொழில் அதிபர் சேகர் ரெட்டியின் ஜாமின் நிபந்தனை மாற்றியமைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்ட விரோதமாக 34 கோடி ரூபாய் அளவுக்கு புதிய 2 ஆயிரம் ரூபாய் நோட்டுக்கள், சுமார் 178 கிலோ தங்கம் மற்றும் பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் சுமார் 148 கோடி ரூபாய் அளவில் பதுக்கியதாக சிபிஐ-யால் கைது செய்யப்பட்ட சேகர் ரெட்டி உள்ளிட்டோர் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கைது செய்யபட்டனர். இந்த வழக்கில் இவர்கள் கடந்த மார்ச் 17  ஜாமீனில் விடுவிக்கபட்டனர்.

பின்னர்  சட்ட விரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ் பதிவான வழக்கில் மத்திய அமலாக்கப் பிரிவால் கடந்த மார்ச் 20ஆம் தேதி சேகர் ரெட்டி, பிரேம்குமார், சீனிவாசலு ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த வழக்கில் இவர்களுக்கு கடந்த மே மாதம் 12 ஆம் தேதி நிபந்தனை ஜாமீன் வழங்கிய உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி டெல்லியிலுள்ள அமலாக்கப் பிரிவு அலுவலகத்தில் மறு உத்தரவு வரும் வரை தினமும் கையெழுத்திட வேண்டுமென உத்தரவிட்டது.

சேகர் ரெட்டியுடன் நிபந்தனை ஜாமீனில் விடுதலையான பிரேம்குமார், சீனிவாசுலு ஆகியோர் ஜாமின் நிபந்தனை தளர்த்தப்பட்டு  சென்னையில் கையெழுத்திட்டு வருகின்றனர்.

இந்நிலையில், தனக்கு விதித்த ஜாமீன் நிபந்தனையை தளர்த்தி சென்னையில் கையெழுத்திட அனுமதிக்கக்கோரி சேகர் ரெட்டி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார்.

 இந்த மனு நீதிபதி எஸ்.பாஸ்கரன் முன் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பின்னர் உத்தரவிட்ட நீதிபதி மறுஉத்தரவு வரும் வரை சென்னையில் உள்ள அமலாக்கப்பிரிவு அலுவலகத்தில் ஒவ்வொரு திங்கட்கிழமையும் பிற்பகல் 2 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும் எனவும், மேலும் விசாரணை தேவை என அதிகாரிகள் கருதும் போது விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டு ஜாமின் நிபந்தனை தளர்த்தி மற்றும் மாற்றியமைத்து உத்தரவிட்டார்.

×Close
×Close