தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க உயர் நீதிமன்ற கிளை உத்தரவு

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டால், பத்தாம் வகுப்பு வரை தமிழ் மொழி கற்பிக்கப்படும்.

navodhaya schools, madurai

தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்க சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கிராமப்புற மாணவர்களுக்கு குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி வழங்க வேண்டும் என்ற நோக்கில் மத்திய அரசால் கடந்த 1986-ஆம் ஆண்டு ஜவஹர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் தொடங்கப்பட்டன. நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் தொடங்க உத்தரவிடக் கோரி, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது.

குமரி மகா சபை செயலர் ஜெயக்குமார் தாமஸ் தாக்கல் செய்த அந்த பொதுநல மனுவில், மத்திய மற்றும் மாநில அரசின் பாடதிட்டங்களை பின்பற்றி தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா, சைனிக், மாநில அரசின் முப்பருவ கல்வி முறை அடிப்படையில் பல்வேறு பள்ளிகள் இயங்கி வருகின்றன. மத்திய அரசின் கல்வி திட்டத்திற்கும், மாநில அரசின் கல்வி திட்டத்திற்கும் வேறுபாடு உள்ளது. கல்விக்காக தனியார் பள்ளிகளில் அதிக அளவு பணம் செலவு செய்ய வேண்டியதுள்ளது. எனவே, குறைந்த கட்டணத்தில் கிராமப்புற மாணவர்கள் படிக்கும் வகையில் செயல்பட்டு வரும் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகளை தொடங்க மாநில அரசு போதிய இடங்களைக் கொடுக்க வேண்டும். ஆனால், மாநில அரசு இந்த பள்ளிகள் தொடங்க ஒத்துழைப்பு வழங்கவில்லை. எனவே தமிழகத்தில் ஜவகர் நவோதயா வித்யாலயா பள்ளிகள் துவங்க உத்தரவிட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.

இந்த வழக்கு மீதான விசாரணை கடந்த மாதம் நடைபெற்ற போது, தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் வேண்டாம் என்பதுதான் தமிழக அரசின் கொள்கை முடிவு என தமிழக அரசு சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். அதேசமயம், பத்தாம் வகுப்பு வரை தமிழை ஒரு பாடமாக கற்பித்தால் நவோதயா பள்ளிகளை தமிழகத்தில் அமைக்க அரசு பரிசீலிக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

இதனையடுத்து, நவோதயா பள்ளிகளில் பத்தாம் வகுப்பு வரை தமிழை கட்டாய பாடமாக கற்பிக்க முடியுமா என மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியிருந்தது.

இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் சசிதரன், சுவாமிநாதன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், இங்கு இருமொழிக்கொள்கை பின்பற்றப்பட்டு வருகிறது. ஆனால் இந்த பள்ளிகள் மூலம் தமிழகத்தில் மும்மொழிக் கொள்கையை திணிக்க மத்திய அரசு முயன்றது. அதனால் தான் இந்த பள்ளிகளை கொண்டு வர மாநில அரசு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என வாதிட்டார்.

தொடர்ந்து, தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டால், பத்தாம் வகுப்பு வரை தமிழ் மொழி கற்பிக்கப்படும். 11,12-ஆம் வகுப்புகளில் மாணவர்கள் தமிழ் மொழியை விருப்பப்பாடமாக தேர்வு செய்யவும் வழிவகை செய்யப்படுகிறது என மத்திய அரசின் தரப்பில் வாதிடப்பட்டது.

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தமிழகத்தில் நவோதயா பள்ளிகள் தொடங்கப்பட்டால், பத்தாம் வகுப்பு வரை தமிழ் மொழி கற்பிக்கப்படும் என எழுத்துப்பூர்வமாக பதில் மனு தாக்கல் செய்ய நவோதயா பள்ளிகள் மண்டல இயக்குனருக்கு உத்தரவிட்டனர்,

மேலும், தமிழக அரசு நவோதயா பள்ளிகளை தொடங்குவதற்கான தடையில்லா சான்றிதழை 8 வாரங்களுக்குள் வழங்க வேண்டும். நவோதயா பள்ளிகள் தொடங்க மாவட்டந்தோறும் நிலம் ஒதுக்கித்தர வேண்டும். நவோதயா பள்ளிகள் அமைக்க தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை அமைத்துத் தர வேண்டும். பள்ளிகளை அமைப்பதற்கு மத்திய அரசுக்கு, தமிழக அரசு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Chennai high court madurai bench allows to start navodhaya schools in tamilnadu

Next Story
ஐசியு.வில் ம.நடராஜன்! சசிகலாவுக்கு பரோல் கிடைக்குமா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com