அதிமுக-வின் இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து வருகிற அக்டோபர் 31-ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்துக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழக முதல்வராகவும், அஇஅதிமுக பொதுச் செயலாளராக இருந்த ஜெயலலிதா கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி மரணம் அடைந்தார். இதனை அடுத்து அஇஅதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டது. ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு முதல்வராகப் இருந்த பன்னீர் செல்வம் தனது பதவியை ராஜினாமா செய்தார். மேலும் கட்சியில் இருந்தும் பன்னீர் செல்வம் நீக்கபட்டார். பின்னர் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றார். பின்னர் பன்னீர் செல்வம் அணியுடன் ஏற்பட்ட உடன்படிக்கையின் படி எடப்பாடி பழனிச்சாமி, பன்னீர் செல்வம் அணியினர் கடந்த மாதம் இணைந்தனர்.
முன்னதாக, ஜெயலலிதா உயிரிழப்பை தொடர்ந்து காலியான ஆர்கே நகர் தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது சசிகலா அணி, பன்னீர்செல்வம் அணி என இரண்டு அணிகள் மட்டுமே செயல்பட்டு வந்தன. அதில், சசிகலா அணியின் தரப்பில் டிடிவி தினகரன் களமிறங்கினார். பன்னீர்செல்வம் அணியின் தரப்பில் மதுசூதனன் களமிறக்கப்பட்டார். இருவரும் அதிமுக சின்னம் மற்றும் கட்சிக்கு உரிமை கோரியதால், அதிமுக சின்னம் மற்றும் கட்சியை தேர்தல் ஆணையம் முடக்கியது. மேலும், அதிமுக அம்மா என்ற பெயரில் சசிகலா அணியும், அதிமுக புரட்சித் தலைவி அம்மா என்ற பெயரில் ஓபிஎஸ் அணியும் செயல்படுமாறு அறிவுறுத்திய தேர்தல் ஆணையம், இடைத்தேர்தலில் தொப்பி மற்றும் இரட்டை மின்விளக்கு என வேறு வேறு சின்னங்களை ஒதுக்கியது.
இதனைத் தொடர்ந்து, அதிமுக கட்சி மற்றும் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரிய இரு தரப்பும், லட்சக்கணக்கில் ஆவணங்களை தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்தனர். இந்த வழக்கு தேர்தல் ஆணையத்தில் நிளிவையில் உள்ளது.
இதனிடையே, வாக்குப்பதிவு நடைபெறுவதற்கு சில நாட்கள் முன்பு பணப்பட்டுவாடா புகார் காரணமாக தேர்தல் ரத்து செய்யப்பட்டது. தொடர்ந்து, இரட்டை இலை சின்னதை மீட்க லஞ்சம் கொடுக்க முயன்றதாக டிடிவி தினகரன் சிறை சென்றார். அதிமுக அம்மா அணி முதல்வர் எடப்பாடி பழனிசாமி கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
இந்நிலையில், ராம்குமார் ஆதித்யன் என்பவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், அதிமுகவின் அதிகாரப்பூர்வ சின்னமாக 45 ஆண்டுகளாக இருந்து வரும் இரட்டை இலையை அக்கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவு காரணமாக தேர்தல் ஆணையம் முடக்கியது. அதிமுக நிர்வாகக் குழு தேர்தல் நடத்தி அதில் வெற்றி பெறும் அணியிடம் இரட்டை இலை சின்னத்தை ஒப்படைக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.
இந்த வழக்கில் இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி தேர்தல் ஆணையத்திடம் மனு அளித்த அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணியைச் சேர்ந்த துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் மதுசூதனன், செம்மலை, அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த வி.கே.சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோர் எதிர் மனுதாரர்களாக சேர்க்கப்பட்டு, அவர்கள் பதில் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டிருந்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் மதுசூதனன், செம்மலை ஆகியோர் சார்பில் மூத்த வழக்கறிஞர் கே.செல்லப்பாண்டியன் ஆஜரானார். வி.கே.சசிகலா, டிடிவி தினகரன் சார்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகவில்லை.
தேர்தல் ஆணைய வழக்கறிஞர் வாதிடும்போது, ‘இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி அதிமுகவின் இரு அணிகளும் தேர்தல் ஆணையத்திடம் ஆவணங்களை தாக்கல் செய்துள்ளன. இது தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது. இரு அணிகள்தான் அவகாசம் கேட்டு வருகின்றன’ என்றார்.
இதையடுத்து, இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரி 2 அணிகளும் அளித்த மனுக்கள் மீது எத்தனை நாளில் முடிவெடுக்கப்படும் என தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கின் மீதான தீர்ப்பு செப்டம்பர் 15-ம் தேதி (இன்று) வழங்கப்படும் என்றார்.
இந்நிலையில், இன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது, இரு தரப்பிலும் மாறிமாறி அவகாசம் கோருவதால் முடிவெடுக்க முடியவில்லை என தேர்தல் ஆணையம் தரப்பில் வாதிடப்பட்டது. இதையடுத்து, இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பது குறித்து வருகிற அக்டோபர் 31-ம் தேதிக்குள் முடிவெடுக்க வேண்டும் என தலைமை தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது. உள்ளாட்சி தேர்தல் நெருங்குவதால், அதனை கருத்தில் கொள்ள வேண்டும் எனவும் தேர்தல் ஆணையத்துக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.