மருத்துவ பட்டமேற்படிப்பில் அரசு மருத்துவர்களுக்கான 50 சதவிகித இடஒதுக்கீட்டை நீதிமன்றம் ரத்து செய்ததை கண்டித்தும், மீண்டும் இடஒதுக்கீடு வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்கக்கோரியும், அரசு மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் நோயாளிகள் கடும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில், மருத்துவர்களின் போராட்டத்தால் நோயாளிகள் பாதிக்கப்படுவதாக வழக்கறிஞர் ஏ.கே.வேலன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பான விசாரணைக்கு தமிழ்நாடு சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆஜரானார். அப்போது, நீதிபதிகள், மருத்துவர்கள் என யாரும் அரசு மருத்துவமனையை அணுகுவதில்லை. மருத்துவர்கள் தொழிலாளர்கள் அல்ல. மக்களால் கடவுளை போல் மதிக்கப்படுபவர்கள். எனவே, நீதிமன்றத்தின் கருத்தை ஏற்று, மருத்துவர்கள் பணிக்குத் திரும்புவார்கள் என நீதிமன்றம் கருத்து தெரிவித்தது.
மேலும், மருத்துவர்களுடன் மீண்டும் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், பேச்சுவார்த்தையில் முடிவு ஏற்படாவிட்டால் எஸ்மா சட்டம் பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்தியதோடு, வழக்கு விசாரணை நாளை நடைபெறும் என்று தெரிவித்தது.
இதைத்தொடர்ந்து பேட்டியளித்த ராதாகிருஷ்ணன், "பாதிப்பின்றி நோயாளிகளுக்கு நடக்கும் மருத்துவ சேவை குறித்து விளக்கம் அளித்துள்ளேன். போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவ மாணவர்கள், பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டுவர நீதிபதிகள் கூறினர். நோயாளிகளுக்கான மருத்துவ சேவை பாதிக்கப்படாது என உறுதியளித்தோம்" என்றார்.