பள்ளிக்கல்வித்துறை செயலாளர் உதயச்சந்திரனை பணியிடமாற்றம் செய்ய தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக் கல்வித் துறை செயலாளராக உதயசந்திரன் பொறுப்பேற்றவுடன் கல்வி கற்றல் சூழலை மேம்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. எனவே, பள்ளிக் கல்விக் கல்வித்துறை சார்ந்த ஏதேனும் ஒரு அறிவிப்புகள் நாள்தோறும் வெளியாகி மாற்றத்தை எதிர்நோக்கி வருகிறது. பொதுத் தேர்வுகளில் தரவரிசை வெளியிடும் முறையை ரத்து செய்துள்ள தமிழக அரசு, மேல்நிலைக் கல்வியில் பாடத்திட்ட மாற்றம் மற்றும் தேர்ச்சி முறை மாற்றம் உள்ளிட்ட சீர்திருத்தங்களையும் அறிவித்துள்ளது. குறிப்பாக, தமிழ் நாடு மாநில கல்வி திட்டம், பாடத்திட்டம், பாடநூல் எழுதும் பணிகள் அசுர வேகத்தில் நடைபெற்று வருகிறது.
அடுத்த மூன்றாண்டுகளில் அனைத்து வகுப்புகளுக்கும் கட்டாயமாக பாடத்திட்டம் மாற்றி அமைக்கப்படும். சிபிஎஸ்இ பாடத்திட்டத்தைவிட, தமிழக அரசின் பாடத்திட்டம் தரமானதாக இருக்கும் என்றும் தமிழக அரசு அறிவித்திருக்கிறது.
பள்ளி கல்வித்துறையில் மேற்கொள்ளப்படும் சீர்திருத்தங்களுக்கு முக்கிய காரணமாக அறியப்படுபவர் உதயச்சந்திரன். இந்நிநிலையில் அவரை அத்துறையிலிருந்து இடமாற்றம் செய்வதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்நிலையில், தமிழகத்தில் உள்ள பள்ளி பாட திட்டங்களை மாற்றியமைக்க, அமைக்கப்பட்டுள்ள குழுக்களை நீதிமன்றம் கண்காணிக்கக்கோரி ராமலிங்கம் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். அதில் தன் மகன் தற்போது 10ம் வகுப்பு படிப்பதாகவும், தற்போது மருத்துவ படிப்பில் சேர நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால் தமிழக பாடதிட்டமானது சி.பி.எஸ்.இ பாடத்திட்டத்துக கு இணையானது அல்ல எனவே, தமிழக மாணவர்கள் நீட் மற்றும் போட்டித் தேர்வுகளை எதிர் கொள்ளும் வகையில் கல்வியின் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் மாநில பாட திட்டங்கள் மாற்றியமைக்க புதிதாக 2 குழுக்களை அமைத்து அரசு கடந்த ஜூன் மாதம் அரசாணை பிறபித்தது. இந்த குழுவில் அமைச்சர், பள்ளிக் கல்வித்துறை செயலாளர், உள்ளிட்ட நிபுணர்கள் உள்ளனர். ஏற்கனவே கடந்த 2012-ஆம் ஆண்டு பாடதிட்டத்தை மாற்றியமைக்க ஒரு குழு அமைக்கப்பட்டது ஆனால் அந்த குழுவின் பணி முடியும் முன்னே தற்போது புதிய குழு அமைக்கப்பட்டுள்ளது. எனவே குழுக்களையும், அதிகாரிகளையும் மாற்றுவதால் பாடதிட்டத்தை மாற்றியமைக்கும் பணி தடைபடும், எனவே பாட திட்டங்கள் மாற்றியமைக்கப்படும் வரை குழுவில் இடம்பெற்றுள்ள அதிகாரிகளை மாற்ற கூடாது என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி கிருபாகரன், அரசு அமைத்துள்ள குழுக்களில் உள்ள அதிகாரிகளை மாற்ற இடைக்கால தடை வதித்து உத்தரவிட்டார். மேலும் , பாட திட்டத்தை மாற்றியமைக்க ஏற்படுத்தப்பட்ட குழு இதுவரை முடித்துள்ள பணிகள் குறித்து விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய உத்தரவிட்ட நீதிபதி, இந்த வழக்கு மீதான விசாரணையை வருகிற 21-ம் தேதி தள்ளிவைத்தார்.