பசுமை வழிச்சாலை: மக்கள் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த அன்புமணிக்கு அனுமதி

பசுமை வழிச்சாலை திட்டம் தொடர்பாக, கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த அன்புமணிக்கு அனுமதி

பசுமை வழிச்சாலை திட்டம் தொடர்பாக, பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்த அன்புமணிக்கு அனுமதி வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு.

சென்னை – சேலம் இடையேயான 8 வழி பசுமை சாலை அமைப்பதற்கு மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து வரும் நிலையில், பாமக பாதிக்கப்பட்ட விவசாயிகள் மற்றும் கிராம மக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நடத்தி வருகிறது. சேலம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இந்தக் கூட்டங்களை நடத்த காவல் துறை அனுமதி வழங்கியது.

ஆனால், அன்புமணி ராமதாஸ் நாடாளுமன்ற எம்.பி.யாக இருக்கும் அவரது சொந்த தொகுதியான தர்மபுரியில் பொதுக்கூட்டம் நடத்த போலீஸார் அனுமதி அளிக்கவில்லை. இதற்கு அனுமதி வழங்கக் கோரி, பாமகவின் துணை பொதுச் செயலாளர் எஸ்.பி. வெங்கடேஸ்வரன் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார்.

அதில், அன்புமணி ராமதாஸ் தலைமையில் ஜூன் 26, 27 ஆகிய தேதிகளில் சேலம், காஞ்சிபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் சட்டம் ஒழுங்கிற்கு எந்த பாதிப்பும் இல்லாத வகையில் மக்களிடம் கருத்து கேட்கும் கூட்டம் நடந்து முடிந்துள்ளது. எனவே, ஜூலை முதல் வாரத்தில் தர்மபுரி மாவட்டம் அரூரில் அன்புமணி ராமதாஸ் தலைமையில் மக்கள் கருத்து கேட்புக் கூட்டம் நடத்த அனுமதியளிக்க வேண்டும் என்று தனது மனுவில் கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி பி.என்.பிரகாஷ் முன்பு கடந்த 6ம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது, தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியின் எம்.பி.யான அன்புமணி ராமதாஸை அவர் சொந்த தொகுதியினுள் செல்ல அரசு எவ்வாறு தடை விதிக்க முடியும்? பொதுமக்களிடம் கருத்து கேட்பதை அரசு தடுப்பது ஏன்? என கேள்வி எழுப்பிய நீதிபதி, தர்மபுரி எம்.பி.யான அவர் தொகுதிக்குள் செல்ல அனுமதி கோர அவசியமில்லை, என தெரிவித்து வழக்கு விசாரணையை ஜூலை 10-ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

இந்நிலையில், இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது பொதுமக்களிடம் கருத்துக்கேட்பு கூட்டம் நடத்துதல் தொடர்பாக அன்புமணிக்கு தடைவிதிக்க தமிழக அரசுக்கு அனுமதியில்லை என்றும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை, அவரது சொந்த தொகுதிக்குள் செல்ல விடாமல் தடுக்கும் மாநில அரசின் முடிவு அதிகார துஷ்பிரயோகம் எனவும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

மேலும், சென்னை – சேலம் எட்டு வழிச்சாலைத் திட்டம் தொடர்பாக பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்துதல் தொடர்பாக அன்புமணிக்கு அனுமதி வழங்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

×Close
×Close