பேனர்கள், கட் அவுட் வைக்க விதிக்கப்பட்ட தடையை நீக்க தமிழக அரசு சார்பில் வைக்கப்பட்ட கோரிக்கையை சென்னை உயர் நீதிமன்ற பெஞ்ச் நிராகரித்தது.
சென்னை அரும்பாக்கம் ராணி அண்ணா நகர், நாவலர் தெருவைச் சேர்ந்த திருலோச்சனகுமாரி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், ‘எனது வீட்டின் முன்பாக இருந்த இடத்தை, மதி என்பவர் ஆக்கிரமித்து வழிவிடாமல் அரசியல் கட்சியின் கொடி மற்றும் டிஜிட்டல் பேனரை வைத்திருந்தார். இதுதொடர்பாக கடந்த ஏப்ரல் மாதம் மாநகராட்சி மற்றும் அரும்பாக்கம் போலீசில் புகார் அளித்தேன். அதன்பேரில் அந்த கொடி மற்றும் டிஜிட்டல் ப்ளக்ஸ் பேனர் அகற்றப்பட்டது.
ஆனால் அதே நபர் மீண்டும் அதே இடத்தில் அரசியல் கட்சியின் ப்ளக்ஸ் பேனரை வைத்தார். அது தொடர்பாக அரும்பாக்கம் காவல் ஆய்வாளரிடம் புகார் அளித்தபோது, அமைதியாக இருக்கா விட்டால், தன்மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து விடுவேன் என, அந்த ஆய்வாளர் என்னை மிரட்டினார். எனவே எனது இடத்தில் உள்ள அரசியல் கட்சியின் ப்ளக்ஸ் பேனரை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்’ என கூறியிருந்தார்.
இந்த வழக்கை நீதிபதி எஸ். வைத்தியநாதன் விசாரித்தார். அப்போது போலீஸ் இன்ஸ்பெக்டர் நேரில் ஆஜராகி, தான் மனுதாரரை மிரட்டவில்லை என்று தெரிவித்தார். மாநகராட்சி அதிகாரிகள் ஆஜராகி, மனுதாரர் வீட்டின் முன்பு இருக்கும் பேனர்கள் அகற்றப்படும் என்றும், எதிர்காலத்தில் சென்னை மாநகரம் முழுவதும் உரிமையாளர்களின் முன்அனுமதியின்றி ப்ளக்ஸ் பேனர்கள் வைக்கப்படுவது தடுக்கப்படும் எனவும் உறுதியளித்தனர்.
இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி எஸ்.வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவில், ‘மனுதாரரின் இடத்தில் உள்ள டிஜிட்டல் ப்ளக்ஸ் பேனர் உடனடியாக அகற்றப்பட வேண்டும். அந்த பேனரை அகற்ற யாராவது எதிர்ப்பு தெரிவித்தால் அவர்கள் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அதுபோல தமிழ்நாடு திறந்தவெளிகள் (அழகை சீர்குலைத்தலை தடுக்கும்) சட்டம் 1959-ன் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து உள்ளாட்சி அமைப்புகளிலும் தூய்மையான, சுத்தமான, சுகாதாரமான சுற்றுச்சூழலை பராமரிப்பது தமிழக அரசின் கடமை. அதை தலைமைச் செயலாளரும் உறுதி செய்ய வேண்டும்.
தேவையில்லாமல் கட்டிடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் உள்ள சுவர்களில் சுவர் விளம்பரம் செய்து அதன் அழகை சீர்குலைக்கக் கூடாது. ஒருவேளை அனுமதி பெற்று வைக்கப்படும் அனைத்து வகையான டிஜிட்டல் ப்ளக்ஸ் பேனர்கள், விளம்பர பலகைகளில் உயிருடன் இருப்பவர்களின் எவரது புகைப்படம் அல்லது படம் பயன்படுத்தி வைக்க தடை விதிக்கப்படுகிறது.
அனுமதி பெற்று வைக்கபடும் பேனர்களில் உயிருடன் உள்ளவர்களின் புகைப்படம் இடம்பெறவில்லை என்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். அதை மீறி யாரேனும் செயல்பட்டால் அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுதொடர்பாக அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தலைமைச் செயலாளர் சுற்றறிக்கை பிறப்பித்து இந்த உத்தரவை உடனடியாக செயல்படுத்த வேண்டும்’ என அதிரடியாக உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து, தமிழக அரசு சென்னை உயர் நீதிமன்றத்தில் அப்பீல் செய்ய முடிவு செய்தது. இதற்காக, அரசு வழக்கறிஞர் விவேகானந்தன், நீதிபதிகள் சத்தியநாராயணன், சேசஷாயி ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் முன்பு ஆஜராகி, பேனர் தொடர்பாக தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து அப்பீல் செய்ய இருக்கிறோம். அந்த மனுவை அவசர வழக்காக எடுத்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அப்போது நீதிபதிகள், டிஜிட்டல் பேனர் தொடர்பாக, 2008, 2014 ஆம் ஆண்டே இந்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. ஆனால், இந்த உத்தரவுகள் எல்லாம் முறையாக அமல்படுத்தப் பட்டுள்ளதா? என்று கேள்வி எழுப்பினர். இந்த வழக்கில் அவசரம் காட்ட என்ன இருக்கிறது? இந்த முறையீட்டை அவசரமாக ஏற்க முடியாது. தற்போது எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது. மனுவாக தாக்கல் செய்யட்டும். அதன்பின்னர், வழக்கு பட்டியலிடப்பட்டு, விசாரணைக்கு வரும் போது, விசாரிக்கிறோம்’ என நீதிபதிகள் தெரிவித்தனர்.
அதன்படி தமிழக அரசு தொடர்ந்த மேல் முறையீட்டு வழக்கு இன்று (அக்டோபர் 27) நீதிபதிகள் சத்தியநாராயணன், சேசஷாயி ஆகியோர் அடங்கிய பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. இன்றும் அரசு தரப்பில் தனி நீதிமன்ற உத்தரவுக்கு தடை கேட்டு வாதிடப்பட்டது. அதை நீதிபதிகள் ஏற்கவில்லை. நீதிபதியின் வீட்டு முன்பே விதிமுறைக்கு புறம்பாக வைக்கப்பட்ட பேனர்கள் அகற்றப்படாமல் இருப்பதை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். வழக்கு விசாரணையை நவம்பர் 30-க்கு ஒத்தி வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook
Web Title:Chennai high court rejected tamilnadu government appeal
பேரறிவாளன் உட்பட 7 பேர் விடுதலை எப்போது? 3 நாட்களில் முடிவெடுக்கும் ஆளுநர்
கமல்ஹாசன் எங்கள் கூட்டணிக்கு வருவதை வரவேற்கிறேன் : தமிழக காங்கிரஸ் தலைவர் கே எஸ்அழகிரி
டிராகன் பழத்திற்கு சமஸ்கிருத பெயர் : குஜராத் முதல்வரின் நடவடிக்கைக்கு காரணம் என்ன?
சீரம் இன்ஸ்டிடியூட்-ல் திடீர் தீவிபத்து : 5 பேர் பலியானதாக தகவல்