மருத்துவ சேர்க்கை: மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கான 85% இடஒதுக்கீட்டை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

மருத்துவப் படிப்பு சேர்க்கையில் மாநில பாடப்பிரிவில் படித்த மாணவர்களுக்கு தமிழக அரசு பிறப்பித்த 85 சதவீத உள் இடஒதுக்கீட்டை ரத்து செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

நீட் தேர்வின் மூலம் மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெற்றால் கிராமப்புறங்களிலும், மாநில பாடத்திட்டம் மற்றும் தமிழ் வழிக்கல்வி படித்தவர்களும் பாதிக்கப்படுவர் என தமிழகத்தில் ‘நீட்’ தேர்வினை பல அரசியல் தலைவர்களும், கல்வியாளர்களும் எதிர்த்து வந்தனர்.

இதனால், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என சிறப்பு சட்ட வரைவு தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அதற்கு குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைக்கவில்லை. மேலும், நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்குமாறு கோரிய மனுவையும் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இதனால், தமிழக மாணவர்கள் நீட் தேர்வை எழுதும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டனர். அதன்படி, நாடு முழுவதும் கடந்த மே மாதம் 7-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வை நாடு முழுவதும் 18.34 லட்சம் பேர் எழுதினர். அவர்களில், தமிழகத்தில் சுமார் 90 ஆயிரம் மாணவ, மாணவிகள் நீட் தேர்வு எழுதினர். இந்த தேர்வில் சி.பி.எஸ்.இ பாடப்பிரிவில் இருந்தே கேள்விகள் அதிகம் கேட்கப்பட்டதாகவும், இந்தி மற்றும் ஆங்கிலத்தில் கேள்விகள் எளிதாக இருந்ததாகவும், தமிழில் கேட்கப்பட்ட கேள்விகள் கடினமாக இருந்ததாகவும் மாணவர்கள் கருத்து தெரிவித்தனர். மேலும், நாடு முழுவதும் ஒரே நுழைவுத்தேர்வு என மத்திய அரசு முழக்கமிட்ட நிலையில், வெவ்வேறு மொழிகளுக்கு வெவ்வேறு வினாத்தாள்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் சர்ச்சை எழுந்தது.

இந்நிலையில், நீட் தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் மாதம் 23-ஆம் தேதி வெளியானது. இதில், இந்திய அளவில் முதல் 25 இடங்களைப் பிடித்த மாணவர்களில் ஒருவர் கூட தமிழ்நாட்டை சேர்ந்தவர் இல்லை என்பது மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனால், மாநில பாடப்பிரிவில் படித்த மாணவர்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில், மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநிலப் பாடப்பிரிவில் படித்த மாணவர்களுக்கு 85 சதவீதம் இடஒதுக்கீடும், சி.பி.எஸ்.இ. பாடப்பிரிவில் படித்த மாணவர்களுக்கு 15 சதவீதம் இடஒதுக்கீடும் வழங்கப்படும் என தமிழக அரசு கடந்த ஜூன் 22-ஆம் தேதி அரசாணை பிறப்பித்தது.

இந்த அரசாணையால் தாங்கள் பாதிக்கப்படுவோம் எனக்கூறி சி.பி.எஸ்.இ. மாணவர்கள் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுவில், இந்திய மருத்துவ கவுன்சிலின் விதிமுறைகளைப் பின்பற்றாமல் புதிய இட ஒதுக்கீட்டை உருவாக்க தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை என அவர்கள் அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தனர்.

இந்த மனு மீது சமீபத்தில் பதிலளித்த தமிழக அரசு, “மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் அனுமதி அளித்திருப்பதால் மாநில அரசுக்கு அந்த அதிகாரம் உள்ளது”, என தெரிவித்திருந்தது.

இந்நிலையில், இந்த மனுக்கள் மீதான விசாரணை வெள்ளிக் கிழமை நடைபெற்றது. அப்போது, மருத்துவ மாணவர் சேர்க்கையில் மாநில பாடப்பிரிவில் படித்த மாணவர்களுக்கு தமிழக அரசு பிறப்பித்த 85% இட ஒதுக்கீடு அரசாணையை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. எஸ்.சி/எஸ்.டி, பொதுப்பிரிவு என சமூக ரீதியாக மட்டுமே மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க முடியும் எனவும், மாநில பாடப்பிரிவில் படித்த மாணவர்களுக்கென தனியாக இட ஒதுக்கீடு வழங்க முடியாது என்ற விதியின் அடிப்படையில் இந்த உத்தரவு வழங்கப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், புதிய தரவரிசைப் பட்டியலை தயார் செய்து கலந்தாய்வு நடத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

இந்த உத்தரவால், மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் பாதிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

×Close
×Close