இபிஎஸ்-ஓபிஎஸ்.ஸை நேரில் அழைத்து நீதிமன்றம் கண்டிக்க வேண்டும் : கட்-அவுட் பிரச்னையில் ராமதாஸ் காட்டம்

சென்னை உயர்நீதி மன்ற உத்தரவை மதிக்காத இபிஎஸ்-ஓபிஎஸ்.ஸை நேரில் அழைத்து கண்டிக்க வேண்டும் என மருத்துவர் இராமதாசு வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

By: October 26, 2017, 1:07:11 PM

சென்னை உயர்நீதி மன்ற உத்தரவை மதிக்காத இபிஎஸ்-ஓபிஎஸ்.ஸை நேரில் அழைத்து கண்டிக்க வேண்டும் என மருத்துவர் இராமதாசு வேண்டுகோள் வைத்திருக்கிறார்.

பா.ம.க. நிறுவனர் மருத்துவர் இராமதாசு வெளியிட்ட அறிக்கை வருமாறு : உயிருடன் இருப்பவர்களுக்கு கட்-அவுட் மற்றும் பதாகைகளை அமைக்கக்கூடாது என உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததற்கு அடுத்த நாளே அதுகுறித்த விதிகள் மீறப்பட்டிருக்கின்றன. சென்னைக்கு அருகிலும், திருச்சியிலும் அரசு விழாவுக்காக விதிகளை மீறி ஏராளமான கட்-அவுட்டுகள் வைக்கப்பட்டிருக்கின்றன.

சென்னையை அடுத்த திருப்பெரும்புதூர் சிப்காட் வளாகத்தில் வானூர்தி உதிரிபாக தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்கச் சென்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை வரவேற்று பூந்தமல்லி முதல் திருப்பெரும்புதூர் வரை பதாகைகள் அமைக்கப்பட்டிருந்தன. அனைத்து பதாகைகளிலும் முதல்வர் பழனிச்சாமியின் படமும், பெயரும் தான் மிகப்பெரிய அளவில் இடம்பெற்றிருந்தன. பெரும் காற்றுடன் மழையும் பெய்ததால் பல இடங்களில் பதாகைகள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தமது படத்துடன் பதாகைகளை அமைப்பது உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிரானது என்பதால், முதல்வரே அதிகாரிகளை அழைத்து பதாகைகளை அகற்றும்படி ஆணையிட்டிருக்க வேண்டும். அதுதான் சட்டத்தை மதிக்கும் முதலமைச்சருக்கு அழகாகும். ஆனால், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியோ சாலையோரங்களில் தமது படத்துடன் அமைக்கப்பட்டிருந்த பதாகைகளை பார்த்து ரசித்தபடியே விழாவுக்கு சென்று திரும்பினார்.

திருச்சியில் இன்று நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக திருச்சி நகருக்குள் வருவதற்கான அனைத்து சாலைகளிலும் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோரின் கட் அவுட்டுகள் அமைக்கப்பட்டுள்ளன. அமைச்சர்கள் வெல்லமண்டி நடராசன், வளர்மதி, துரைக்கண்ணு மற்றும் முன்னாள் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் பெயர்களில் இவை அமைக்கப்பட்டுள்ளன. எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க திருச்சி வந்துள்ள முதல்வர், துணை முதல்வரும் இவ்விதிமீறலை கண்டு கொள்ளவில்லை.

திருச்சியில் பொதுமக்களுக்கு துண்டறிக்கை கொடுத்தவர்கள் மீதெல்லாம் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பை மீறி கட்-அவுட்கள், பதாகைகள் வைத்திருப்போர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது ஏன்?

அதிகாரிகளிடம் கேட்டபோது சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பு இன்னும் தங்கள் கைகளுக்கு கிடைக்கவில்லை கூறி கைவிரித்தனர். ஆட்சியாளர்களுக்கு எந்த சிக்கலும் வந்துவிடக்கூடாது என்பதற்காக சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பையும், அதுகுறித்த அறிவுறுத்தல்களையும் மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச்செயலர் அனுப்பி வைக்கவில்லை என்று கூறப்படுகிறது. இது உயர்நீதிமன்றத்தை அவமதிக்கும் செயலுக்கு துணை போகும் அநீதியான செயலாகும்.

உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல் உயிருடன் இருப்பவர்கள் பெயரில் கட்-அவுட், பதாகைகள் வைத்த அமைச்சர்கள், முன்னாள் அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆகியோர் மீதும், அதை தடுக்கத்தவறிய தலைமைச் செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அந்த விதிமீறலுக்கு உடந்தையாக இருந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் ஆகியோரை சென்னை உயர்நீதிமன்றம் நேரில் அழைத்து கண்டிக்க வேண்டும்.

இவ்வாறு மருத்துவர் ராமதாசு கூறியிருக்கிறார்.

 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Chennai high court will summon cm and deputy cm dr ramadoss

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X