scorecardresearch

‘திடீர்’ எம்.எல்.ஏ.க்கள் விவகாரம்; புதுச்சேரி அரசுக்கு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்!

நியமன எம்எல்ஏ-க்களுக்கு ஆளுநர் கிரண்பேடி பதவிப்பிரமாணம் செய்துவைத்தது செல்லாது’ என்று மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்

‘திடீர்’ எம்.எல்.ஏ.க்கள் விவகாரம்; புதுச்சேரி அரசுக்கு சென்னை ஹைகோர்ட் நோட்டீஸ்!

புதுவை சட்டமன்றத்துக்கு 3 பேரை நியமன எம்.எல்.ஏ.க்களாக நியமித்துக் கொள்வது வழக்கம். ஆனால் காங்கிரஸ் ஆட்சி அமைத்து, முதல்வராக நாராயணசாமி பதவியேற்று ஓராண்டுக்கு மேலாகியும், அந்த பதவிகளை நிரப்ப யாருடைய பெயரையும் அரசு சிபாரிசு செய்யவில்லை.

இந்நிலையில், நியமன எம்.எல்.ஏ. பதவி இடங்களை நிரப்ப மத்தியில் ஆளும் பாஜக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது. இதன்படி பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் சாமிநாதன், பொருளாளர் சங்கர், கல்வியாளர் செல்வகணபதி ஆகியோரை நியமன எம்.எல்.ஏ.க்களாக தேர்வு செய்து மத்திய அரசு அதிரடி அறிவிப்பினை வெளியிட்டது. இந்த நடவடிக்கை, புதுவையில் ஆளும் காங்கிரஸ் கட்சிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்தச் சூழ்நிலையில், மத்திய அரசால் அறிவிக்கப்பட்ட நியமன எம்.எல்.ஏ.க்கள் 3 பேர் திடீரென்று நேற்று பதவி ஏற்றுக் கொண்டனர். அவர்களுக்கு கவர்னர் கிரண் பேடி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். அங்கு செய்தி சேகரிக்க சென்ற பத்திரிக்கையாளர்களுக்கு கூட உள்ளே நுழைய அனுமதி மறுக்கப்பட்டது.

நியமன எம்.எல்.ஏ.க்கள் விவகாரத்தில் மத்திய அரசை கண்டித்து, புதுவையில் வருகிற 8–ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடத்தப்படும் என அரசியல் கட்சிகள் மற்றும் பல்வேறு அமைப்புகள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மத்திய அரசின் எம்எல்ஏ நியமனத்துக்குத் தடை விதிக்கும்படி கோரி, காங்கிரஸ் கட்சி சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. காங்கிரஸ் எம்எல்ஏ லட்சுமி நாராயணன் இந்த வழக்கினை தொடர்ந்தார். இன்று இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், மூன்று நியமன எம்எல்ஏ-க்கள் நியமித்தது குறித்து பதிலளிக்க புதுச்சேரி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. ஒரு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.

இந்நிலையில், ’நியமன எம்எல்ஏ-க்களுக்கு ஆளுநர் கிரண்பேடி பதவிப்பிரமாணம் செய்துவைத்தது செல்லாது’ என்று மாநில முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறுகையில், “தற்போது நியமனம் செய்யப்பட்டுள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக ஏற்கனவே குற்ற வழக்குகள் உள்ளது. அவர்களை நியமிக்க யாருக்கு அதிகாரம் உள்ளது என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும்” என்றார்.

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Chennai highcourt issue notice for puducherry government due to 3 mlas appointed issue