பாரம்பரிய இசை நகரங்கள் பட்டியலில் சென்னையை யுனெஸ்கோ அமைப்பு தேர்வு செய்திருப்பதற்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னையில் நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெறும் பாரம்பரிய இசைக் கச்சேரிகள் மிகப் பிரபலம்! ஒவ்வொரு ஆண்டும் இந்த மாதங்கள்தான் சென்னையில் வெயிலும் குறைந்திருக்கும். இதமான கால நிலையில் இங்கு இசையை ரசிக்க வரும் வெளிமாநிலத்தினர் அதிகம்.
அந்த வகையில் இசைத்துறையில் சிறந்த படைப்பாக்க நகரங்களை பட்டியல் இட்டிருக்கும் யுனெஸ்கோ அமைப்பு, அதில் சென்னையையும் சேர்த்திருக்கிறது. இந்தியாவில் ஜெய்ப்பூர், வாரணாசி ஆகிய நகரங்களும் இந்தப் பட்டியலில் இடம் பெற்றுள்ளன.
இசைத்துறையில் சிறந்த படைப்பாக்க நகரமாக சென்னை தேர்வு பெற்றதற்கு பிரதமர் நரேந்திர மோடி, டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தியில், ‘சென்னை மக்களுக்கு எனது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன். சென்னையின் பாரம்பரிய இசை கலாசாரம் காரணமாக இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது. நமது வளமைமிக்க கலாசாரத்தில் சென்னையின் பங்களிப்பு விலை மதிப்பு இல்லாதது. இந்தியாவுக்கு இது பெருமைமிகு தருணம்.’ இவ்வாறு பிரதமர் கூறியிருக்கிறார்.