சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களில் கடைகள், அலுவலகங்கள் இயங்குமா? இன்று முக்கிய முடிவு
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்கள் உள்பட நாடு முழுவதும் 80 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த மாவட்டங்களில் எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் தொடர்பாக திங்கள்கிழமை (மார்ச் 23) தமிழக அரசு முக்கிய முடிவுகளை அறிவிக்கும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் நோக்கத்தில் சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்கள் உள்பட நாடு முழுவதும் 80 மாவட்டங்களை முடக்க மத்திய அரசு திட்டமிட்டு நடைமுறைப்படுத்தியுள்ளது. இந்த மாவட்டங்களில் எடுக்கப்பட உள்ள நடவடிக்கைகள் தொடர்பாக இன்று (மார்ச் 23) தமிழக அரசு முக்கிய முடிவுகளை வெளியிட உள்ளது.
Advertisment
உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கோரோனா வைரஸ் பாதிப்புக்கு இதுவரை இந்தியாவில் 7 பேர் பலியாகியுள்ளனர். 370 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழகத்தில் 6 பேருக்கு கோரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனால், தமிழகத்தில் மார்ச் 31வரை அனைத்து கல்வி நிறுவனங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்களை மூட முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டார்.
இதனைத் தொடர்ந்து, பிரதமர் அறிவித்தபடி, மக்கள் சுயர் ஊரடங்கு உத்தரவு நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது.
கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து அனைத்து மாநில தலைமை செயலாளர்களுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்தியது. இந்த ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு, கொரோனா பாதிப்புள்ள 80 மாவட்டங்களை முடக்க அறிவுறுத்தப்பட்டது.
இதில், தமிழகத்தில், சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆகிய 3 மாவட்டங்களை முடக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையடுத்து, இந்த மாவட்டங்களில் நகர்ப்புற மற்றும் மெட்ரோ சேவைகள், மாநிலங்களுக்கு இடையேயான பயணிகள் போக்குவரத்து மார்ச் 31 வரை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பொது தகவல் துறை தெரிவித்துள்ளது.
இந்நிலையில் மார்ச் 31-ம் தேதி வரை சென்னை புறநகர், பறக்கும் மற்றும் மெட்ரோ ரயில்கள் இயங்காது என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. அதேவேளையில் சென்னையில் பேருந்துகள் வழக்கம் போல் இயங்கும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதையடுத்து, முதலமைச்சர் எடப்பாடி கே பழனிசாமி தலைமையில் ஞாயிற்றுக்கிழமை மாலை தலைமைச் செயலாளர் கே.சண்முகம் மற்றும் பிற துறை அதிகாரிகளுடன்நிலைமையை மறுஆய்வு செய்து ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில், மூன்று மாவட்டங்களை முடக்குவது தொடர்பாக மத்திய அரசின் உத்தரவை ஆராய்ந்தனர். 3 மாவட்டங்களில் கடைகள், அலுவலகங்கள் இயங்குமா என்பது குறித்தும், இந்த மாவட்டங்களை முடக்குவது தொடர்பாக, தமிழக அரசு திங்கள்கிழமை முக்கிய முடிவுகளை அறிவிக்கும் என்று அதிகாரிகள் வட்டாரம் கூறுகின்றனர்.
இதற்கு பிறகு, முதல்வர் பழனிசாமி, “மார்ச் 31 வரை அனைத்து மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து சேவைகள் இயக்கப்படாது என்றும் சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் சேவைகள் அனைத்தும் மார்ச் 31 வரை நிறுத்தப்படும் என்றும் அறிவித்தார்.
அதே நேரத்தில், மளிகைப் பொருட்கள், காய்கறிகள், மருத்துவ சேவைகள் போன்ற அத்தியாவசிய சேவைகள் மற்றும் பால் மற்றும் ரேஷன் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்கள் தொடரும் என்று அறிவித்துள்ளார்.
இதனிடையே, ஊடகங்களிடம் பேசிய காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா காஞ்சிபுரத்தில் நாளை வழக்கம் போல் பேருந்துகள் இயங்கும் என்று தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்ட ஆட்சியர் கதிரவனும், பேருந்துகள் வழக்கம்போல் இயங்கும் என்றும் அத்திவாசியப் பொருட்கள் விற்பனை செய்யும் கடைகள் திறந்திருக்கும் என்றும் கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil"