சென்னையில் புறநகர் ரயில், மெட்ரோ என இரண்டு ரயில் சேவைகள் உள்ள நிலையில் மூன்றாவதாக இலகு ரயில் சேவை ( light rail service) விரைவில் துவக்கப்பட உள்ளது.
சென்னையில் அதிகரித்து வரும் மக்கள் குடியேற்றத்தினால், சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. சென்னை மக்கள் எளிதான போக்குரவத்திற்காக புறநகர் மற்றும் மெட்ரோ ரயில்களை நாடி வந்தனர். தற்போது மெட்ரோ ரயில்களிலும் நின்று கொண்டு செல்லும் அளவிற்கு மக்கள் தேடி வருவதால், அடுத்த கட்ட போக்குவரத்துக்கு சென்னை தயாராகியுள்ளது.
இந்த இலகு ரயில் சேவை, முதற்கட்டமாக தாம்பரம் - வேளச்சேரி வழித்தடங்களில் இயக்கப்பட உள்ளது. அதற்கான ஆய்வுகள் நிறைவடைந்துள்ள நிலையில், இந்த திட்டத்திற்கான மதிப்பு, ஆகும் செலவு உள்ளிட்ட விபரங்கள் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மெட்ரோ ரயில்களை காட்டிலும் குறைந்த அளவு பயணிகளே பயன்படுத்தும் வகையிலான இந்த லைட் ரயில் சர்வீஸ் சிங்கப்பூர், ஆஸ்திரேலியாவின் சிட்னி, கனடாவின் ஒட்டாவா, மற்றும் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ உள்ளிட்ட நகரங்களில் மக்களின் ஏகோபித்த வரவேற்பை பெற்றுள்ளது.
லைட் ரயில் சர்வீஸ் திட்டத்தை, சென்னையில் அமல்படுத்த திட்டமிட்டுள்ளதன் அவசியம் என்னவெனில், இந்த திட்டம், மெட்ரோ ரயில் திட்டம் போல் அதிக பொருட்செலவில் இல்லை. மெட்ரோ ரயில் சேவையில், ஒரு கி.மீ தொலைவிற்கு வழித்தடம் அமைக்க வேண்டுமென்றால், குறைந்தது ரூ.200 முதல் 250 கோடி வரை ( சுரங்க வழிப்பாதை எனில் ரூ.400 முதல் 500 கோடி வரை ) செலவாகும். ஆனால், இந்த லைட் ரயில் சர்வீஸ் திட்டத்தில், ஒரு கி.மீ. தொலைவிலான வழித்தடத்தை ரூ.80 முதல் 100 கோடி மதிப்பீட்டிலேயே நிறைவேற்றிவிடலாம்.
மெட்ரோ ரயில் வளைவுகளில் திரும்பவேண்டுமென்றால், வளைவின் சுற்றளவு குறைந்தது 100 மீ இருக்கவேண்டும். ஆனால், இந்த லைட் ரயில் சேவையில், 30 மீ சுற்றளவிலேயே ரயிலை வளைவுகளில் திருப்பிவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
லைட் ரயில் சர்வீஸ் திட்டம் குறித்து சென்னை மெட்ரோ நடத்தியுள்ள ஆய்வின் விபரங்கள், மத்திய நகர்ப்புற வளர்ச்சி மற்றும் மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்த ரயில் தடம் அமைப்பதற்கு, மெட்ரோ போன்று அகலமான சாலைகள் தேவையில்லை. குறுகலான பகுதிகளிலும், இந்த ரயில் தடத்தை அமைத்து ரயில்களை இயக்கலாம். மெட்ரோ ரயில் சேவை இல்லாத பகுதிகளில் இந்த லைட் ரயில் சேவையை அறிமுகப்படுத்தி, அப்பகுதி மக்களும் பயன்பெற திட்டமிடப்பட்டுள்ளது.