சென்னை மெட்ரோ ரயில் சேவையை, நாள் ஒன்றுக்கு 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பயணித்து வரும் நிலையில், அவர்களுக்கு உதவும்நோக்கில், டெம்போ டிராவலர் இணைப்பு சேவையை, மேலும் பல மெட்ரோ ஸ்டேசன்களுக்கு விரிவுபடுத்த மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது.
சென்னை மக்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல வேண்டுமென்றால், போக்குவரத்தில் சிக்கி படாதபாடு பட்டுக்கொண்டிருந்த நிலையில், மெட்ரோ ரயில் சேவை அறிமுகப்படுத்தப்பட்டது. பொதுப்போக்குவரத்தை ஒப்பிடும்போது கட்டணம் சற்று அதிகம் தான் என்றாலும், சுரங்கப்பாதை, ஏசி பெட்டிகள் என மக்களுக்கு மெட்ரோ ரயில்கள் புதிய அனுபவத்தை அளித்தன.
மக்கள் மெட்ரோ ரயில் சேவையை அதிகளவில் பயன்படுத்தும் பொருட்டு, மெட்ரோ ஸ்டேசன்களை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து மெட்ரோ ரயில் ஸ்டேசனுக்கு இணைப்பு வாகனங்களின் சேவை அறிமுகப்படுத்தப்பட்டன.சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் கீழ் 7 நிலையங்களில் ஷேர் ஆட்டோ சேவையும், 5 நிலையங்களில் ஷேர் டாக்சி சேவையும், 14 நிலையங்களில் வாகன இணைப்பு சேவையும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இந்த சேவைகளை, மாதம் தோறும் 70 ஆயிரம் மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, ஷேர் ஆட்டோ சேவை அதிக வரவேற்பை பெற்றுள்ளது. இதேபோல், டெம்போ டிராவலர் இணைப்பு சேவையை கொண்டுவர சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் திட்டமிட்டது.
அதன்படி, கடந்த 2018ம் ஆண்டு டெம்போ டிராவலர் இணைப்பு சேவையை அறிமுகப்படுத்தப்பட்டது. தற்போது சின்னமலை, விமானநிலையம், ஆலந்தூர் ஆகிய மூன்று நிலையங்களில் இச்சேவை செயல்பட்டு வருகிறது. இந்தநிலையில், இச்சேவையை மேற்கொண்டு 5 நிலையங்களில் விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மெட்ரோ ரயில்வே அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது: டெம்போ டிராவலர் சேவை 5 நிலையங்களில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வு நடவடிக்கையில் அதிகாரிகள் ஈடுபட்டு வருவதாக அவர் கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil