மெட்ரோபாலிடன் நகரமான சென்னையில், போக்குரவத்து நெரிசலை குறைக்கும் பொருட்டும், மக்கள் தாங்கள் போக வேண்டிய இடங்களுக்கு விரைவில் சென்று சேரும் வகையில், 10 ஆண்டுகளுக்கு முன் சென்னையில் மெட்ரோ ரயில் திட்டப்பணிகள் துவங்கப்பட்டன. 2015ம் ஆண்டு முதல் முதற்கட்டமாக கோயம்பேடு முதல் ஆலந்தூர் வரையிலான வழித்தடங்களில் மெட்ரோ ரயில் சேவை நடைபெற்று வருகிறது.
மெட்ரோ ரயில் சேவை துவங்கப்பட்டால், நாள் ஒன்றிற்கு 5 லட்சம் பேர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்வர் என்ற எதிர்பார்ப்பில் இந்த சேவை துவங்கப்பட்டது. ஆனால், தற்போதைய நிலை வரை, சென்னை மெட்ரோ ரயிலில், நாளொன்றுக்கு 1 லட்சம் பயணிகள் மட்டுமே பயணம் செய்து வருகின்றனர்.
chennai, metro rail, traffic, metro train
மெட்ரோ ரயில் சேவை துவங்கிய போது நாளொன்றிற்கு 8 ஆயிரம் பேர் பயணம் செய்தநிலையில், தற்போது பயணம் செய்வோர் எண்ணிக்கை 1 லட்சமாக அதிகரித்துள்ளது.
எதிர்பார்த்த அளவில் பயணிகள் வராதது குறித்தும் அதற்கு செய்யப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் உயர்மட்ட அதிகாரிகளின் ஆலோசனைக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.
நாள் ஒன்றுக்கு 5 லட்சம் பேர் பயணம் என்பது மெட்ரோ ரயில் சேவை முழுமையாக முடிவடையும்போது தான் இந்த இலக்கை எட்டமுடியும். தற்போதைய அளவில் கோயம்பேடு முதல் ஆலந்தூர் என ஒரு பகுதியில் மட்டுமே மெட்ரோ ரயில் சேவை நடைபெற்று வருகிறது. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் இனிமேல் தான் துவங்கப்பட உள்ளன.
சென்னையில் போக்குவரத்து நெரிசல் குறையும் என்ற நோக்கத்திலேயே தான் மெட்ரோ ரயில் சேவை துவங்கப்பட்டது. டில்லி மற்றும் பெங்களூரு நகரங்களை போல இங்கு அதிக போக்குவரத்து நெரிசல் இல்லாததால், மக்கள் பொதுப்போக்குவரத்தில் (பஸ்) இருந்து மெட்ரோ ரயில்சேவையை பயன்படுத்த அவர்கள் முன்வருவதில்லை.
பஸ் ஸ்டாப் எந்த எண்ணிக்கைக்கு இருக்கிறதோ அந்தளவிற்கு, மெட்ரோ ரயில் ஸ்டேசன்களும் இருக்கவேண்டும். பஸ் ஸ்டாப்களுக்கு அருகிலேயே, மெட்ரோ ரயில் ஸ்டேசன்களும் இருக்கவேண்டும். அப்போது தான் மக்கள் எளிதாக மெட்ரோ ரயிலை நாடுவர்.
பஸ் டிக்கெட் கட்டணத்தை சிறிதளவிற்கு அதிகரித்தால், மக்கள் மெட்ரோ ரயில் பயணத்தை நாட வாய்ப்பு உண்டு.
சர்வதேச நாடுகளில், மெட்ரோ ரயில் ஸ்டேசன்களில் ஹோட்டல்கள் இருப்பதுபோன்று, இங்குள்ள மெட்ரோ ரயில் ஸ்டேசன்களிலும் ஹோட்டல்களை கொண்டுவர வேண்டும். அதேபோல், கடைகள் உள்ளிட்டவைகளையும் ஸ்டேசன் வளாகத்தில் அமைக்க வேண்டும். இதன்மூலம் வருமானம் கிடைக்க வாய்ப்புண்டு.
நாள் ஒன்றுக்கு 5 லட்சம் பேர் பயணம் என்பது இயலாத காரியம் அல்ல, ஆனால், தற்போதைய அளவில் உடனடியாக நடக்க இயலாத நிகழ்வு. அடுத்த ஆண்டிற்குள்ளாக மேலும் நாள் ஒன்றுக்கு 50 ஆயிரம் முதல் 1 லட்சம் பேர் பயணம் செய்யும் வகையிலான நடவடிக்கைகள் மேற்கொள்வது குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.