நேரு பூங்கா, சென்ட்ரல் இடையேயான மெட்ரோ ரயில் வழித்தடத்தில் வரும் செம்டம்பர் மாத இறுதியில் சோதனை ஓட்டம் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையில் 2 வழித்தடங்களில் மொத்தம் 45 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. மேலும், போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. குறிப்பாக, தற்போது, விமான நிலையம் - சின்னமலை, கோயம்பேடு - நேரு பூங்கா வரையில் மெட்ரோ ரயில்கள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன.குறைந்த கட்டணமாக ரூ.10-ம் அதிகபட்ச கட்டணமாக ரூ.40-ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
கோயம்பேட்டில் இருந்து வரை நேரு பூங்கா வரை தற்போது மெட்ரோ ரயில் இயக்கப்பட்டு வரும் நிலையில், அந்த வழித்தடத்தில் நேருபூங்கா முதல் சென்ட்ரல் ரயில் நிலையம் வரையில் இயக்குவதற்கான இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த வழித்தடத்தில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் பட்சத்தில் கோயம்பேட்டில் இருந்து எழும்பூர், சென்ரல் ரயில் நிலையகங்களுக்கு பயணிகள் எளிதாக பயணம் மேற்கொள்ள முடியும்.
கோயம்போட்டில் இருந்து சென்ரல் ரயில் நிலையம் அல்லது எழும்பூர் ரயில் நிலையத்திற்கு செல்லும் பயணிகள் பேருந்துகளில் செல்லும்போது போக்குவரத்து நெரிசலில் சிக்கி வருகின்றனர். குறிப்பாக, வெளியூர்களுக்கு ரயில் பயணம் மேற்கொள்ளும் பயணிகள் குறிப்பிட்ட நேரத்தில் தாங்கள் விரும்பும் இடத்திற்கு பயணிகள் செல்ல முடியாத நிலை உள்ளது. தற்போது இந்த வழித்தடத்தில் விரைவில் மெட்ரோ ரயில் இயக்கப்படும் பட்சத்தில், பயணிகள் விரைவில் ரயில் நிலையங்களை சென்றடைய முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், வரும் செம்படம்பர் மாதம் நேரு பூங்கா முதல் சென்ரல் ரயில் நிலையம் வரையிலான பாதையில் மெட்ரோ ரயில் சோதனை ஓட்டம் தொடங்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக அதிகாரிகள் தெரிவித்ததாவது: நேரு பூங்கா மற்றும் சென்ரல் இடையே மெட்ரோ ரயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. ரயில் நிலையங்களை அமைக்கும் பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளன.
மேலும், மெட்ரோ ரயில் பாதைகள் மற்றும் சிக்னல்கள் அமைக்கும் பணிகளும் இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளன. இந்த பணிகள் நிறைவுபெற்றதும், வரும் செம்டம்பர் மாத இறுதியில் இந்த வழித்தடத்தில் சோதனை ஓட்டத்தை தொடங்க திட்டமிட்டுள்ளோம்.
இந்த ஆண்டின் இறுதியில் சென்ரலில் இருந்து மீனம்பாக்கத்திற்கு மெட்ரோ ரயில் இயக்கப்படும். இதனால்,
கோயம்பேடு, சென்ரல் மற்றும் விமான நிலையம் ஆகிய பகுதிகளுக்கு மெட்ரோ ரயில் இயக்கப்படும் போது ஏராளமான பயணிகள் பயன்பெறுவார்கள். மெட்ரோ ரயிலை பயன்படுத்தும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறினர்.
எனினும் மெட்ரோ ரயிலில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டண விகிதங்களை, பேருந்து கட்டணத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது பாமர மக்கள் மெட்ரோ ரயில் சேவையை தொடர்ந்து பயன்படுத்துவார்களா என்பது சந்தேகமே.