சென்னையில் முதல் சுரங்கப் பாதை மெட்ரோ ரயில் சேவை தொடக்கம்...

திருமங்கலத்தில் இருந்து நேரு பூங்காவிற்கு ஏழரை நிமிடத்தில் செல்ல முடியும்.

சென்னையில், முதற்கட்டமாக கோயம்பேடு – பரங்கிமலை இடையேயும், 2-வது கட்டமாக சின்னமலை – விமான நிலையம் இடையேயும் உயர்மட்டப் பாதையில் மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்டது. தற்போது வண்ணாரப்பேட்டை – விமான நிலையம் மற்றும் சென்டிரல் – பரங்கிமலை ஆகிய 2 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், 3-வது கட்டமாக திருமங்கலம் – நேரு பூங்கா இடையே சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் போக்குவரத்து பணிகள் முடிவடைந்தது. இதையடுத்து, தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அமைச்சர் வெங்கைய நாயுடு ஆகியோர் 3-வது வழித்தடத்தில் மெட்ரோ ரயில் சேவையை தொடங்கி வைத்தனர். இந்த விழாவில் மத்திய இணையமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அமைச்சர்கள் ஜெயக்குமார், செங்கோட்டையன், வேலுமணி, தங்கமணி மற்றும் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

சுமார் 7.4 கிலோ மீட்டர் தொலைவிலான இந்த வழித்தடத்தில் திருமங்கலம், அண்ணாநகர் டவர், அண்ணாநகர் கிழக்கு, ஷெனாய்நகர், பச்சையப்பன் கல்லூரி, கீழ்ப்பாக்கம், நேரு பூங்கா ஆகிய 7 ரெயில் நிலையங்கள் வருகின்றன. இந்த சுரங்க மெட்ரோ ரயில் மூலம் திருமங்கலத்தில் இருந்து நேரு பூங்காவுக்கு ஏழரை நிமிடத்தில் வந்து சேர முடியும். இது சுரங்க வழிப் பாதை என்பதால், மக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

×Close
×Close