சென்னை போன்ற நகரங்களில், வளர்ச்சிகளுக்கு நிகராக திருட்டு குற்ற சம்பவங்களும் தொடர்ந்து அதிகரித்து கொண்டே வரும் இந்நிலையில் கடந்த 30 ஆண்டுகளாக இரவு ரோந்துகளின் மூலமாக, திருட்டு சம்பவங்கள் நிகழாத பகுதி… சென்னையில் நிலவிய கடும் தண்ணீர் பற்றாக்குறை குறித்த செய்தி சர்வதேச ஊடகங்களிலும் தலைப்பு செய்தியான நிலையில், அதே சென்னையில் உள்ள ஒரு பகுதியில் இதுவரை தண்ணீர் பஞ்சமே ஏற்பட்டதில்லை என்றால் அதை நம்ப முடிகிறதா.
அதை நம்பித்தான் ஆக வேண்டும். அதுவும் மக்களின் கூட்டுமுயற்சியால், இதை சாத்தியமாக்கியுள்ளனர் சென்னை நங்கநல்லூர் பகுதியில் உள்ள லட்சுமி நகர் வாசிகள்.
சென்னை நங்கநல்லூர் லட்சுமி நகர் பகுதியில் சுமார் 48 தெருக்கள் உள்ளன. ஒவ்வொரு தெருவிலும் குறைந்தது 100 குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதி மக்கள், தங்களுக்கு தேவையான வசதிகளை அரசின் உதவியுடன் தாங்களே செய்துகொள்ள முன்வந்ததன் காரணத்தினால், மற்றவர்களிடம் இவர்கள் தனித்து தெரிய துவங்கினர்.
லட்சுமி நகரின் எந்த பகுதிக்கு சென்றாலும் அது சுத்தமாகவும் பளிச் என்றும் தென்படுகிறது. எந்த தெருக்களிலும் சாக்கடை கழிவு நீர் வழிந்தோடவில்லை. தெருவிளக்குகள் அனைத்தும் எரிகின்றன. எங்கும் குப்பைகள் சிதறி கிடக்கவில்லை. இந்த மாற்றத்தை நம்மாலும் செய்ய இயலும். ஆனால் நாம் செய்யவில்லை. ஆனால், இவர்கள் நிகழ்த்திக்காட்டியுள்ளனர்.
இதற்கு முக்கிய காரணமாக திகழ்பவர்கள் நங்கநல்லூர் பகுதி லட்சுமி நகர் மக்கள் நல மன்றம்
சென்னையில் மக்கள் நல சங்கங்கள் 1000க்கும் மேல் உள்ளன. ஆனால், நாம் குறிப்பாக சென்னை நங்கநல்லூர் லட்சுமி நகர் மக்கள் நல மன்றம் பற்றி பேச இருக்கிறோம் ஏனென்றால், நமக்கு நாமே என்ற சொலவடையை, அரசியல் பிரமுகர் தற்போதே அதிகளவில் பயன்படுத்தி வரும் நிலையில், இவர்கள் இந்த வார்த்தையை, 3 தலைமுறைகளுக்கும் மேலாக பயன்படுத்துவதோடு மட்டுமல்லாது அதை நடைமுறைப்படுத்தி வெற்றியும் பெற்றுள்ளனர்.
லட்சுமி நகர் மக்கள் நல மன்றம், இந்தாண்டில் தனது 30வது ஆண்டில் அடிஎடுத்து வைத்துள்ளது.
லட்சுமி நகர் மக்கள் மன்றம், சென்னை மாநகரின் சிறந்த மக்கள் நலச்சங்கம் உள்ளிட்ட விருதுகளையும், காவல்துறை, மாநகராட்சி சார்பில் பல விருதுகளையும் பெற்றுள்ளது.
இதுதொடர்பாக, மக்கள் நல மன்றத்தின் செயலாளர் நாராயணன், இந்தியன் எக்ஸ்பிரஸ் (தமிழ்) இணையதளத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளதாவது, எங்கள் பகுதியில் திருடர்கள் பயம் இல்லாமல் இருப்பதற்கு முக்கிய காரணம், எங்கள் பகுதி மக்களே வயது வித்தியாசமின்றி இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி முதல் ரோந்து பணியில் நாள் தவறாது ஈடுபட்டு வருகிறோம். இது இன்று நேற்று எடுத்த முடிவு அல்ல. இரவு ரோந்து பணியை ஒருங்கிணைக்கும் பொருட்டே, நாங்கள் 1990ம் ஆண்டு மக்கள் நல மன்றம் என்ற அமைப்பை துவக்கினோம். தற்போது அதற்கு 30 ஆண்டுகள் ஆகிவிட்டன.
சென்னை மாநகர காவல்துறை சார்பிலான மூன்றாவது கண் நிகழ்ச்சியின் சார்பாக, சென்னையில் முதன்முறையாக சிசிடிவி கண்காணிப்பு வசதி ஏற்படுத்தப்பட்ட பகுதி என்ற பெருமை தங்கள் பகுதிக்கு உண்டு.
எங்கள் பகுதியில் 27 நட்சத்திரங்களுக்கு பொருத்தமான மரங்களை கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பாக பல்வேறு பகுதிகளில் நட்டு வளர்த்து வருகிறோம். அதன்பயனாக, சென்னையே கடும் தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட நிலையிலும், எங்கள் பகுதியில் தண்ணீர் பஞ்சம் ஏற்படவில்லை.
எங்களது அமைப்பின் செயல்பாடுகளை பாராட்டி, சிறந்த மக்கள் நலச்சங்கம் விருது எங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று பல விருதுகளையும் நாங்கள் வாங்கியுள்ளோம்.
வழிகாட்ட ரெடி : எங்கள் பகுதியில் நாங்கள் சாதித்ததை போன்று சென்னையின் மற்ற பகுதிகளிலும் இதுபோன்ற வசதிகளை ஏற்படுத்த அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு, ஆலோசனை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறோம். திருவான்மியூரில் உள்ள கற்பகம் அவென்யூவிலும் தற்போது இதுபோன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதுபோன்று திருட்டு பயம் இல்லாத சென்னை மாநகரம் உருவாகவேண்டும் என்பதே எங்களது விருப்பம்.
எங்களின் இந்த வெற்றிக்கு காவல்துறை, மாநகாராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், இப்பகுதி மக்கள் உள்ளிட்டோர் வழங்கிய ஒத்துழைப்பே காரணம் என அவர் கூறினார். நாமும் அவரிடம் இருந்து விடைபெற்றோம்.
கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்ற பொன்மொழிக்கேற்ப வாழ்ந்து மற்றவர்களை வாழ வழிகாட்டும் சென்னை நங்கநல்லூர் லட்சுமி நகர் பகுதி மக்களையும், லட்சுமி நகர் மக்கள் நல மன்றம் அமைப்பிற்கும் நாம் வாழ்த்துகள் தெரிவித்துக்கொள்வோமாக….
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil