மீனு வாங்கலையோ மீனு... மீன்கள்.காம்-ல்... அமைச்சர் 'ஃப்ரெஷ்' அறிவிப்பு!

ஆர்டர் செய்த அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரத்துக்குள் மீன்கள் டெலிவரி செய்யப்படும்.

ஆன்லைன் மூலம் மீன் விற்பனை செய்யும் புதிய முறையை, சென்னை பட்டினப்பாக்கத்தில், நிதி மற்றும் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார்.

அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் , “மீன் உணவு வகைகள், இதயநோய் வராமல் தடுக்கின்றன. ஆரோக்கியம் தரும் உணவான மீன் உணவுப்பொருட்கள், ஆன்லைன் மூலம் விற்பனை செய்யப்படுவது இன்று முதல் சென்னை மாநகரில் தொடங்கப்பட்டுள்ளது. மீன்கள் மட்டுமல்ல, மீன்கள் சார்ந்த மற்ற பொருட்களை, டெலிபோன் மூலமாகவும், ஆன்லைன் மூலமாகவும் பெறலாம். www.meengal.com என்ற இணையதளம் மற்றும் 044- 24956896 தொலைபேசி எண்ணில் ஆர்டர் செய்து வரவழைக்கலாம். இந்த புதிய முறை, 10 லட்சம் ரூபாய் செலவில் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக, ஒரு மென்பொருளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த மீன் விற்பனை முறைக்காக சென்னையில் 5 மையங்கள் உள்ளன. சென்னை மக்களுக்கு மீன் உணவு வகைகள் எளிதில் கிடைக்க வேண்டும் என்பதற்காக இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 5 கிலோ மீட்டர் சுற்றளவில் அமைந்துள்ள பகுதிகளுக்கு, குறைந்தபட்சம் 500 ரூபாய்க்கு ஆர்டர் தரலாம். இதற்கு போக்குவரத்துக் கட்டணமாக, 35 ரூபாய் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆர்டர் செய்த அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரத்துக்குள் மீன்கள் டெலிவரி செய்யப்படும். மேலும், இந்தத் திட்டம் விரைவில், மற்ற மாவட்டங்களிலும் விரிவுபடுத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close