சென்னை கொடுங்கையூரில், ஆர் ஆர் நகரில் கடைக்கு சென்று இரண்டு சிறுமிகள், சாலையில் அறுந்து கிடந்த மின்சார கம்பியை மிதித்ததால் மின்சாரம் தாக்கியதில் பாவனா, யுவஸ்ரீ என்ற அந்த சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்தனர். இதனால், அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் ஒரு சிறுமி லேசான காயத்துடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
கடைக்குச் சென்று வருகிறேன் என்று கூறி சென்ற தனது மகள், உயிரிழந்த தகவலை கேட்ட ஒரு சிறுமியின் தாய், வலிப்பு நோய் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சென்னை போலீஸ் துணை கமிஷனர் ஜெயராமன் நேரில் வந்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தினார்.
இச்சம்பவம் குறித்து மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணியிடம் கேட்டபோது, இச்சம்பவம் குறித்து விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாகவும், தவறு செய்தவர்கள் யாராக இருப்பினும், நிச்சயம் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மேலும், மின்சாரம் பாய்ந்து பலியான சம்பவம் தொடர்பாக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அச்சிறுமிகளின் குடும்பத்திற்கு இழப்பீடு வழங்கப்படும். மழைக்காலம் துவங்குவதற்கு முன்பே அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டது என்று கூறியுள்ளார்.
இதைத் தொடர்ந்து, அச்சிறுமிகளின் உடல்கள் வைக்கப்பட்டுள்ள மருத்துவமனையில் காவல்துறை உயரதிகாரிகள் விசாரணைக்கு வந்தனர். அப்போது அவர்களை சிறுமிகளின் உறவினர்கள் முற்றுகையிட்டனர். இதைத் தொடர்ந்து, அச்சிறுமிகளின் உடலை இன்றே போஸ்ட்மார்டம் செய்து உடலை ஒப்படைப்பதாக அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர். முன்னதாக, மருத்துவமனை நிர்வாகம், நாளைக்கு தான் சிறுமிகளின் உடலை தருவதாக கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
இச்சம்பவம் தொடர்பாக தற்போது மூன்று மின்துறை அதிகாரிகள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வியாசர்பாடி செயற்பொறியாளர், உதவி செயற்பொறியாளர், உதவி பொறியாளர் ஆகியோர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாடு மின்சார வாரியம் சார்பில் இந்த உத்தரவு சற்றுமுன் பிறப்பிக்கப்பட்டுள்ளது. வேறு பகுதிகளில் உள்ள அதிகாரிகள் உடனடியாக இந்த பகுதிக்கு பணியமர்த்தப்படுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தநிலையில், இச்சம்பவம் குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது ட்விட்டரில், "கொடுங்கையுூரில் குழந்தைகளின் கொடுஞ்சாவிற்கு அனுதாபமும் நிதியுதவியும் அரசு செய்தால் போதாது. இனியும் நிகழாதிருக்க அவனவெல்லாம் செய்ய வேணடும்" என்று குறிப்பிட்டுள்ளார்.