கடந்த அக்டோபர் 31-ஆம் தேதி முதல், மழையின் காரணமாக பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள பள்ளிகள் இன்று (செவ்வாய் கிழமை) மீண்டும் திறக்கப்பட்டன.
சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் உள்ளிட்ட மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழை கடந்த அக்டோபர் 30-ஆம் தேதி முதல் தீவிரமடைந்தது. இதையடுத்து, அன்றைய தினம் சென்னையில் பள்ளிகளுக்கு ஒரு மணிநேரம் முன்பாகவே பள்ளிகளிலிருந்து மாணவர்களை வீட்டுக்கு அனுப்ப மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டனர். இதையடுத்து, மழை தொடரவே, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர்ம, நாகை உள்ளிட்ட மாவட்டங்களில் கடந்த வாரம் செவ்வாய் கிழமை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.
இந்நிலையில், கடந்த 2 நாட்களாக சென்னை, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மழையின் தீவிரம் குறைந்து வருகிறது. இதனால், இன்று முதல் (செவ்வாய் கிழமை) பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்தனர். அதன்படி, பள்ளிகள் இன்று திறக்கப்பட்டன.
அதேவேளையில், சென்னையில் புரசைவாக்கம், தி.நகர், வேப்பேரி, ராயபுரம், வேப்பேரி, வேளச்சேரி, திருவல்லிக்கேணி ஆகிய பகுதிகளில் மழை தொடர்வதால், அங்குள்ள பள்ளிகள் மட்டும் இயங்காது எனவும், மற்ற பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் எனவும் மாவட்ட ஆட்சியர் அன்புச்செழியன் தெரிவித்துள்ளார்.
இதேபோல், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10 பள்ளிகள் மற்றும் திருவள்ளூர் மாவட்டத்தில் 12 பள்ளிகள் தவிர மற்ற பள்ளிகள் வழக்கம்போல் இயங்கும் என, அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர்.