சென்னை தி.நகர் உஸ்மான் சாலையில் உள்ள சென்னை சில்க்ஸ் துணிக்கடையில் நேற்று அதிகாலை 4 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து உஸ்மான் சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க தீவிரமாக ஈடுபட்டனர்.
தீ விபத்து காரணமாக தி.நகர் முழுவதும் புகை மண்டலமாக காட்சி அளித்தது. அப்பகுதியில் வசிக்கும் மக்கள் கண் எரிச்சல், மூச்சு திணறலால் பாதிக்கப்பட்டனர்.
இரவு 11 மணியளவில் தீயணைப்புத்துறை இயக்குநர் விஜயகுமார், தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டுவிட்டது என்று தெரிவித்தார். ஆனால் 7வது மாடியில் கணல் மட்டும் தகித்து கொண்டு இருந்தது. இன்று அதிகாலை மூன்று மணியளவில் 7வது மாடியில் தீ பற்றி எரிய ஆரம்பித்தது. தீயணைப்பு வீரர்களால் அதனை கட்டுப்படுத்த முடியவில்லை.
இந்நிலையில் அதிகாலை 3.19 மணிக்கு ஏழாவது ஏழாவது மாடியில் இருந்து இரண்டாவது மாடி வரை வலதுபக்கம் சுவர் முற்றிலும் இடிந்து விழுந்தது. அதிகாலை நேரம் என்பதால் மேற்கு மாம்பலம், மகாலிங்கபுரம் வரையில் சத்தம் கேட்டதாக அந்த பகுதி மக்கள் தெரிவித்தனர். அடுத்து, காலை 7 மணிக்கு கட்டிடத்தின் முன்பக்க சுவர் இடிந்து விழுந்தது.
இதையடுத்து, சென்னை சில்க்ஸ் கட்டிடத்தின் அருகில் உள்ள அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்போரை வீட்டை விட்டு காலி செய்ய போலீசார் அறிவுறுத்தியுள்ளனர். தீ விபத்து ஏற்படும் அபாயம் உள்ளதால், அசம்பாவிதம் உண்டாவதைத் தடுக்க, ஒவ்வொரு வீட்டிற்கும் நேரடியாக சென்று போலீசார் அறிவுறுத்தி வருகின்றனர். இதனால், அப்பகுதி அடுக்குமாடி குடியிருப்பு வாசிகள் தங்களது உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீட்டிற்கு செல்கின்றனர்.
தற்போது கட்டிடத்தின் உட்புறம் தொடர்ந்து தீ எரிந்து வருகிறது. ஹைட்ராலிக் இயந்திரம் மூலம் தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து 31 மணி நேரமாக சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் தீ எரிந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், சென்னை சில்க்ஸ் நிறுவனமே தானாக முன்வந்து புகார் அளித்துள்ளது. சென்னை சில்க்ஸ் மேலாளர் ரவீந்திரன் அளித்த புகாரின் பேரில், 'தீ விபத்து' என்ற பிரிவின் கீழ் மாம்பலம் போலீசார் வழக்குப் பதிவுசெய்துள்ளனர். இருப்பினும், கட்டட விதிமீறல்கள்குறித்து காவல்துறையினர் நடவடிக்கை எதுவும் எடுக்க முடியாது என்பதால், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம்தான் இதுதொடர்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து பேட்டியளித்த வருவாய்த் துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், " தீ அணைக்கப்பட்டுவிட்டது. ஆனால், ஆங்காங்கே இன்னும் கங்குகள் உள்ளன. அவை முற்றிலும் அணைக்கப்பட்ட பிறகு அரசு சார்பில் சென்னை சில்க்ஸ் கட்டிடம் முழுவதுமாக இடிக்கப்படும். இதற்காக பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஜெயசிங் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஓய்வுபெற்ற ஐஐடி பொறியியல் வல்லுநர்களிடம் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளது. எந்த தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கட்டிடம் இடிக்கப்படும் என்பது பின்னர் தெரிவிக்கப்படும். ஆனால், தீ முழுவதும் அணைந்தவுடன் உடனடியாக கட்டிடத்தை இடிக்கும் பணி தொடங்கப்படும்" என்றார்.