சென்னை தி.நகர் பேருந்து நிலையம், மாம்பலம் ரயில் நிலையத்தை இணைக்கும் வகையில் கட்டப்பட்டிருக்கும் ஸ்கை-வாக் மேம்பாலம் வரும் ஏப்ரல் மாதம் திறக்கப்படுகிறது.
சென்னை 'ஸ்மார்ட் சிட்டி' திட்டத்தின் கீழ் கட்டப்படும் இந்த மேம்பாலமானது, 2020-ல் ரூ.26 கோடி செலவில் கட்டப்பட்டு முடிவடையும் நிலையில் உள்ளது.

கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் பாதையை உள்ளடக்கும் இந்த மேம்பாலமானது, நகரும் படிக்கட்டுகளுடன் பொதுமக்கள் அதிக அளவு நடப்பதற்கு ஏற்ற அகலத்துடன் கட்டப்பட்டு உள்ளது.
சென்னை தியாகராய நகரில் கட்டப்பட்டு வரும் இந்த மேம்பாலத்தால், மக்கள் ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையத்திற்கு ஐந்து நிமிடத்தில் சென்றுவிட முடியும்.
ஆகவே, நாள்தோறும் மாம்பலம் ரயில் நிலையத்திற்கு வரும் ஐம்பதாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இந்த மேம்பாலத்தினால் பயனடைவார்கள்.
மேலும், இதைப்பற்றி கல்லூரி மாணவி ஸ்ருதி தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழிடம் கூறுகையில், "தமிழக அரசின் இந்த முயற்சி போக்குவரத்து நெரிசலை குறைக்க உதவும். தினமும் காலை ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையத்திற்கு பயணிப்பதற்கு, காய்கறி சந்தையை கடந்து செல்லும் நிலைமை இருந்தது.
சந்தையில் இருக்கும் கூட்ட நெரிசலினாலே, நேரத்திற்கு செல்ல முடியவில்லை. இந்த மேம்பாலத்தினால் எளிதாக பயணிக்க முடியும் என்று நம்புகிறேன்", என்றார்.
தொடர்ந்து, திநகரில் வசிக்கும் தங்கராஜ், "திநகரில் பெரும்பாலான கூட்டநெரிசல் ஏற்படும் இடமாக ரயில் நிலையம் மற்றும் பேருந்து நிலையம் இருக்கிறது. அனைவரும் தங்களின் ஷாப்பிங்கை முடித்து செல்லும் வழியாக இருப்பதால் விடுமுறை நாள்களில் நினைத்து பார்க்கமுடியாத அளவிற்கு கூட்ட நெரிசல் ஏற்படும்.
அந்தப் பிரச்னையை தவிர்க்கும் விதமாக இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. முதியவர்கள் மற்றும் படிக்கட்டு எற சிரமப்படுபவர்களின் வசதிக்காக நகரும் படிக்கட்டுகள் அமைத்திருப்பது பாராட்டுக்குரியது", என்றார்.
இந்த நிலையில், திநகர் வழியே பயணிக்கும் ஐய்யம்பெருமாள், “தமிழக அரசு சென்னையில் பல்வேறு நவீன முன்னேற்றங்களை கொண்டுவருவது பாராட்டுக்குரியதாக இருக்கிறது.
ஆனால், மேம்பாலம் கட்டியுள்ள வழியில் நிறைய கடைகள், காவல் நிலையம், காய்கறி சந்தை என்று பல அமைந்திருக்கிறது.
முன்பு, மக்கள் இந்த வழியை அணுகும்போது, இடையில் உள்ள கடைகளை பயன்படுத்திக்கொள்வார்கள். ஆனால் தற்போது மேம்பாலத்திற்கு இடையே படிக்கட்டு அமைக்கப்படாமல் இருப்பது சற்று கடினமாக இருக்க வாய்ப்புள்ளது.
காய்கறி சந்தைக்கு செல்லவேண்டும் என்றால், மேம்பாலத்தின் இறுதிவரை சென்று திரும்ப வேண்டிய நிலை உள்ளது", என்றார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil