ஔவையின் ஆத்திச்சூடியில் இடம் பெற்றிருக்கும் ஐயமிட்டு உண் எனும் மொழிக்கு சென்னையை சேர்ந்த டாக்டர் ஒருவர் செயல்வடிவம் கொடுத்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.
ஔவையின் ஆத்திச்சூடியில் ஐயமிட்டு உண் எனும் மொழி இடம்பெற்றிருக்கும். அதன் அர்த்தம், உணவு உண்பதற்கு முன் யாருக்கேனும் தானமிட்டு உண்ணுங்கள் என்று பொருள். அதனை சென்னையை சேர்ந்த டாக்டர் இசா ஃபாத்திமா ஜாஸ்மின் மெய்ப்பித்துள்ளார்.
பெசன்ட் நகர் 4-வது மெயின் ரோட்டில் உள்ள டென்னிஸ் கிளப் முன்புறம் உணவு பெட்டகம் ஒன்றை அவர் நிறுவியுள்ளார். உணவுப் பொருள்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காகக் குளிர்சாதன வசதியும் அதில் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து இசா கூறுகையில், "நமது மக்கள் தொகையை விட இருமடங்கு அதிகமாக நம்மால் உணவளிக்க முடியும். ஆனால், 50 சதவீத உணவு வீணாகிறது. அபப்டி வீணாக்காமல் தங்களது தேவைக்கு அதிகமாக இருக்கும் உணவுகளை இங்கு வைக்கலாம்" என்றார்.
வீணாகும் உணவு பொருட்கள் மட்டும் இங்கே வைக்கப்படுவதில்லை. சிலர் கடைகளில் இருந்து வாங்கி வந்தும் இந்த உணவு பெட்டகத்தில் வைத்து விட்டுச் செல்கின்றனர். வாழைப்பழங்கள், ஆரஞ்சு பழங்கள், தண்ணீர் பாட்டில்கள், பிரியாணி பொட்டலங்கள் என பலரும் கடைகளில் இருந்து வாங்கி வந்து இங்கே வைத்து விட்டுச் செல்கின்றனர்.
பசியால் வாடும் எவரும் இந்த உணவு பெட்டகத்தில் இருந்து உணவை எடுத்துச் செல்லலாம். இதற்கு எந்த ஒரு அடையாள அட்டையும் தேவையில்லை. அதேபோல், உணவு வீணாவதை தடுக்கு நினைக்கும் எவரும் இந்த பெட்டகத்தில் உணவை வைத்துச் செல்லலாம். உணவு மட்டுமல்லாமல், உடை, புத்தகம் என்று எதை வேண்டுமென்றாலும் வைக்கலாம். கெட்டுப் போன உணவுகளை யாரும் உண்ணக் கூடாது என்ற நோக்கத்துடன், தினமும் இரவு நேரத்தில் மீதமுள்ள உணவுகளை எடுத்து விடுகின்றனர்.
குளிர்சாதனப் பெட்டிக்குள் குறிப்பேடு ஒன்று வைத்துள்ளனர். அதில், தானம் செய்பவர் தங்களது பெயர், தாங்கள் வைக்கும் உணவின் பெயர், உணவு எப்போது தயார் செய்யப்பட்டது, எந்தக் காலத்திற்குள் சாப்பிட வேண்டும் என்ற தகவலையும் பதிவிட்டுச் செல்கின்றனர்.
கேரளாவில் இதுபோன்ற உணவு வழங்கும் அமைப்பு சில ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்டது. திருநெல்வேலியில் மாவட்ட ஆட்சியர் அன்பு சுவர் என்ற திட்டத்தைத் தனது அலுவலகத்தின் முன்பகுதியில் சமீபத்தில் தொடங்கி வைத்தது நமக்கு நினைவிருக்கலாம்.
வெளிநாடுகளில் இதுபோன்ற உணவுப் பெட்டகங்கள் உள்ளன. ஆனால், தொண்டு நிறுவனமோ, பல நபர்களோ அல்லாமல் தனி ஒரு பெண்ணாக இவர் நடத்தி வரும் "ஐயமிட்டு உண்" தனித்துவமானது.
நாம் வேண்டாம் என்று குப்பையில் போடும் பல பொருட்கள் வேறு சிலருக்கு உணவாகவும் வெவ்வேறு பலன்களைத் தரக்கூடிய பொருள்களாகவும் மாறுகின்றன என்பதை இசா ஃபாத்திமா ஜாஸ்மினின் "ஐயமிட்டு உண்" உணர்த்துகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.