ஆர்.கே நகர் இடைத்தேர்தல் : டிசம்பர் 31-க்குள் நடத்துவதாக தேர்தல் ஆணையம் அறிவிப்பு

ஆர்.கே நகர் தொகுதிக்கு டிசம்பர் 31-ம் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவிப்பு

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவினால் காலியான ஆர்.கே நகர் தொகுதிக்கு டிசம்பர் 31-ம் தேதிக்குள் இடைத்தேர்தல் நடத்தப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே ஜோதி தெரிவித்துள்ளார்.

இரண்டு மாதத்திற்கும் மேலாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஜெயலலிதா, கடந்த ஆண்டு டிசம்பர் 5-ம் தேதி மரணம் அடைந்தார். ஜெயலலிதாவின் ஆர்.கே நகர் காலியானதால் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது. காலியான தொகுதிக்கு 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது விதியாகும். அதன்படி, கடந்த ஏப்ரல் 12-ம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது.

ஜெயலலிதா மறைவையடுத்து அதிமுக இரண்டாக பிளவு பட்டிருந்த நிலையில், சசிகலா அணியும் (அப்போது , எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றிணைந்த அணி), ஓ பன்னீர் செல்வம் அணியினரும் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கொண்டாடின. இரு தரப்பு மனுக்களையும் பெற்றுக் கொண்ட தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை முடக்கி வைத்தது. இதனால், அதிமுக அம்மா அணி சார்பில் டிடிவி தினகரனும், அதிமுக புரட்சித் தலைவி அம்மா அணி சார்பில் மதுசூதனன், திமுக சார்பில் மருது கணேஷ், பாஜக சார்பில் கங்கை அமரன் ஆகியோர் தேர்தல் களத்தில் குதித்தனர்.

அந்த சமயத்தில், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் களத்தில் குதிக்கவே, இடைத்தேர்தல் பிரச்சாரம் படு சூடாக இருந்தது. பணப்பட்டுவாடா நடைபெறாமல் இருக்க தேர்தல் ஆணையம் தீவிர நடவடிக்கையை எடுத்திருந்தது. 3 தேர்தல் பார்வையாளர்கள், 30 கூடுதல் பார்வையாளர்கள், 256 மைக்ரோ அப்சவர்கள் என தீவிர கண்காணிப்பின் வளையத்தில் வந்திருந்தது ஆர்.கே நகர் தொகுதி.

இவ்வளவு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்த நிலையிலும், ஆர்.கே நகரில் பணப்பட்டுவாடா புகார் எழுந்தது. இதனிடையே, சென்னையில் 35 இடங்களில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தினர். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வீட்டில் நடத்த சோதனையில் சில ஆவணங்கள் சிக்கியது. அதில், ஆர்.கே நகர் தொகுதியில் உள்ள 85 சதவீத வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டதற்கான ஆதாரம் கைப்பற்றப்பட்டது. அமைச்சர்கள் மேற்பார்வையில் வாக்காளர்களுக்கு ரூ.4000 வீதம் சுமார் ரூ.89 கோடி வினியோகம் செய்யப்பட்டது, கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மூலம் தெரியவந்தது.

பணம் மட்டுமல்லாமல் வாக்காளர்களுக்கு பரிசுப் பொருட்கள் வழஙகப்பட்டதையும், தேர்தல் பார்வையாளர்கள் கண்டறிந்தனர். இதனால், ஆர்.கே நகர் இடைத்தேர்தல் ரத்து செய்வதாக அறிவித்த தேர்தல் ஆணையம், 29 பக்க விளக்க அறிக்கையும் வெளியிட்டிருந்தது. ஆர்.கே நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான உகந்த சூழல் உருவாகும் போது தேர்தல் நடத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.

இந்த நிலையில், ஆர்.கே நகர் தேர்தல் வரும் டிசம்பவர் 31-ம் தேதிக்குள் நடத்தி முடிக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் ஏ.கே ஜோதி தெரிவித்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close