44ஆவது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த ஜூலை 28ஆம் தேதி சென்னை அடுத்த மாமல்லபுரத்தில் தொடங்கி நடைபெற்றது. இந்தியாவில் முதல் முறையாக போட்டி நடைபெற்றது.180க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் போட்டியில் பங்கேற்றனர்.
2 வாரங்கள் நடைபெற்ற போட்டிகள் நேற்று (ஆகஸ்ட் 9) நிறைவு பெற்றது. நிறைவு விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், அமைச்சர்கள், சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவர் அர்காடி துவார்கோவிச், துணைத்தலைவர் விஸ்வநாதன் ஆனந்த், செஸ் வீரர், வீராங்கனைகள் கலந்துகொண்டனர்.
கண்கவர் கலைநிகழ்ச்சிகளுடன் செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா நடைபெற்றது. சிறந்த அணிகள், சிறந்த சீருடை அணிந்ததற்கு எனப் பல்வேறு பிரிவுகளில் விருது வழங்கப்பட்டன. இந்திய அணிகள் ஓபன் பிரிவு, பெண்கள் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றது.

இந்நிலையில் விழா மேடையில் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பங்காற்றிய முன்னாள் முதலமைச்சர்கள் ராஜாஜி, காமராஜர், அண்ணா, கருணாநிதி, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் படங்கள் வரிசையாக இடம்பெற்றது. இது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. இருப்பினும் எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வத்தின் படங்கள் இடம்பெறவில்லை.
தமிழகத்தில் திமுக, அதிமுக கட்சிகள் பிரதான கட்சிகளாக உள்ளன. திமுக தற்போது ஆட்சியில் உள்ள நிலையில், அதிமுகவின் முதலமைச்சர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் இடம் பெற்றது பாராட்டைப் பெற்றது. தமிழ்நாட்டிற்கு அவர்கள் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் படங்கள் வைக்கப்பட்டுள்ளன.
தொடக்க விழா நிகழ்ச்சியில் இடம்பெற்ற தமிழ்நாட்டின் வரலாறு பற்றிய ஒலி, ஒளி நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்கள் அங்கீகரிக்கப்பட்டார்கள். பெண் குழந்தைகள் வளர்ச்சி, அதிகாரத்திற்கு ஜெயலலிதா ஆற்றிய பங்கை குறிப்பிட்டு அந்நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. நிறைவு விழா நிகழ்ச்சியில் பேசிய அர்காடி துவார்கோவிச், "குறுகிய நாட்களில் போட்டி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டது. 4 மாதத்தில் அதிசயத்தை நிகழ்த்தி விட்டீர்கள். நன்றி" எனத் தெரிவித்தார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil