கடலூர் மாவட்டம், சிதம்பரம் நடராஜர் கோயில் மார்கழி ஆருத்ரா தரிசன விழாவையொட்டி இன்று வியாழக்கிழமை தேரோட்டம் நடைபெற்றது. நாளை தரிசனத்தை முன்னிட்டு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
பிரசித்திபெற்ற இந்தக் கோயிலில் மார்கழி ஆருத்ரா தரிசன விழா கடந்த டிச.28-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழாவில் புதன்கிழமை (ஜன.4)தங்க ரதத்தில் வெட்டுக்குதிரை வாகனத்தில் பிச்சாண்டவர் வீதி உலா நேற்று நடைபெற்றது.
ஆருத்ரா தரிசன விழாவின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான தேரோட்டம் வியாழக்கிழமை இன்று காலை நடைபெற்றது. இதில் சித்சபையில் வீற்றுள்ள மூலவரான ஸ்ரீமந்நடராஜ மூர்த்தி,சிவகாமசுந்தரி அம்பாள், உற்சவமூர்த்திகளான ஸ்ரீவிநாயகர், ஸ்ரீசுப்பிரமணியர், ஸ்ரீசண்டிகேஸ்வரர் ஆகிய ஐவரும் தனித் தனி தேர்களில் வீதி வலம் வந்தனர். தொடர்ந்து இரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன் முகப்பு மண்ட பத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறுகிறது.

விழாவில் நாளை வெள்ளிக்கிழமை அதிகாலை சூரிய உதயத்துக்கு முன்பு 4 மணி முதல் 6 மணி வரை ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந் நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 10 மணிக்கு சித்சபையில் ரகசிய பூஜையும், பஞ்ச மூர்த்திகள் வீதி உலா வந்த பிறகு பிற்பகல் 3 மணிக்கு ஆருத்ரா தரிசனமும், ஞானகாசசித் சபை பிரவேசமும் நடைபெறுகிறது. சனிக்கிழமை இரவு பஞ்சமூர்த்திகள் முத்துப்பல்லக்கு வீதி உலாவுடன் உற்சவம் முடிவடைகிறது.

சிதம்பரம் நடராஜர் கோயில் மார்கழி ஆருத்ரா தரிசன விழாவையொட்டி, கடலூர் மாவட்டடத்துக்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கி.பாலசுப் ரமணியம் புதன்கிழமை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது; நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா நாளை வெள்ளிக்கிழமை (ஜன.6) நடைபெற உள்ளதால் அன்றைய தினம் கடலூர் மாவட்டத்தில் உள்ள மாநில அரசு அலுவலகங்கள், கல்வி நிலையங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.

சிதம்பரத்தில் இன்று தேரோட்டத்தை முன்னிட்டு தேரோடும் வீதிகளில் மாக்கோலம் இட்டு, நடனமாடி சிவ பக்தர்கள் பரவசத்துடன் தேரை வடம் பிடித்து நிலைக்கு இழுத்து வந்தனர்.
செய்தி: க.சண்முகவடிவேல்