பால்ய திருமணம்; சிதம்பரம் தீட்சிதர் கைது

பால்ய திருமணம் செய்து வைத்த சிதம்பரம் தீட்சிதர் கைது; காவல்துறை நடவடிக்கை

பால்ய திருமணம்; சிதம்பரம் தீட்சிதர் கைது

சிதம்பரத்தில் உள்ள நடராஜர் கோயில் மிகவும் புராண பெருமை வாய்ந்தது. சைவர்களின் கோயில் என்று அழைக்கப்படும் இந்த கோயில் தற்போது அங்குள்ள பொது தீட்சிதர்களால் நிர்வகிக்கப்பட்டு வருகிறது. கோயிலுக்கு என்று சில கட்டுப்பாடுகளையும், மரபுகளையும் வைத்துள்ளது போல தங்களுக்கான சில மரபுகளையும் அவர்கள் கடைபிடித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக தங்கள் குழந்தைகளுக்கு பால்ய விவாகம் செய்து வைப்பதையும் அவர்கள் வழக்கமாக வைத்திருக்கின்றனர்.

இதற்கு சமூக ஆர்வலர்கள் உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பால்ய விவாகம் நடைபெறுவது இலை மறை காயாக இருந்தது. அப்படியே நடக்கும் பால்ய திருமணங்கள் குறித்து புகார் கொடுப்பதற்கு யாரும் முன் வராத நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் சோமசேகர தீட்சிதர் என்பவர் தனது 14 வயது மகளுக்கு திருமணம் செய்து வைத்தது குறித்து குற்றச்சாட்டுகள் எழுந்தன. இது குறித்து கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் ஒன்று அளிக்கப்பட்டிருந்தது.

இதையும் படியுங்கள்: தமிழகத்தில் பாப்புலர் பிரண்ட் ஆஃப் இந்தியா தொடர்புடைய இடங்களில் என்.ஐ.ஏ சோதனை

சிதம்பரம் வடக்கு வீதியை சேர்ந்தவர் தீட்சிதர் சோமசேகர். இவர் தன்னுடைய 14 வயது மகளை, தற்போது 10-ம் வகுப்பு படித்து வரும் மாணவியை கடந்த ஆண்டு, அதே பகுதியை சேர்ந்த சக தீட்சிதரின் 24 வயது மகனுக்கு குழந்தை திருமணம் செய்து வைத்ததாக புகார் எழுந்தது.

இந்நிலையில் திருமணமான சிறுமி மற்றும் அவரது தந்தையை விசாரணைக்காக கடலூர் மாவட்ட டெல்டா பிரிவு போலீசார் அழைத்து வந்தனர். அந்த சிறுமியை கடலூர் மாவட்ட சமூக நல அலுவலர் சித்ரா விசாரணை நடத்தினார். அப்போது சிறுமி தனக்கு திருமணம் நடந்ததை ஒப்புக் கொண்டார்.

இது பற்றி சமூக நல துறை மகளிர் நல அலுவலர் தவமணி கடலூர் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். இதனையடுத்து சிறுமியின் தந்தை சோமசேகர் தீட்சிதர் (46) கைது செய்யப்பட்டார்.

மேலும், திருமணம் செய்த மாப்பிள்ளை மற்றும் அவரது குடும்பத்தினர் தலைமறைவாகிவிட்ட நிலையில், போலீசார் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகின்றனர்.

சிதம்பரம் தீட்சிதர்கள் மேல் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுப்பப்பட்டு வரும் நிலையில் பால்ய விவாக குற்றச்சாட்டு காரணமாக கோயில் தீட்சிதர் ஒருவர் கைது செய்யப்பட்டு இருப்பது சிதம்பரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

க. சண்முகவடிவேல்

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: Chidambaram theekshidar arrested for child marriage

Exit mobile version