கோவை கருமத்தம்பட்டியில் விசைத்தறியாளர்களுக்கு 750 யூனிட்டாக வழங்கப்பட்ட இலவச மின்சாரத்தை ஆயிரம் யூனிட்டாக உயர்த்தி தந்த தமிழக அரசுக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையிலான பாராட்டு விழா விசைத்தறி கைத்தறியாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்றது.
அதில் கலந்துகொண்ட பின்னர் நெசவாளர்களிடையே உரையாற்றிய முதலமைச்சர் மு.க ஸ்டாலின், நெசவாளர்கள் துயர்துடைக்க எப்போதும் தயாராக உள்ள இயக்கம் தான் திமுக என்ற பெருமிதம் தெரிவித்தார்.
தொடர்ந்து, விசைத்தறியாளர்களுக்கு மின் கட்டண சலுகை வழங்கியதில் நன்றி தெரிவிக்க ஒன்றுமில்லை என்று கூறிய அவர், நான் எனது கடமையைத்தான் செய்தேன் என்று குறிப்பிட்டார்.
பின்னர், “தி.மு.க தொடங்கப்பட்ட காலத்திலேயே நெசவாளர்கள் தயாரித்த துணிகளை தோளில் சுமந்து கொண்டு தெருத்தெருவாக விற்று கொடுத்து இயக்கம் தான் திமுக.
திமுக எப்பொழுதெல்லாம் ஆட்சிக்கு வருகிறதோ அப்பொழுதெல்லாம் நெசவாளர்களுக்கு உதவியாக இருந்து வருகிறது.
இதை யாரும் மறந்து விட முடியாது. தற்போதைய திராவிட மாநில அரசு பல்வேறு திட்டங்களை செயல்படுத்திக் கொண்டு வருகிறது.
திமுக ஆட்சியில் தமிழக அரசு அனைத்திலும் சிறந்து விளங்கி வருவது சிலருக்கு பொறுக்கவில்லை” என்றார். தொடர்ந்து, தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறைந்த அமைதியான அனைவருக்கும் வாழ்வு தரும் மாநிலமாக திகழ்ந்து வருவதாக பெருமை தெரிவித்த முதலமைச்சர் மு க ஸ்டாலின், வதந்திகளையும் பொய்களையும் பரப்பி இந்த ஆட்சிக்கு களங்கத்தை ஏற்படுத்த முயற்சிக்கிறார்கள் என குற்றம் சாட்டினார்.
எனது பொது வாழ்க்கையில் இது போன்ற எத்தனையோ பூச்சாண்டிகளை பார்த்தவன் நான் என கூறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், முத்துவேல் கருணாநிதியின் மகன் ஸ்டாலினாகிய நான் இந்த சலசலப்புக்கெல்லாம் அஞ்சமாட்டேன் என பேசினார்.
போற்றுவோர் போற்றட்டும் புழுதி வாரி தூற்றுவோர் தூற்றட்டும் தொடர்ந்து மக்கள் சேவை ஆற்றுவேன் என்றும் அவர் உறுதிப்பட கூறினார்.
இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் செந்தில் பாலாஜி, வெள்ளகோவில் சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், காந்தி, முத்துச்சாமி, பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் சண்முக சுந்தரம் , கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளர் ஈஸ்வரன் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் பி.ரஹ்மான்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/