15 வருடங்களாக குழந்தைகளிடம் கதை சொல்வதும், அவர்கள் உருவாக்கும் கதையை ஆவணப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார் குமார் ஷா. கலை வடிவங்களின் மூலம் குழந்தைகளின் உணர்வுகளை வெளிப்படுத்த ஒரு பாதையை உருவாக்கி கொடுத்திருக்கிறார். இந்தியா முழுவதும் சைக்கிளில் பயணித்து, பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த குழந்தைகளை சந்தித்து அவர்களிடமும் கதையை பகிர்ந்துகொண்டுள்ளார். அவரிடம் இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ் சார்பாக உரையாடியதில் இருந்து தொகுக்கப்பட்ட நேர்காணல்.
பிறந்த ஊர், சிறுவயது வாழக்கை குறித்து பகிர்ந்துகொள்ள முடியுமா?
எனது சொந்த ஊர் ஸ்ரீவில்லிபுத்துரில் உள்ள பாட்டக்குளம். ஆனால் வளர்ந்தது வெவ்வேறு ஊர்களில்தான். பொறியியல் படிப்பு படிக்கும் வரை ஸ்ரீவில்லிபுத்தூர், அருப்புக்கோட்டை, சேலம், சென்னை என்று வெவ்வேறு ஊர்களில் வாழ்ந்தேன். வீட்டில் எனக்கு வைத்த பெயர் ’ஜெயசீலன்’ ஆனால் படித்த சான்றிதழ்களில் குமார் என்றுதான் இருக்கிறது. முகநூலில் இரண்டாம் பெயர் கேட்டதால் ‘ ஜார்ஜ் பெர்னாட் ஷா’ பெயரிலிருந்து ’ஷா’வை மட்டும் சேர்த்து ’குமார் ஷா’ என்று வைத்துக்கொண்டேன். அந்த பெயர்தான் இந்நாள் வரை பின்தொடர்கிறது. 1 முதல் 3ம் வகுப்பு வரை ஸ்ரீவில்லிபுத்தூரிலும் , 4 முதல் 8ம் வகுப்புவரை அருப்புக்கோட்டையில் உள்ள ஒரு சி.எஸ்.ஐ போர்டிங் ஸ்கூலில் படித்தேன், அதே அருப்புக்கோட்டையில் 9 மற்றும் 10ம் வகுப்பை இஸ்லாமியப் பள்ளியில் படித்தேன். 2008ம் ஆண்டு சேலத்தில்தான் டிப்ளமோ ( இ.சி.இ) படித்தேன்.
சிறுவயதிலிருந்து பல்வேறு வேலைகள் பார்த்திருக்கிறேன். ஹோட்டல் வேலை , பெயின்ட் அடிப்பது, சூப்பர் மார்க்கெடில் என்று பல்வேறு வேலைகளை செய்திருக்கிறேன். அதுபோலத்தான் டிப்ளமோ படிப்பை முடித்த பிறகு டேட்டா எண்ட்ரி, மொபைல் சர்வீஸ் செண்டர்களில் வேலை செய்தேன். கிடைத்த வேலைகளில் சேர்ந்துவிடுவேன் . இதுபோல நான் டிப்ளமோ படிக்கும்போதே குழந்தைகளோடு பயணிக்கத் தொடங்கினேன். நான் சில வருடங்கள் சிறுவயதில் ‘ஆதரவற்றோர் விடுதியில் தங்கி படித்தேன் என்பதால், டிப்ளமோ படிக்கும்போது, குழந்தைகள் இருக்கும், ஆதரவற்றோர் இல்லங்களுக்கு சென்று உணவு வழங்குவது, மரம் நடுவது என்றுதான் முதலில் செய்துகொண்டிருந்தேன். டிப்ளமோ முடித்த பிறகு ( 2012) குழந்தைகளிடம் கதைசொல்லாம், அவர்கள் உருவாக்கும் கதைகளை பதிவு செய்யலாம் என்ற எண்ணம் தோன்றியது.
பொது சமூகத்தில் வாழும் பெரும்பாலான ஆண்களை போல்தான் அப்பாவும் இருந்தார், அவர் குடும்பத்தை விட்டுச் சென்ற பிற்பாடு ஏற்படும் அழுத்தங்களை அம்மா துணிவுடன் எதிர்கொண்டார். அம்மா 11ம் வகுப்பு மட்டுமே படித்திருந்தபோதும், பள்ளியில் வார்டனாக வேலையில் சேர்ந்து குடும்பத்தின் முழுப் பொறுப்பையும் எடுத்துக்கொண்டார்.
வேறு சமூகப் பணியில் உங்களை ஈடுபடுத்திக்கொண்ட அனுபவத்தைப் பகிர்ந்துகொள்ள முடியுமா?
இரண்டு வருடங்கள் நான் மனநல காப்பகத்தில் பணிபுரிந்தேன். அதை நான் வேலையாக பார்க்கவில்லை. வீதிகளில் உள்ள ஆதரவற்ற மனநலம் பாதிக்கப்பட்டவர்களை கண்டுபிடித்து, அவர்களை காப்பகத்திற்கு கொண்டு வருவது. மேலும் காப்பகத்தில் இருக்கும் நபர்களை கவனித்துக்கொள்வது போன்ற பணிகளை செய்தேன். அந்த நேரத்தில் கிட்டதிட்ட ஒரு வருடம் தங்கும் இடம் இல்லாமல், நண்பர்களின் வீடுகளில் தங்கிக் கொண்டிருந்தேன். தினமும் எங்கு தங்குவது என்பதே எனக்கு ஒரு அழுத்தமாக இருந்தது. சில நண்பர்கள் தங்கிக்கொள்ளச் சொல்வார்கள். சிலர் நிராகரித்துவிடுவார்கள். எனக்கே இது சவாலாக இருக்கும்போது, வீடுகள் இல்லாத மனநல பாதிக்கப்பட்டவர்களின் நிலையை நாம் சிந்தித்து பார்க்க வேண்டும். பரிதாபம் அல்லது கருணை அடிப்படையில் நான் இதை சொல்லவில்லை. தங்கும் இடம் இல்லாத நாட்களில் மாலை வந்தாலே பயம் என்னை ஆட்கொள்ளத் தொடங்கும், இன்று இரவு எங்கே தங்குவது ? என்ற கேள்வி என்னை அதிகமாக பாதிக்கும். அந்த இரவை கடந்ததும், ஒரு நம்பிக்கை வரும். எனக்கு நண்பர்கள் உதவினார்கள், இதனால் என்னால் கடக்க முடிந்தது. மனநல பாதிக்கப்பட்டவர்களின் நிலை அப்படியில்லை, அவர்களை யார் வேண்டுமானாலும் துன்புறத்தலாம். நமது இரக்கமான பார்வைகூட அவர்களைக் காயப்படுத்தலாம். உலகத்தில் இருக்கும் எல்லா உயிர்களுக்கும் தூங்கும் நேரத்திலாவது நிம்மதி வேண்டுமல்லவா. ஒருவித பயத்தில், நடுக்கத்தில் எல்லா இரவையும் கடப்பது ஒரு உயிருக்கு நாம் இழைக்கும் அநீதிதானே.
நம்மைப்போலத்தான் இந்த பூமியில் அவர்களும் பிறந்திருக்கிறார்கள். காய்ச்சல், வயிற்று வலி இதுபோன்ற உடல் நிலை பாதிக்கப்படும் போது, அது வெளிப்படையாக தெரிவதாலும், உடல் நிலை பாதிப்பு தொடர்பாக விழிப்புணர்வு பல காலங்கள் இருப்பதால் உடல் நலப் பிரச்சனைகளுக்கு அதிக கவனம் இருக்கிறது. நண்பர் ஒருவர் கூறும்போது, இதைச் சொன்னார். குடி பழக்கம் கேடு என்று எச்சரிக்கை அறிவிப்பு திரைப்படங்களில் வெளியாகிறது. ஆனால் இந்தச் சொல் மனதை பாதிக்கும் என்று யாரும் எச்சரிக்கை செய்வதில்லை . மற்றவர்கள் காயப்படும்படி பேச வேண்டாம் என்ற புரிதல் இங்கே யாருக்கும் இல்லை. மனநோய் தொடர்பான எந்த வரிகளும் நமது பொது சமூகத்தில் புழக்கத்தில் இல்லை. அடித்தால் மட்டுமே வலி என்றுதான் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக குழந்தைகளிடம் பேசும்போது, நான் கூறுவது இதுதான் “ அவர்களும் உங்களைபோன்று வாழ்ந்தவர்கள்தான், ஆனால் ஏதோ ஒரு சூழலில்தான் இந்த பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது. அவர்களின் பாதிப்பு தொடர்பாக இங்கே யாரும் பேசுவதில்லை ‘ என்று சொல்வேன்.
பணத்தின் தேவையிலிருந்து எப்படி உங்களை விலக்கி வைத்திக்கொள்ள முடிகிறது? பொருள் தேடல் உங்களுக்கு அழுத்தம் கொடுக்கவில்லையா?
பொருள் தேடல் அல்லது பணத்திற்கான தேவை எனக்கும் இருக்கிறதுதான். குழந்தைகளிடம் கதை சொல்ல வேண்டும் அவர்களிடம் கதை கேட்ட வேண்டும் என்பது எனது ஆசையாக இருந்தது. ஆனால் அந்த இடத்திற்கு வருவதற்கு பல்வேறு வேலைகளை நான் செய்து பார்த்திருக்கிறேன். அந்த பயணத்தின் தொடர்ச்சியாகத்தான், இங்கு வந்து சேர்ந்திருக்கிறேன். பசி, கேட்டது கிடைக்காத சூழலை சிறு வயதில் கடந்ததால், எனது தேவை என்ன என்பதில் எனக்கு தெளிவான நிலைபாடு இருக்கிறது. தற்போது குழந்தைகளிடம் கதை சொல்வதிலும், கதை கேட்பதில் இருந்து சிறிய தொகை கிடைக்கிறது. அதை அம்மாவிற்கு அனுப்பிவிடுவேன். எனது பயணச் செலவுகளை நண்பர்கள் பார்த்துக்கொள்கிறார்கள்.
உங்களின் ஒட்டுமொத்த செயல்பாடுகள் குறித்து சுருக்கமாகச் சொல்ல முடியுமா?
நண்பர்களுடன் இணைந்து ’அறம்’ என்ற அறக்கட்டளை தொடங்கி செயல்பட்டோம். தற்போது குழந்தைகளிடம் ’களிமண்’ என்ற பெயரில் இயங்குகிறோம். இதிலும் நண்பர்களின் பங்கு இருக்கிறது.
எல்லோருக்கும் சிறு வயதில் ஏதேனும் ஒரு கற்பனையின் மீது ஆசை இருக்கும். நான் படிக்கும்போது, சீனியர் அண்ணன்மார்கள் வந்து கதை சொல்வார்கள். நாடகம் போடுவார்கள். நான் பல்வேறு வேலை பார்த்தபோது, கதை சொல்லத் தொடங்கினேன். குழந்தைகளிடம் கதைகளின் மூலமாக ஒரு பேச்சுவார்த்தை நடத்த முடியும் என்பதில் எனக்கு அதீத நம்பிக்கை இருந்தது. நான் வெறும் 4 கதைகளைத்தான் சரியாக சொல்லியிருப்பேன். ஆனால் அந்த கதைகளுக்கு குழந்தைகள் எதிர்வினை ஆற்றுவது. அவர்களே புதிய கதைகளை உருவாக்குவது. இப்படியாக எனக்கு வேறு புதிய அனுபவத்தை குழந்தைகள் கொடுத்தார்கள். நம்மிடம் உள்ள சிக்கலே குழந்தைகளுக்கு எதுவும் தெரியாது, நாம்தான் அதை கற்றுக்கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்தில் அவர்களை அணுகுவதுதான். நம்மில் எத்தனை பேர் குழந்தைகளை பேச அனுமதித்து, அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலை கூறியிருக்கிறோம். பதில் தெரியவில்லை என்றால் தெரியவில்லை என்று சொல்லியிருக்கிறோம்.
நான் வெறும் கதை சொல்வதோடு விட்டுவிடவில்லை, குழந்தைகளுடன் சேர்ந்து கதைகளை உருவாக்குவேன். அப்படி குழந்தைகள் உருவாக்கிய கதைகளை வெளிப்படுத்த கலையின் பல்வேறு வடிவங்களை அவர்கள் சோதனை செய்து பார்ப்பார்கள். படமாக வரைவது, பொம்மைகள் செய்வது, பாடலாக மாற்றுவது அல்லது வீதி நாடகம் போல் வெளிப்படுத்த முயற்சிப்பார்கள். எதையும் பேச விரும்பாத குழந்தைகளை கட்டாயப்படுத்துவதில்லை. எப்போதுமே பெரியவர்கள் பார்வையில் உருவான கதைகளை மட்டுமே அவர்களிடம் சொல்லியிருக்கிறோம். அதை எப்படி குழந்தைகள் பார்க்கிறார்கள் என்ற கருத்தை கூட நாம் கேட்பதில்லை.
நான் டிப்ளமோ படிக்கும்போது முதலில் அறம் என்ற அறக்கட்டளையை நண்பர்களுடன் தொடங்கினேன். இதன் மூலம் 7 வருடங்கள் தொடர்ந்து செயல்பட்டோம். இதைத்தொடர்ந்து ’கதை சொல்றோம் வாங்க’ என்ற அமைப்பை தொடங்கினோம். சிறிது காலம் இதில் செயல்பட்டோம். தொடர்ந்து ’space’ என்ற டிராவல் ஸ்கூலை நடத்தினோம். இது ஒரு மாதம் மட்டுமே செயல்படும் டிராவல் ஸ்கூல். தற்போது ’களிமண்’ என்ற அமைப்பை நடத்தி வருகிறோம். இதை தொடங்கும் போது எனக்கு குழந்தைகளிடம் எப்படி செயல்பட வேண்டும் என்ற எந்த முன் அனுபவமும் இல்லை. சில தவறுகளை செய்துதான் , இந்நாள் வரை கற்றுக்கொண்டே இருக்கிறேன்.
இந்த 15 வருடங்களில், நகரத்தைவிட கிராமப் பகுதியில் உள்ள பள்ளிக் குழந்தைகளிடம் வேலை செய்திருக்கிறேன். இந்தியா முழுவதும் சைக்கிளில் பயணம் செய்யும்போது, இந்தியா முழுவதிலும் உள்ள பல்வேறு மொழி பேசும் குழந்தைகளிடம் வேலை செய்திருக்கிறேன். நேபாளம், ராஜஸ்தான், குஜராத் இப்படி பல்வேறு மாநிலத்தில் உள்ள குழந்தைகளிடம் வேலை செய்த அனுபவம் மிகப் பெரியது.
கிராமங்களில் சாதியின் தாக்கம் அதிகமாக வெளிப்படும். குறிப்பாக குழந்தைகளிடத்தில் வெளிப்பட்டு இருக்கிறதா? சாதியற்ற பார்வையை எப்படி அவர்களுக்கு கொண்டு செல்வது?
நான் தமிழகத்தில்தான் பிறந்திருக்கிறேன். பல்வேறு ஊர்களில் படித்து, பணிபுரிந்திருக்கிறேன் என்பதால் சாதியின் உண்மையான முகம் குறித்தும் அது எப்படி செயல்படும் என்பதை மிக அருகில் இருந்து உணர்ந்திருக்கிறேன். நான் கதை சொல்லச் செல்லும்போது, மாணவர்கள் கையில் கயிறு கட்டியிருந்தால், இது என்ன கயிறு என்று கேட்பதுண்டு. அது சாதி கயிறாக இருந்தால் அதை கிழற்றி வைத்துவிட்டு, வகுப்புக்குள் வர வேண்டும் என்று சொல்வேன். தனிப்பட்ட எந்த அடையாளத்தையும் வெளிப்படுத்த வேண்டாம் என்று கூறுவேன். சக உயிரை சமமாக மதிக்க வேண்டும் என்பதுதான் முக்கியம் என்பது தொடர்பாக உரையாடலை தொடங்க முயற்சிப்பேன்.
உடல் ரீதியான கேலிகள் தொடர்பான கேள்விகளை எழுப்புவேன். பெண் குழந்தைகள் சுத்தம் செய்தால்தான் சரியாக இருக்கும் என்ற தவறான புரிதலை, ஆண் குழந்தைகள் சுத்தம் செய்தால் வகுப்பறை சுத்தமாகாதா ? என்ற அடிப்படை கேள்வி எழுப்புவதன் மூலம், அவர்களிடம் உரையாடுவேன். இந்த மாற்றத்தை நாம் அவர்களுக்கு சொல்லித் தர வேண்டும் என்பதில்லை. இதைப் பற்றிய உரையாடலை நிகழ்த்தினாலே போதுமானதாக இருக்கும். நமது பள்ளிகளில் எல்லா பாடத்திற்கும் ஆசிரியர்கள் இருக்கிறார்கள். ஆனால் ஏன் மனநலம் தொடர்பாக எந்த ஆலோசகரும் பள்ளியில் பணியமர்த்தப்படவில்லை?
இந்தியா முழுவதும் சைக்கிள் பயணத்தை செய்துள்ளீர்கள், அந்த அனுபவம் பற்றி ?
சைக்கிள் பயணத்திற்கு முன்பாக, பேருந்து, ரயிலில் பல்வேறு இடங்களுக்கு பயணித்து இருக்கிறேன். மற்ற பயணங்கள் மேற்கொள்ள குறிப்பிட்ட பயணச் செலவுக்கு பணம் தேவைப்படும். ஆனால் சைக்கிள் அப்படியில்லை, பஞ்சர் ஆனால், அதை சரி செய்துவிடலாம். இந்த பயணத்தின்போது, பஞ்சர் ஒட்டவும் கற்றுக்கொண்டேன். குறிப்பாக இந்த பயணத்தில் பல்வேறு மாநிலத்தில் உள்ள பள்ளி மாணவர்களை சந்தித்து, அவர்களிடம் கதை சொல்ல முடிந்தது. மொழி ஒரு தடையாக இல்லை. சில மொழிகளில் தெரிந்த ஒரு, சில வார்த்தைகளை வைத்து கதை சொல்வேன். எனது உடல் மொழி மூலமாக குழந்தைகள் புரிந்துகொள்வார்கள். அவர்கள் தங்கள் தாய்மொழியில்தான் கதை சொல்வார்கள். அவர்கள் உருவாக்கும் கதைகளை மையப்படுத்தி பொம்மைகள் செய்யச் சொல்லித் தந்தேன்.
இந்த பயணத்தின்போது உடல் நிலை பாதிக்கப்பட்ட நாட்களும் இருந்திருக்கிறது. தொடர்ந்து சில நாட்கள் ஒரே இடத்தில் ஓய்வு எடுத்திருக்கிறேன். உடல் உபாதைகளுடன் சைக்கிளை இயக்கி இருக்கிறேன். உடலில் வெயில்பட்ட இடங்கள் முழுவதும் கருத்துவிட்டது. இதை நாம் கடந்துதான் பயணம் செய்ய வேண்டும். வெவ்வேறு மாநிலத்திற்கு செல்லும்போது பெயர் கேட்பார்கள், சாதியை கேட்பார்கள். எனது பெயரின் முடிவில் ’ஷா’ இருப்பதால் எனது சாதி மற்றும் மதத்தை சிலரால் கண்டுபிடிக்க முடியவில்லை. எனது இஸ்லாமிய நண்பர்கள் பயணம் செய்தபோது, அவர்களின் பெயர்களை வைத்து அவர்கள் தாக்கப்பட்ட சம்பவமும் நிகழ்ந்திருக்கிறது. எனது உருவத்தை வைத்து என்னை தீவிரவாதி, சாமியர் என்று கருதிய நிகழ்வுகளும் நடந்திருக்கிறது. ஒரு முறை பச்சை நிற துண்டை அணிந்து பயணித்தேன். அப்போது சிலர் என்னை பின்தொடர்ந்து வந்து ‘நான் யார் என்று விசாரித்தார்கள்’. என்னை பார்த்ததும் கருப்பாக, உயரமாக இருக்கிறான், என்று தீண்டாமை உணர்வுடன் தண்ணீர் பாட்டிலை எரிந்த நிகழ்வும் நடந்திருக்கிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.