சீனாவில் 248 ஏக்கரில் பிரம்மாண்ட ’பாண்டா’ வடிவில் சூரிய மின்சக்தி நிலையம் அமைக்கப்பட்டுள்ளது மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
சீனாவின் தாதோங் பகுதியில் அந்நாட்டு எரிசக்திக் குழு 248 ஏக்கரில் பிரம்மாண்ட ‘பாண்டா’ வடிவில் சூரிய மின்சக்தி பேனல்களை அமைத்துள்ளது. வழக்கமாக வரிசையாக அமைக்கப்படும் சூரிய மின்சக்தி பேனல்கள் பாண்டா வடிவத்தில் அமைக்கப்பட்டிருப்பது குழந்தைகளை கவர்ந்துள்ளது.
இது முதற்கட்டமாக வடிவமைக்கப்பட்ட சோலார் பேனல்கள் மட்டும் தான். அடுத்தக்கட்டமாக இந்த மின்நிலையத்தில் மற்றொரு ‘பாண்டா’ வடிவிலான சோலார் பேனல்கள் இந்தாண்டு இறுதியில் அமைக்கப்பட உள்ளது.
இன்னும் 25 ஆண்டுகளில் இந்த மின்நிலையத்தின் மூலம் ஒரு மணிநேரத்திற்கு 3.2 பில்லியன் மின்சாரத்தை உற்பத்தி செய்ய முடியும் என இதனை கட்டமைத்துள்ள நிறுவனம் தெரிவித்துள்ளது. மில்லியன் டன் கணக்கிலான நிலக்கரியை இத்திட்டத்தின் மூலம் சேமிக்க முடியும் எனவும், 2.74 மில்லியன் டன் அளவில் கார்பன் வாயு வெளியிடுதலை குறைக்க முடியும் எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இளைஞர்களிடையே புதுப்பிக்கத்தக்க வளங்களை எரிசக்திகளாக பயன்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் வகையில் பாண்டா வடிவில் சோலார் நிலையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. வரும் 5 ஆண்டுகளில் சீனா முழுவதும் பாண்டா வடிவிலான சூரிய மின்சக்தி நிலையங்களை அமைக்கவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.