"இப்படியே விட்டால் சின்னத்தம்பி செத்துருவான்"! - விடாமல் பாசப் போராட்டம் நடத்தும் யானை

அவன் இறப்பதை நாங்கள் பார்ப்பதை விட, கும்கியாக உயிருடன் எங்களுடன் இருப்பது எவ்வளவோ மேல்

கோவை ஆனைகட்டி, மாங்கரை, சின்ன தடாகம், பெரிய தடாகம், பன்னிமடை, ஆகிய பகுதிகளில் காட்டு யானை ஊருக்குள் புகுந்து விளைநிலங்களை சேதப்படுத்தியதாக விவசாய சங்கத்தினர் புகார் தெரிவித்து போராட்டங்கள் நடத்தி வந்தனர். இந்த நிலையில், கடந்த டிசம்பர் மாதம் ‘விநாயகன்’ என்ற ஒற்றை காட்டு யானையை வனத்துறையினர் பிடித்து முதுமலை புலிகள் காப்பகத்தில் விட்டனர்.

அதனைத் தொடர்ந்து, கடந்த 25ம் தேதி பெரிய தடாகம் பகுதியில் ‘சின்னத்தம்பி’ என்ற மற்றொரு யானைக்கு மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர். அப்போது லாரியில் ஏற்றும் போது சின்னத் தம்பியின் தந்தங்கள் உடைந்தது. மேலும், கும்கி யானைகள் குத்தியதில் அதன் உடலில் காயங்கள் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது.

இதனையடுத்து, லாரி மூலம் டாப்சிலிப் புலிகள் காப்பகத்திற்கு கொண்டு செல்லப்பட்ட சின்னத்தம்பி யானை வரகளியாறு வனப்பகுதியில் நள்ளிரவில் விடப்பட்டது. இந்த சின்னத்தம்பி யானையை தேடி ஊருக்குள் தாய் யானை மற்றும் குட்டியானை சுற்றி வரும் நிலையில், வனப்பகுதியில் விடப்பட்ட சின்னத்தம்பி மீண்டும் அதன் பழைய இடத்திற்கு செல்ல முயற்சித்து, டாப்சிலிப் வனப்பகுதியில் இருந்து 3 நாட்களில் 100 கிலோ மீட்டருக்கு மேலாக நடந்தே வந்து, பொள்ளாச்சியை அடுத்த அங்கலக்குறிச்சி கிராம பகுதிக்குள் புகுந்தது.


தகவல் அறிந்து விரைந்த வனத்துறையினர், சின்னத்தம்பி யானையை வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டனர். ஆனால், இதுவரை எந்த முயற்சியும் பலனளிக்கவில்லை.

சின்னத்தம்பியை சுற்றி பொதுமக்களும், வனத்துறையினரும் சூழ்ந்து இருப்பதால் ஊருக்குள்ளேயே சுற்றி சுற்றி வருகிறது. பொள்ளாச்சியை அடுத்த வரகளியாறு, அங்கலக்குறிச்சி, கோட்டூர், உடுமலைப்பேட்டை தீபாலபட்டி, அம்மாபட்டி, வழியாக வந்து கிருஷ்ணபுரம் பகுதியில் சுற்றியது.

உடுமலை பகுதிக்குள் 100 கிலோமீட்டருக்கு மேல் உணவின்றி சுற்றித் திரிந்ததால் அமராவதி சர்க்கரை ஆலை அருகே சின்னத்தம்பி யானை மயங்கி விழுந்தது. பின்னர் சிறிது நேரத்திற்கு பிறகு எழுந்த சின்னத்தம்பி வனத்துறையினர் கட்டுப்பாட்டில் இருந்து தப்பி, ஆனைமலை, உடுமலை பகுதிகளில் உலா வந்தது.


இந்நிலையில், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சின்னத்தம்பி கும்கி யானையாக மாற்றப்படும் என்று தெரிவித்திருந்தார். இதற்கு, சமூக தளங்களில் பலரும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். உறவுகளிடம் இருந்து பிரித்து, அதனை கும்கியாக மாற்றுவது தவறு என்றும், ‘உங்கள் குடும்பத்தில் இருந்து உங்களைப் பிரித்து அந்தமானில் விட்டால், நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா?’ என்பது போன்று பலரும் சமூக தளங்களில் தங்கள் ஆதங்கத்தை பதிவிட்டு வருகின்றனர்.

அதேசமயம், மீண்டும் சின்னத்தம்பியை காட்டுக்குள் விரட்டலாம் என்று எண்ணிய வனத்துறை, சலீம், மாரியப்பன் என்னும் இரு கும்கி யானைகளை கொண்டு வந்தது. ஆனால், இருவரையும் நட்பாக்கிக் கொண்ட சின்னத்தம்பி, இருவருடனும் விளையாடி வருகிறான். அந்த யானைகள், சின்னத்தம்பியை காட்டுக்குள் விரட்டும் என்று தெரியவில்லை.

இந்தச் சூழ்நிலையில், சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்ற எதிர்ப்புத் தெரிவித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

தற்போது, 5வது நாளாக கிருஷ்ணாபுரத்தில் சின்னத்தம்பி தங்கி இருக்கிறான்.

சின்னத்தம்பி யானையை கும்கியாக மாற்றுவது சிறந்ததா? அல்லது காட்டுக்குள் மீண்டும் விரட்டுவது சிறந்ததா என்பது குறித்து, ஓய்வுப் பெற்ற உதகை வனத்துறை மூத்த அதிகாரி பத்ரசாமியிடம் நாம் பேசினோம்.  அவர் கூறுகையில், “இப்போது உள்ள நிலைமைக்கு சின்னத்தம்பியின் அட்டகாசத்தை பொறுக்க முடியாமல், வேறு யாராவது அதை கொன்று விடுவதற்கு முன்பு, அதனை கும்கியாக மாற்றுவதுதான் சின்னத்தம்பியின் உயிருக்கும் நல்லது, கிராம மக்களுக்கும் நல்லது” என்கிறார்.

தொடர்ந்து, அவர் பேசுகையில், “சின்னத்தம்பியிடம் ஒரு பெரிய பிரச்சனை உள்ளது. அவன் தனியாக வந்து அட்டகாசம் செய்வதில்லை. கூட்டமாக மற்ற யானைகளையும் அழைத்து வந்து விடுகிறான். அவனை மீண்டும் அவன் குடும்பத்தோடு இணைய விட்டால், எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்று யாராலும் சொல்ல முடியாது. அங்கு, அவன் ஆண் யானை கூட்டத்தில் இணைந்தால் ரவுடியிசம் செய்வான். பெண் யானைகள் கூட்டத்தில் இணைந்தால் சேர்க்கையில் ஈடுபடுவான்.

அப்படி, ஆண் யானைகள் கூட்டத்துடன் இணைந்தால், அவன் மீண்டும் கிராமத்திற்குள் வரமாட்டான் என்று என்ன நிச்சயம்?. தனியாக வரும் யானையை சமாளிப்பதே கடினம். இதில், கூட்டமாக மற்ற யானைகளையும் அழைத்து வரும் சின்னத்தம்பியை எப்படி சமாளிக்க முடியும்?. அதனால் தான் அவனை கும்கியாக மாற்றலாம் என முடிவு எடுக்கப்பட்டது.

சின்னத்தம்பி எல்லா தகுதியும் உள்ள ஒரு யானை. Strength Full Animal-ஆக இருக்கிறான். அவனால், பெண் யானையுடன் சேர்க்கையில் ஈடுபட முடியும். திடகாத்திரமாகவும் இருக்கிறான்.

 யானையை கும்கி யானையாக எப்படி மாற்றுவீர்கள்?

மரங்களால் செய்யப்பட்ட கூண்டு ஒன்றை உருவாக்கி அதில் அந்த யானையை அடைப்போம். அதன்பின், மாவுத்து, காவடியை நியமிப்போம்.

‘மாவுத்து’ என்றால் யானைப்பாகன். ‘காவடி’ என்றால் பாகனின் உதவியாளர்.

முதலில் மாவுத்திடம் யானையை நெருங்கிப் பழக வைப்போம். வேளா வேளைக்கு மாவுத்து கையால் யானையை சாப்பிட வைப்போம். அந்த யானைக்கு என்ன உணவு பிடிக்குமோ, அதை மட்டுமே கொடுப்போம். ஒருக்கட்டத்தில், ‘நமக்கு இந்த இடம் தான் வாழத் தகுதியானது’… ‘இவர் தான் நம்மை நன்றாக பார்த்துக் கொள்கிறார்’ என்று யானை நினைக்கத் தொடங்கிவிடும்.

சாப்பாடு மட்டுமின்றி, பெண் யானையுடன் அதனை சேர்க்கையில் ஈடுபட வைப்போம். உணவு + சேர்க்கை என்று 30 – 40 நாட்களுக்கு இந்த முறை தொடரும்.

பிறகு கொஞ்சம் கொஞ்சமாக Human Touch-க்கு யானை அனுமதிக்கும். பாகன் மூலம் ‘தொடு உணர்வு’ பழக்கப்பட்டவுடன் மற்ற செய்கைகளை யானைக்கு பழக்குவோம்.

இதற்கென்றே, ‘குரும்பா’ மற்றும் ‘மலசர்’ என்ற மொழிகள் பேசும் இன மக்கள் உள்ளனர். அவர்கள் மூலம், மலையாளம் + தமிழ் + உருது கலந்த மொழியில், அந்த யானைக்கு அனைத்து தொடு உணர்வுகளும் கற்றுத்தரப்படும்.

இந்த பயிற்சிகளின் மூலமே, ஒரு வலிமையான ஆண் யானை கும்கியாக மாற்றப்படுகிறது.

திரும்பவும் சொல்கிறேன்… சின்னத்தம்பியின் குணத்திற்கு அவனை கும்கியாக மாற்றாவிட்டால், அவனை யாராவது நிச்சயம் கொன்றுவிடுவார்கள். அவன் இறப்பதை நாங்கள் பார்ப்பதை விட, கும்கியாக உயிருடன் எங்களுடன் இருப்பது எவ்வளவோ மேல்!” என்று முடித்தார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close