புவி வெப்பமடைதல், பருவநிலை மாற்றம் உள்ளிட்ட விவகாரங்களில் இனி பேச்சுவார்த்தைக்கே இடமில்லை செயல் தான் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி ஐ.நா. சபைக்கூட்டத்தில் தெரிவித்திருந்த நிலையில், அதை செயல்பாடாகவே நிகழ்த்திக்காட்டியுள்ளது மதுரை.
மக்கள், தங்களால் இயன்ற அளவு வளிமண்டலத்தில் மாசு ஏற்படுவதை தவிர்க்கும் பொருட்டும், அதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும், சர்வதேச பருவநிலை மாசு தடுப்பு வாரம், செப்டம்பர் 20ம் தேதி முதல் 27ம் தேதி வரை கொண்டாடப்பட்டு வருகிறது.
பொதுப்போக்குவரத்து பயன்பாட்டால் வெறிச்சோடி கிடக்கும் கல்லூரி வாகனநிறுத்தம்
சர்வதேச பருவநிலை மாசு தடுப்பு தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, மதுரையின் முன்னணி கல்லூரியான மதுரைக்கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள் உள்ளிட்டோர் இன்று ( செப்டம்பர் 23) தங்கள் சொந்த வாகனங்களுக்கு விடுமுறை அளித்து, பொதுப்போக்குவரத்தை பயன்படுத்தி, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக திகழ்ந்தனர்.
உலகின் ஒரு பகுதியிலோ அல்லது ஒரு சில பகுதிகளிலோ அல்லது உலகம் முழுவதுமோ தட்ப-வெப்ப நிலையில் ஏற்படும் மாற்றங்கள் கால அளவிலும், பரப்பளவிலும் வழக்கத்தை விட அதிகமாக மாறுபடுவதை பருவநிலை மாற்றம் என்கிறோம்.
புவி வெப்பமடைதல் என்பது மனிதனின் செயல்பாடுகளால் நிலப்பரப்பின் வெப்ப நிலை அதிகரிப்பதைக் குறிக்கும். பருவநிலை மாற்றம் என்பது புவி வெப்பமாதல் உள்ளிட்ட ஏனைய தட்ப – வெப்ப மாறுபாடுகளையும் அவற்றால் நிகழும் கிரீன் ஹவுஸ் வாயுக்களின் வெளியேற்றத்தையும் குறிக்கும் விரிந்த பொருளுடையது.
புவி வெப்பமடைதல் நிகழ்வில் மனிதனின் பங்கு அளப்பரியது. மனிதர்களால், கார்பன் டை ஆக்சைடு வாயுவை வெளியேற்றும் உபகரணங்களின் பயன்பாட்டை முழுவதும் தவிர்க்க இயலாது என்பதால், சிறுதுளி பெருவெள்ளம் என்ற பொன்மொழிக்கேற்ப, அவ்வகை வாகனங்களின் பயன்பாட்டை ஒருநாளாவது தவிர்த்து, பொதுபோக்குவரத்தை பயன்டுத்த வேண்டும் என்ற எண்ணம் மாணவர்களுக்கு ஏற்படுத்தும் வகையில், மதுரைக்கல்லூரி நிர்வாகம், தங்கள் கல்லூரியில் பயிலும் மாணவர்கள், பேராசிரியர்கள், ஊழியர்கள் உள்ளிட்ட அனைவரும், செப்டம்பர் 23ம் தேதி பொதுபோக்குரவத்தை பயன்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியது. மதுரைக்கல்லூரியின் இந்த நடவடிக்கை, வெற்றியும் பெற்றுள்ளது.
பருவநிலை மாசு தடுப்பு விவகாரத்தில், மதுரைக்கல்லூரியின் செயல்பாடு மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கி அனைவரின் பார்வைகளையம் தன்பக்கம் ஈர்த்துள்ளது.