குண்டர் சட்டத்தில் கைதாகிறார் சினிமா பைனான்சியர் போத்ரா?

கந்துவட்டி புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சினிமா பைனான்சியர் போத்ராவை குண்டர் சட்டத்தின் சிறையில் அடைக்க வாய்ப்புள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

கந்துவட்டி புகாரில் கைது செய்யப்பட்டுள்ள சினிமா பைனான்சியர் போத்ராவை குண்டர் சட்டத்தின் சிறையில் அடைக்க வாய்ப்புள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை சவுகார்பேட்டை, மின்ட் தெருவில் “போத்ரா பிரதர்ஸ்- ககன் ஜெம்ஸ் இன்டர்நேஷனல் டிரேடர்ஸ்” என்ற பெயரில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருபவர் முகுந்த்சந்த் போத்ரா. பிரபல சினிமா பைனான்சியர் மற்றும் வைர மதிப்பீட்டாளரான இவர், தயாரிப்பாளர்கள், நடிகர், நடிகைகள் உள்ளிட்ட திரைத்துறையினர், தொழிலதிபர்களுக்கு வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.

பிரபல தயாரிப்பாளர் கஸ்தூரி ராஜா ரூ.65 லட்சம் கடன் வாங்கி ஏமாற்றிவிட்டதாக கடந்த 2012-ம் ஆண்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, அதில் நடிகர் ரஜினிகாந்த் பெயரையும் சேர்த்து பரபரப்பை ஏற்படுத்தியவர் தான் இந்த முகுந்த்சந்த் போத்ரா. நடிகை ரோஜா மீதும் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார். வேந்தர் மூவீஸ் மதன் தலைமறைவாக இருந்தபோது, எஸ்ஆர்எம் நிறுவனர் பச்சமுத்து மீது பண மோசடி, கொலை மிரட்டல் வழக்குகளையும் போத்ரா தொடர்ந்துள்ளார்.

இவரைப் பற்றி சினிமாத் துறையினர் கூறுகையில், “பிரச்னையால் படத்தை வெளியிட முடியாமல் தயாரிப்பாளர்கள் தவிப்பதை தெரிந்து கொண்டு தானாக முன்வந்து அவர்களைச் சந்தித்துப் பேசி போத்ரா கடன் கொடுப்பார். அதற்கு சட்டரீதியாக உரிய ஆவணங்களை வாங்கிக் கொள்வார். தொடர்ந்து, படம் வெளியாவதற்கு சில நாட்களுக்கு முன்பு பணத்தைத் திருப்பிக் கேட்டு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து தயாரிப்பாளர்களுக்கு கடும் நெருக்கடி கொடுப்பார் போத்ரா. சிறிய மற்றும் பெரிய பட்ஜெட் தயாரிப்பாளர்கள், தொழிலதிபர்கள் என பல்வேறு தரப்பினரும் இவரது நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர்.” என்கிறார்கள்.

இந்நிலையில், தி.நகரை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் அளித்த புகாரின் பேரில் போத்ரா மற்றும் அவரது இரண்டு மகன்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். தொழிலதிபர் அளித்த புகாரில், போத்ராவிடம் வாங்கிய கடனை வட்டியுடன் செலுத்தி விட்டேன். ஆனாலும், ஆனால், 60 சதவீத வட்டி கட்டுமாறும், 10 நாட்களுக்கு ஒருமுறை கூட்டுவட்டி சேர்த்து ரூ.4 கோடியே 24 லட்சம் தருமாறும் முகுந்த்சந்த் போத்ரா மற்றும் அவரது மகன்கள் என்னை மிரட்டி வந்தனர் என கூறப்பட்டுள்ளது.

மேலும், எனக்குச் சொந்தமான ஹோட்டல் அமைந்துள்ள இடம் மற்றும் கட்டடத்தை வாங்க உத்தேசித்து விற்பனை ஒப்பந்த பத்திரம் போட்டு அதற்கு 98 சதவீதம் பணம் கொடுத்து விட்டதாகவும், இதை மீறி இடத்தை வாங்குவோர் ஆவணங்கள் செல்லு படியாகாது என்றும் பத்திரிகை விளம்பரம் கொடுத்து மிரட்டினர். அவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த புகார் மனுவில் கூறப்பட்டிருந்தது.

இதன் மீது விசாரணை நடத்திய போலீசார், இந்திய தண்டனைச் சட்டப்பிரிவு, 420, 465, 467, 468, 471, 506(2), கந்துவட்டி தடுப்புச் சட்டம் (2003) உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போத்ரா மற்றும் அவரது இரண்டு மகன்களை கைது செய்தனர்.

போத்ரா மற்றும் அவரது இரண்டு மகன்களையும் 5 நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ள மத்திய குற்றப்பிரிவு போலீசார், இதற்காக ஓரிரு நாளில் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவும் திட்டமிட்டுள்ளனர்.

அதேசமயம், போத்ரா கைது செய்யப்பட்டதை தொடர்ந்து, சினிமா தயாரிப்பாளர்களும், தொழிலதிபர்களும் அவர் மீது தொடர்ந்து புகார்கள் கொடுத்து வருகின்றனர் என மத்திய குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்துள்ளதால், அவர் மீது குண்டர் சட்டம் பாய வாய்ப்புள்ளது எனவும் காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

×Close
×Close